மூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு.
=================================================================
தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள் Read more...
..... Patients, Problems, Routine Practices, Stories, Gossips, Camps, Campaigns, Outbreaks, Innovations and what not !!! ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்
Bachelor of Rural Medicine and Surgery பற்றி
Dr Ketan Desai, president of the Medical Council of India சொல்லுவது
மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதத் தேவையில்லை.அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். கிராமத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும். தகுதிப் பட்டியல் இந்தப் பள்ளி மாணவர்களிடமிருந்தே தயாரிக்கப் படும். பெருநகரங்களில் படித்த மாணவர்கள்சேர்த்துக் கொள்ள படமாட்டார்கள்.
முதல் ஆண்டில் இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெறுவார்கள். இரண்டாம் ஆண்டில் மாவட்ட மருத்துவ மனைகளிலும், மூன்றாம் ஆண்டுகளில் மூன்றாம் நிலை கவனிப்பு மருத்துவமனைகளிலும் பயிற்சி பெறுவார்கள். முதலில் ஐம்பது மாணவர்களைக் கொண்டு துவக்கப் படும்.
முதலில் 50,000க்கும் குறைவான மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயிற்சி செய்ய ( தொழில் செய்ய) அனுமதிக்கப் படுவார்கள். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இவர்களுக்கு முதுகலைப் படிப்புக்கு அனுமதிக்க கிடையாது. பின்னர் இவர்கள் பெரு நகரங்களுக்கு சென்றுவிடலாம்
மற்ற மருத்துவர்களைப் போல முதுகலைப் படிப்புக்கு அனுமதிக்கப் படுவார்கள்.
மூலம் http://readerszone.com/india/what-is-bachelor-of-rural-medicine-and-surgery.html
==========================================================================
இதைப் படிக்கும் போது உங்களுக்கே சில கேள்விகள் தோன்றலாம். இதைவிடச் சிறந்த தீர்வு தமிழக அரசு மூலம் நடந்துவருகிறது. மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி துவங்கி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சில மருத்துவ கல்லூரிகள் அரசின் சார்பில் துவக்கப் பட்டு வருகின்றன. அங்கு முழுவதும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவருகிறார்கள். அனைவரின் மதிப்பெண்களும் பொதுப் பார்வைக்கு வைக்கப் படுகின்றன. தகுதிவாய்ந்த நபர்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது.படிப்புச் செலவு எனபது மிக குறைவான செலவு வைக்கும் தனியார் பள்ளியில் ஆகும் செலவைவிட குறைவு. அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஸ்காலர்ஷிப் பெற தகுதி உள்ளவர்களாக வேறு இருப்பார்கள்.
===================================================================
மீண்டும் B R M S பற்றி யோசிப்போம்.
// அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் //
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் மூன்று முதல் ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்களா? இவ்வாறு தேசிய அளவில் முக்கியப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? அல்லது பரிந்துரை செய்யவாவது தகுதியோடு இருப்பார்களா?
உதாரணமாக ஐ.ஏ.எஸ் படிக்க ஊக்கப் படுத்துவது வழிகாட்டுவது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஐ.ஏ.எஸ் மாணவரைத் தேர்ந்தெடுக்க அந்த மாவட்ட ஆட்சித்த்லைவர் மட்டும் போதுமா?
=================================================================
//கிராமத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும்.//
முன்னுரிமை என்றால் அடுத்த உரிமை யாருக்கு?
=================================================================
//பெருநகரங்களில் படித்த மாணவர்கள்சேர்த்துக் கொள்ள படமாட்டார்கள்.
//The merit list will be drawn from these schools and not from metropolitan cities.//
பழனி, தேனி மாணவர்களை என்ன செய்வது?
=====================================================
//For five years after finishing training, these doctors will practice only in areas which have a population of less than 50,000.//
//முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 50,000க்கும் குறைவான மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயிற்சி செய்ய ( தொழில் செய்ய) அனுமதிக்கப் படுவார்கள்//
பழனி நகராட்சிக்கு அடுத்துள்ள கிராம பஞ்சாயத்தில் மக்கள் தொகை 50000க்குள் தான் இருக்கும். அங்கேதான் பழனியின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள், முக்கியப் பள்ளிகள் பழனி கோவில் பக்தர்கள் குவியும் இடங்கள் உள்ளன. இந்த நபர் அங்கே போய் அமர்ந்து கொண்டால் என்ன செய்வது. சென்னைக்கு அருகில் நாற்கரச் சாலையில் இதேபோல பல கிராமப் பஞ்சாய்த்துக்கள் இருக்க வாய்ப்பு உள்ளன.
============================================================
//"For five years, they will not be eligible for post-graduate courses. After that, they will be at par with other doctors. Then they can go to the city and pursue PG studies//
ஐந்து வருடம் பலன் தருவதற்கு இவ்வளவு கூத்தா? இதைவிட தமிழக அரசின் முயற்சி மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி மிகச் சிறப்பு வாய்ந்தது.
தவிரவும் பி.ஆர். எம். எஸ் மூலமாக பின் வாசல் வழியாக சிறப்பு மருத்துவரை மிகச் சுலபமாக உருவாக்கிவிடலாம்.
தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்
உலகின் மிகப் பெரிய் ஜனநாயக நாடான இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து கிண்டிருக்கின்றன. ஓட்டுப் போட வேண்டும். என்றும் ஓட்டளிக்கவிரும்பவில்லையென்றால் 49-0 பயன்படுத்த வேண்டும் என்றும் படித்தவர்கள் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்து மக்களும் தங்களுக்கு யார் மிகவும் தோதானவர்கள் என்பதைப் பார்த்து ஓட்டளித்துவிடுகிறார்கள். இந்த நாட்டில் இந்திய பாராளுமன்ற தேர்தலைவிட மிகப் பெரிய ஒரு நிகழ்வு மிகப் பெரிய திட்டமிடுதலுடன் கொஞ்சமும் தவறு நிகழாமல் கட்டுக் கோப்புடன் நடக்கும் ஒரு நிகழ்வு பற்றித்தான் இங்கு பதிய விரும்புகிறேன்.
அதுதான் போலியோ சொட்டு மருந்து முகாம். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு இருமுறை ஒரே நாளில் கொடுக்கப் படுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் கொடுக்கப் படுகிறது. போலியோ நோய் காணப் படும் ஒரு சில மாநிலங்களில் கூடுதலாக இரண்டு முறை என நான்கு முறை கொடுக்கப் படுகிறது.
தமிழகத்தில் இதற்கான ஏற்பாட்டை தமிழக சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. களத்தில் செயல்படுத்துபவர்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் குழந்தை வளர்ச்சித்திட்டத்தைச் சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் இதில் களம் இறங்குகின்றனர்.
பயனாளிகள் எண்ணிக்கையை முதலிலேயே கணக்கெடுத்து ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு மருந்துகள் தேவைப் படும் என்ற உத்தேசக் கண்க்குப் போட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைத்துக் கொள்ளப் படுகின்றன. மருந்து வைக்கப் படவேண்டிய வெப்பநிலை(குளிர்நிலை) சரியான அளவில் காப்பதற்காக குளிர்சங்கிலி குளிர்பதனிகள் பயன்படுத்தப் படுகின்றன. அந்த இடங்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப் படுகின்றன. தவிர்க்க முடியாத சூழலில் மிந்தடை ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மற்றொரு சுகாதார நிலையத்திற்கு போலியோ சொட்டு மருந்துகள் இடமாற்றம் செய்யப் படுகின்றன.
சொட்டு மருந்து கொடுக்கும் அலுவலர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. குழந்தைகளின் அலைச்சலைத்தடுப்பதற்காக நூறு குழந்தைகளுக்கு ஒரு பூத் என்ற அளவிலும் குழந்தைகள் குறைவாக இருந்தால் கூட ஒரு கிராமத்திற்கு ஒரு சொட்டு மருந்து நிலையமும் அமைக்கப் படுகின்றன. சில கிராமங்களில் மூன்று நிலையங்கள் கூட அமைக்கப் படுவது உண்டு. ஒவ்வொரு மருந்து குப்பியிலும் கண்காணிப்பான் இணைக்கப் பட்டுள்ளது. அதில் ஏற்படும் நிறமாறுதல்களைக் கொண்டு மருந்தின் தனமையை உணரமுடியும்.
இந்த நிலையங்களில் ஒரு கூடுதல் வசதியும் உண்டு. எந்த குழந்தை எந்த சொட்டு மருந்து நிலையத்தில் வேண்டுமானாலும் மருந்து கொடுத்துக் கொள்ளலாம். மறுப்பு ஏதும் இல்லாமல் கொடுத்துவிடுவார்கள் . குழந்தையின் இடது கைச் சுட்டு விரலில் அடையாளமை வைத்துவிடுவார்கள்.
அதிகாலை ஏழுமணி அளவில் அனைத்து சொட்டு மருந்து நிலையங்களிலும் மருந்துகள் சென்றடையும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கும். ஏழுமணிக்கு சொட்டுமருந்துகள் அதற்குரிய குளிர்பதன பெட்டியில் வைத்து அந்த நிலையங்களைச் சென்றடைந்த உடன் மருந்துகள் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெரும்பாலும் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும்குளிர்நிலவும். இருந்தாலும் அலுவலர்கள் சரியாக ஏழுமணிக்கு மருந்து கொடுக்கும் பணியைத் துவக்கிவிடுவார்கள்.
மதியத்திற்குப் பிறகு சொட்டுமருந்து நிலையத்தில் இருக்கும் பணியாளர்களில் இருவர் அவர்களுக்குரிய பகுதிக்குள் சென்று ஏதேனும் குழந்தைகள் விடுபட்டி இருந்தால் அழைத்துவரும் பணியினைச் செய்வார்கள்.வெளியூரிலிருந்து வந்த குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுவார்கள்.
பொதுவாக முதல் நாள் அன்றே அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுவார்கள். அடுத்த நாளில் இந்தப் பணியாளர்கள் ஊருக்குள் சென்று ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுக்கப் பட்டுள்ளதா என்று விசாரிப்பார்கள். எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் விடுபட்டு இருந்தால் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கமுடியாத சூழலில் அந்த வீட்டில் xகுறியிட்டுவருவார்கள். கொடுக்கப் பட்ட வீடுகளில் Pகுறியிட்டு வரிசை எண் சொடுத்து வருவார்கள். அப்படி x குறியிட்ட வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க மருத்துவக்குழு வந்து கொடுப்பார்கள். மறுப்பவர்களுக்குத் தகுந்த விளக்கம் கொடுத்து அவசியத்தை உணரவைத்து சொட்டுமருந்து கொடுத்து விடுவார்கள்.
பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் தனது கண்காணிப்பு பணியினைத் தொடர்வார். அவர் பத்து வீடுகளுக்கு ஒரு வீடு வீதம் சென்று கதவில் குறிப்பிட்டு இருக்கும் P மற்றும் அனைத்து x குறியீடுகளையும் ஆய்வு செய்வார். வழியில் தென்படும் அனைத்து குழந்தைகளையும் கண்காணித்து மருந்து கொடுக்கப் பட்டுள்ளதா மற்றும் விரலில் மை வைக்கப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார். ( நம்புங்கள் மருத்துவர் கிராமங்களில் இறங்கி ஒவ்வொரு தெருவிலும் நடந்து சென்றுதான் இந்தப் பணியினைச் செய்வார்).
இவரது பணியினை வட்டார, மாவட்ட, மாநில அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். அனைவரது குறிக்கோளும் அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் மருந்து கொடுக்கப் பட வேண்டும் என்பதே.. அப்போது தானே போலியோ என்ற இளம்பிள்ளைவாதம் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.
========================================================
சென்ற ஆண்டுவரை எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் இந்த முகாம்கள் நடை பெற்று வந்தன. இளம்பிள்ளை வாதமும் ஏறக்குறைய தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்கப் பட்டுவிட்டது. கூடிய விரைவில் இந்தியாவிலிருந்தே விரட்டி அடிக்கப் படும் சூழல் இன்று இருக்கிறது.
சென்ற டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வதந்தியால் ஒரு அதிபயங்கர பதட்டம் ஏற்பட்டது. குழந்தைகளைப் பெற்றவர்கள் குழந்தைகளைத்தூக்கிக் கொண்டு அருகிலுள்ள நிலையங்களுக்கு பறந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளவர்கள் பல இடங்களில் கடும் சொற்களால் அர்ச்சனை செய்யப் பட்டும் சில இடங்களில் தாக்குதல்களும் கூட நடைபெற்றன.பெரும்பாலான இடங்களில் காவலர்களின் துணையோடுதான் பணியாளர்களை மீட்க முடிந்தது.( ஒரு இடத்தில் பெட்ரோல் கேனுடன் ஒரு நபர் வந்து என் குழந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் உங்களைக் கொழுத்திவிடுவேன் என்ற மிரட்டலுடன் நின்று கொண்டார். பணியாளர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பது தெரியாமல் அந்த நபரின் குழந்தை அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தது.)
மறுநாள் நாங்கள் களப்பணிக்குச் சென்ற போது மக்கள் ஓரளவு தெளிவடைந்து இருந்தனர். பெரும்பாலானோர் முதல் நாள் நடைபெற்ற சம்பவங்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் பாதிக்கப் பட்ட பணியாளர்களை களத்தினுள் இறக்குவது என்பது மிகப் பெரிய சவாலாக அமைந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவே சில மாதங்களானது. நேற்றுவரை தங்களிடம் மிக மரியாதையுடன் நடந்து கொண்டிருந்த மக்கள் ஒரு வதந்தியை நம்பி மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்திருந்தது. ஒரு சிலர்தான் தரக்குறைவாக நடந்து கொண்டாலும் மற்றவர்கள் அதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதும் அவர்களால் ஜீரணீக்க முடியவில்லை. அந்த அதிர்ச்சி நிலையில் இருந்தவர்களை உடன் வைத்துக் கொண்டு மற்ற பணியாளர்களை வைத்து முகாமினை நடத்தி முடிக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டோம்.
அடுத்த பிப்ரவரி மாதத்தில் அடுத்த முகாம் நடைபெற்றது. அதற்கான பிரச்சார நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒருமாத கால அளவில் ஈடுபட்டிருந்தோம். மக்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோது மக்கள் ஓரளவு தெளிவாக இருப்பதாகவே பட்டது.
இருந்தாலும் சொட்டுமருந்து முகாம் நடைபெற்றபோது ஒரு அதிர்ச்சி எங்களுக்குக் காத்திருந்தது. வழக்கமாக பதினொரு மணியளவில் 90சதவீதம் குழந்தைகளுக்கு மருந்து கள் கொடுக்கப் பட்டிருக்கும். ஆனால் அன்று மிகக்குறைந்த அளவு மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது. மக்களை சந்தித்து பேசியதில் கொடுத்துவிடுகிறோம் என்ற பதிலே கிடைத்தது. இருந்தாலும் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்ததில் ஒரு உண்மை வெளிப்பட்டது. அதாவது காலையில் மருந்து கொடுத்த குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்தபின்னர்தான் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற என்ற எண்ணத்தில் பெரும்பாலோனோர் இருந்திருக்கின்றனர். ஒருவழியாக பெரும்பாலான குழந்தைகளுக்கு அன்று மாலை 5 மணிக்குள் கொடுத்து முடித்தோம். பிற்கு களத்தினுள் ஒருவாரகாலம் கடும் முயற்சிக்கு பின்னர் அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுத்தோம்.
இப்போது சொல்லுங்கள் பாராளுமன்ற தேர்தலைவிட இளம்பிள்ளைவாதச் சொட்டு மருந்து கொடுக்கும் பணி பெரியதுதானே..
=============================================================
பிப்ரவரி மாத முகாமில் அனைத்து குழந்தைகளுக்கும் மருந்து கொடுக்க நாங்கள் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் வழக்கம்போல முற்பகலிலேயே பெரும்பகுதியை கொடுத்துவிட்டதாக சொன்னார். எப்படி நடத்தினீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..
வதந்தியைப் பரப்புபவர்களுக்கு சிறைத்தண்டனை என்பதை பெரிய அளவில் எழுதி வைத்திருந்தார். (நாங்களும் எழுதி வைத்திருந்தோம். அவர் மிகப் பெரிய அளவில் வைத்திருக்கிறார்) அப்படி மருந்தினைப் பற்றி அவதூறு பேச்சு பேசுபவர்களை உடனடியாக காவலர்களிடம் ஒப்படைத்தும் விட்டார்.
அரசு கொடுக்கும் மருந்து கொடுக்கவிருப்பம் இல்லாதவர்களிடம் இந்த மருந்து கொடுக்காவிட்டால் இளம்பிள்ளைவாதம் வரும்வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்தால் அரசிடமிருந்து எந்த உதவிகளும் கிடைக்காது என்று எழுதப்பட்ட காகிதத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டால் பணியாளர்கள் யாரும் வந்து சொட்டுமருந்து போடுமாறு தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று கூறிவிட்டார்.ஆரம்பத்தில் கையெழுத்துப் போட்ட ஒரு சிலர்கூட மதியம் ஆனபிற்கு மருந்தினைக் கொடுத்துவிட்டோம் அந்த காகிதத்தினைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர். அதை நண்பர் அழித்தும் விட்டார்.
அவரது அணுகுமுறையின் காரணமாக அங்கு மற்ற இடங்களைவிட அங்கு ஆர்வமாக மக்கள் மருந்துகளை கொடுத்துவிட்டனர்.
==================================
எக்ஸ்பிரஸ் இளமதி. எந்த வயதில் அந்தப் பெயர் அவளுக்கு வந்தது எப்படி என்று அவளுக்கே தெரியாது. இன்று அந்த மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவராக வந்து பணியில் அமர்ந்துவிட்டாள்ர்.
அவளுக்கு வேகம் என்பது இயல்பாக அமைந்த விஷயம். பள்ளியில் படிக்கும்போதே மிக வேகமாக ஓடுவாள். கல்லூரி காலத்தில் கூட கலப்புத் தொடர் ஓட்டத்தில் உடன் ஓடிய ஆண்களைவிட படுவேகத்தில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவள் அவள். பள்ளியில் அவள் படிக்கும் வேகத்திற்கு டபுள் புரமோசம் கொடுக்கலாம் என்று கூட சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஏனோ கொடுக்கப் படவில்லை. அவளது தந்தைதான் அந்த வயதொத்த குழந்தைகளுடன் படிக்கட்டும் என்று கூறிவிட்டதாக சொல்லுவார்கள்.
அவளது பாட்டி கூட எக்ஸ்பிரஸ் என்றுதான் கூப்பிடுவார்.
இன்று மருத்துவரான பின்பு கூட அந்த நிலை நீடிக்கிறது. மற்றவர்கள் ஒரு அறுவைசிகிச்சை செய்யும் நேரத்தில் இவர் இரண்டு அறுவை செய்து விடுவார். குடும்ப நல சிகிச்சைகள் எல்லாம். மற்றவர் ஒன்று செய்யும் நேரத்தில் இவர் ஐந்து பேர் வரை செய்வார். படுவேகம்.
எம்.பி.பிஎஸ் சேரும்போது கூட பலரும் இம்ப்ப்ரூவ் மெண்ட் செய்து உள்ளே நுழைந்த போது இவர் நேரடியாக தேர்வு செய்யப் பட்டார். இவர் எம்.பி.பி.எஸ் படித்த கால கட்டத்தில் அரசுத்துறைக்கு மருத்துவர் தேர்வு என்பதே கிடையாது. ஆனால் இவள் முடித்த கால கட்டத்தில் நூறு பேரை தேர்வு செய்தார்கள். அதில் அவளும் ஒருத்தி. (கடந்த சில ஆண்டுகளில் நாலாயிரம் மருத்துவர்களுக்கு மேல் அரசுப் பணியில் நியமணம் செய்யப் பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு காலம்) மிக குறைந்த வயதில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக அமைந்த போது அவரது வேகத்தை கண்டு அவரது நண்பர் கூட்டமே அதிர்ந்தது.
மூன்றாண்டுகள் அங்கே பணி செய்த போது அவரது வேகம் கண்டு துறை சார்ந்தவர்களும் சரி. பொது மக்களும் சரி அதிர்ந்து தான் போனார்கள். பேருந்து நிலையத்திலிருந்து மிக வேகமாக நடந்து செல்வார். புற நோயாளிகள் பிரிவு, சிறப்பு மருத்துவம் போன்ற அனைத்தையும் மிக வேகமாகச் செய்வார். களப்பணிகளிலும் அவர் வந்தால் அனல் பறக்கும்.
கட்டாய கிராமப் புற பணிக்காலமாக மூன்று ஆண்டுகளை முடித்த உடனயே அவருக்கு மேல்படிப்பில் இடம் கிடைத்தது. இவ்வளவு தூரம் கிராமத்தில் கடும் உழைப்பில் நேரம் செலுத்தி இருந்தவருக்கு தேர்வில் முக்கிய இடம் கிடைத்ததில் எல்லோருமே அசந்துதான் போனார்கள்.
அந்த எக்ஸ்பிரஸ் இளமதிதான் இன்று அதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகப்பேறு மருத்துவராக வந்திருக்கிறார். அவர் வந்த பின் அந்த நிலையத்தில் பிரசவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. தினமும் இரண்டு அறுவை சிகிச்சை யாவது செய்துவிடுவார். பெரும்பாலும் சுகப்பிரசவம்தான் முயற்சி செய்வார். இருந்தாலும் கூட நிறைய பிரசவங்கள் அவரது மருத்துவ மனைநோக்கி படையெடுத்து வருவதால் அவ்வாறு செய்துவந்தார்.எல்லைதாண்டி அடுத்த மாவட்டத்தில் இருந்த அருகில் உள்ள கிராமங்களிலிருந்து கூட அவர் பணி புரிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். அவரது தோழிகள் கூட அவரை கேலி செய்வதுண்டு. இப்படியே போனால் உன்ன ஆபரேசன் டாக்டர்ன்னே முடிவு செய்து விடுவார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் அவள் அசந்ததில்லை.
அவள் மகப்பேறு மருத்துவம் முடித்த உடனயே அவரது தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். அவரது ஜாதகம் கொடுக்கும்போதே அவரது தந்தையை பார்த்து அவரது பாட்டி சொன்னார். எம்ப்பேத்தி எக்ஸ்பிரஸ் இளமதிடா.., அவளுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் எல்லாம் நடக்கும். பாட்டி சொன்னது உண்மைதான் சில மாதங்களிலேயே அவளுக்கு திருமணம் நிச்சயமானது. அடுத்த மாதத்தில் அவருக்குத் திருமணம்.
அந்த நிலையில்தான் அன்று மகப்பேறு பிரிவில் பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை போன்ற முகத்துடன் ஒரு பெண்ணைப்பார்த்தார். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.., அவளது பெயர், ஊர் மற்றும் பரிசோதனைகள் முடித்துவிட்டு அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள். நீ சங்கீதாவுக்குச் சொந்தமா? பொதுவாகவே மருத்துவரை மிக மரியாதையோடு பார்க்கும் ஊர் அது. அதுவும் மிகச் சிறிய பெண்ணாக இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு பயத்திலோ, மரியாதையாலோ பேசவே தோன்றவில்லை. ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.. உங்க அக்காவா.., என்கிருக்கா? கூட வந்திருக்காளா...
படிக்கும்போது நாங்கெல்லாம் ஒரே கோஷ்டி. எனக்கு நிறைய கோலம் போட சொல்லிக் கொடுத்தவள் அவள்தான். மிகவும் மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தாள். கல்லூரியில் பல கோலப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியது நினைவுக்கு வந்தது.
மருத்துவரே விசாரித்ததால் அந்த பெண்மணியை மருத்துவர் பரிசோதனை அறைக்கு உள்ளே அனுமதித்தார்கள். அந்த சங்கீதா வந்தார்.
அம்மா நல்லாயிருக்கீங்களா? கொஞ்சம் மரியாதை , கொஞ்சம் பயம், கொஞ்சம் நெருக்கம், கொஞ்சம் கூச்சத்துடன் அந்த பெண்மணி மருத்துவரை விசாரித்தார்.
எம்பொண்ணுதாம்மா.., டவுன்ல கட்டி கொடுத்திருந்தது. தலைப்பிரசவத்துக்கு நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்திருக்கோம். நீங்க இருக்கீங்கல்ல.., அதுனால எங்களுக்கு ரொம்பவே தைரியம்மா!
ஏனுங்கம்மா.., நம்ம புள்ளைங்களும் டாக்டருக்குத்தான் படிக்கறாங்களா? சகஜமாக அந்த சங்கீதா அம்மையார் கேட்டார்.
எக்ஸ்பிரஸ் இளமதிக்கு எதுவோ நெஞ்சை அடைப்பது போல இருந்தது.
இது சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009க்காக எழுதப்பட்டது
தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்துங்கள்
அப்போது நான் பயிற்சி மாணவன். பயிற்சி மருத்துவர் என்றும் சொல்வார்கள். தேர்வில் தேர்ச்சி அடைந்து இந்திய மருத்துவ கழகத்தில் ( medical council of india ) பதிவும் செய்துவிட்டிருந்தோம். எந்த நாட்டில் எவ்வளவு பெரிய மருத்துவப் படிப்புகள் படித்திருந்தாலும் medical council of india பதிவு செய்திருக்கவில்லையென்றால் போலி மருத்துவராகவே கருதப் படுவார்.
தீபாவளிக்கு முதல்நாள். எலும்பு சிகிச்சைப் பிரிவில் பணி. எலும்பு சிகிச்சைப் பிரிவிலிருந்து விபத்து சிகிச்சைப் பகுதிக்கு அன்று எனக்கு 24 மணிநேர பணியாக அமைந்திருந்தது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மற்ற அனைத்து துறையினரும் கூடுதலாக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வது போல எங்களைப் போல சில துறைகள் முடியாது. அன்று எனக்கும் தீபாவளி அன்று விடுப்பு அனுமதித்து இருந்தார்கள். ஆனால் முதல் நாள் 24மணிநேர பணி. தீபாவளி காலையில் 8மணிஅளவில் விடுவிக்கப் படுவேன். அதற்குப் பிறகு புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து..., அதனால் விடுப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த விடுப்பு வேறொருவருக்கு வழங்கப் பட்டுவிட்டது.
நம்து ஊரில் எலுமிச்சை, அன்னாசி, பலாப் பழங்கள் கதை சொல்வார்களே அது போல இருந்திருந்தது. விபத்து சிகிச்சைப் பிரிவில் அன்றைய பொழுதில் பணிக்குச் சென்ற போது. என்னோடு அன்று பணியில் இருந்த முதுகலை பயிற்சி மருத்துவருக்கு மறுநாள் தலைதீபாவளி. அவரது அலகில் அவர் மட்டுமே முதுகலைப் பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த 24மணிநேரப் பணியினை அவரே ஏற்றுச் செய்ய வேண்டிய நிலை. அவரை ஒப்பு நோக்க நமது நிலை எவ்வளவோ பரவாயில்லை.
மாலை நேரத்தில் அவர் பணியிலிருந்த உதவிப் பேராசிரியரைச் சந்தித்தார். உடன் என்னையும் வைத்துக் கொண்டுதான் பேசினார். மறுநாள் தனக்கு தலைதீபாவளி என்பதால் கொஞ்சம் முன்னதாகவே திரும்ப அனுமதி கேட்டார். பயிற்சி நிறைவை நோக்கியுள்ள பயிற்சி மருத்துவர் மற்றும் உதவிப் பேராசியர் , செவிலியர்கள் என்று ஒரு முழுமையான அணி இருந்த காரணத்தால் உதவிப் பேராசியரும் அவருக்கு காலை 3 மணி அளவில் செல்ல அனுமதி அளித்தார். 3 மணிக்கு மேல் வரும் நோயாளிகளை முதுகலை பயிற்சி மருத்துவருக்குப் பதிலாக உதவிப் பேராசியரே கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.
இரவு நேரத்தில் உணவுக்காக கோயமுத்தூரின் மிக முக்கிய இடங்கள் எல்லாம் சென்றும் கூட உணவு என்பது மிகக் கடினமாகவே இருந்தது. பியூப்பில்'ச் பார்க் போன்ற மிகச் சில உணவகங்களே திற்ந்திருந்தன. மற்ற உணவங்கள் பெரும்பாலும் விடுப்பாக அமைந்திருந்தன. விடுதி உண்வகம் உட்பட..
சென்ற இடுகையில் போலி பாம்புக் கடி மருத்துவத்தைப் பற்றிப் பார்த்தோம். இந்த இடுகையில் போலிக் கருக்கலைப்பு வைத்தியத்தைப் பற்றிப் பார்ப்போம்.
போலி பாம்புகடி வைத்தியர் என்ற பெயர் பொருந்துவது போல கருக்கலைப்பு வைத்தியருக்கு உபயோகப் படுத்துவது என்பது பொருந்தாது. போலி பாம்புக் கடி வைத்தியர் பாம்புக் கடியில் விஷப் பாம்பினால் கடி பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல் இறக்க விட்டுவிடுகிறார் என்பதையும், விஷத்தால் துளிகூட பாதிக்கப் படாத மனிதரை காப்பாற்றி விடுகிறார் என்பதையும் எவ்வாறு அவருக்கு இது சாத்தியமாகிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்தோம். (ஏனோ தமிழ்மணம், தமிழீஷ் வாசகர்களிடம் பெருமளவு சென்றடையவில்லை)
ஆனால் போலிக் கருக்கலைப்பு வைத்தியர் என்பவர் கருக்கலைப்பினை செய்துவிடுகிறார். ஆனால் பாதுகாப்பில்லாமல் செய்கிறார். எனவே ஆபத்தான கருக்கலைப்பாளர் போன்ற பதங்களை உபயோகப் படுத்தலாமா என்று தோன்றுகிறது.
கருக்கலைப்பு என்பதை சில வகைகளாக பிரிக்க முடியும்.இது போலி கருக்கலைப்பு மருத்துவருக்காக தயாரிக்கப் பட்ட அட்டவணை.
1. கரு கர்ப்பப் பையில் ஒட்டும் முன் (முதல் சில நாட்கள்)
2.கரு கர்ப்பப்பையில் இடுப்பு எலும்பு தாண்டி வளரும் முன்(12 வாரங்கள் வரை)
3.கரு உயிர்பிடிக்கும் முன்(28வாரம் வரை)
4.உயிர்பிடித்தபின்( இந்த நிலையில் கலைப்பதை குறைப்பிரசவம் என்றே சொல்லலாம்)
சட்டபூர்வமான கருக்கலைப்பு என்பது 12 வாரங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. பெண்சிசுக்கள் கருக்கலைப்பைத் தடுப்பதற்காக பல நடைமுறைகள் தற்போது பின்பற்ற படுகின்றன.
முதல் சிலநாட்களில் கருக்கலைப்பு என்பது மாத்திரை மூலமாகவேச் செய்ய முடியும். அந்த மாத்திரையைக் கொடுக்கும் முன் கரு கர்ப்பப் பையில்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த ஸ்கேன் சோதனை மற்ற ஸ்கேன் சோதனைகளிலிருந்து சிறிது மாறு பட்டது. கரு கர்ப்பப்பையில் இல்லாமல் கருக்குழாய்களில் இருந்தால் குழாய் உடைந்து மரணம் சில மணிநேரங்களில் நிகழும் வாய்ப்பு இருக்கிறது.
மருத்துவர் கருவிகளை உபயோகப் படுத்தி கருக்கலைப்புச் செய்தல் சிலவார கர்ப்பங்களுக்கு உதவும். இது சுத்திகரிக்கப் பட்ட அறுவை அரங்குகளில் வைத்து மட்டுமே ஒரு வல்லுநரால் கருக்கலைப்பு செய்யப் பட வேண்டும். மயக்க மருந்து மருத்துவ நிபுநரும் துணைக்குத் தேவைப் படுவார். அதற்காக நவீன கருவிகள் உள்ளன. கருக் கலைப்பில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க பல பரிசோதனைகள் அவசியமாக உள்ளன. சில நேரங்களில் ரத்தம் கூட முனெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்க வேண்டியுள்ளது.
தரமற்ற கருவிகளையும் நோய் தொற்று ஏற்படக்கூடிய இடங்களிலும் வைத்து கருக்கலைப்பு செய்தால் கருப்பை ஓட்டை அல்லது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து நிகழ நேரலாம். இந்த நிலையில் ஏற்படும் நோய்தொற்று பெரும்பாலும் அடுத்த குழந்தை பாக்கியத்தையும் தடுத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.
இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் வல்லுநர்களின் அவசியத்திற்கும், அறுவை அரங்கு மற்றும் நவீனக் கருவிகள் மற்றும் மருந்துகளுக்கும் ஆகும் செலவு பெரும்பாலான கருக்கலைப்பு விரும்பிகளுக்கு அதிகமாகத் தோன்றுவதால் செலவு குறைந்த கருக்கலைப்பாளர்களிடம் செல்ல நேரிடுகிறது.
போலி கருக்கலைப்பு செய்பவர்கள் என்ன செய்கிறார்கள்?
கரு கர்ப்பப்பையில் ஒட்டும் முன் கருக்கலைப்பு செய்வது என்பது சுலபம். ஆனால் இதில் உள்ள ஒரு சிக்கலை நோக்கவேண்டும்
கரு, கர்ப்பப் பையில் இல்லாமல் கருக்குழாய் போன்று வேறிடத்தில் இருந்தால் கொடுக்கும் மருந்து அல்லது கலைக்கும் முறையே எமனாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
பல தேவைகளுக்காக கிடைக்கும் ஹார்மோன் மருந்துகளை அதிக அளவில் கொடுப்பதன் மூலம் ஹார்மோன் ஏற்றத் தாழ்வினால் கரு கர்ப்பையில் ஒட்டாத தன்மை ஏற்பட்டு கரு இழப்பானது உருவாகலாம். சில உணவுகள் வைட்டமின் ஏ, ஈ போன்றவைகளை மிக அதிக அளவில் கொடுப்பதால் உடலில் ஒரு சமச்சீரற்ற தன்மை உருவாக்கி கரு இழப்பினை உருவாக்குகிறார்கள்.
இதிலெல்லாம் பல சிக்கல்கள் இருந்தாலும் கருக் கலைப்புக்காக பொறுத்துக் கொள்கிறார்கள்.
கரு கர்ப்பப் பையில் ஒட்டியபின்
பொதுவாக 12 வாரம் வரையில்தான் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய முடியும். ஆனால் போலிகள் 40வாரம் வரை கூட கருக்கலைப்பு செய்வார்கள்.
(பெரும்பாலும் 40வாரத்திற்கு முன்பே குழந்தை முழு ஆரோக்கியமாக பிறந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்)(மொத்த கர்ப்ப காலம் 280 நாட்கள்)
போலிகளின் மருத்துவ முறைகள் மிக எளிமை யானவை. கிராமங்களில் இந்தப் போலிகள் வீட்டுக்கே வந்து வேலையைச் சுமுகமாக முடித்துக் கொடுத்துவிடுவார்கள்.
ஒரு சிலர் சில வேர்களை வைத்திருப்பார்கள் .சிலர் மகப்பேறு மருத்துவர்கள் வைத்திருப்பது போன்று சில கருவிகளையும் வைத்திருப்பார்கள்.
கருப்பையின் வாய்க்குள் வைத்திருக்கும் வேர்களை நுழைத்து விடுவார்கள். இது ஒன்றும் மிக கடினமான செயல் அல்ல. கொஞ்சம் பயிற்சி எடுத்தால் யாருமே கர்ப்பப்பை வாயினை தொட்டுப் பார்க்க முடியும். சற்று முரட்டுத் தனமாக இதை செய்து விட்டால் போதும்.
எந்த ஒரு வெளிப் பொருளையுமே நமது உடல் ஒத்துக் கொள்ளாது. வெளீயே தள்ளவே முயற்சி செய்யும். அந்த நிலையில் அது போலியால் நுழைக்கப் படும் பொருளினை வெளியே தள்ள உடல் மேற்கொள்ளும் முயற்சிகளால் கரு வெளியேற்றப் படும்
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்கள் காலில் ஒரு முள் குத்திவிட்டால் உள்ளே இருக்கும் முள் வெளியேற காலில் என்னென்ன செயல்கள் நடைபெறுகின்றன என்று யோசித்துப் பாருங்கள். சீல் கட்டி, நெரி கட்டி, காய்ச்சல் வந்து, வெறும் காலில் குத்திய முள் எடுக்கவே உடல் இவ்வளவு தற்காப்பு நடவடிக்கை எடுத்து இவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டால் கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் வெளிப் பொருட்கள் வெளியேற எவ்வளவு சிரமங்கள் ஏற்படும்.
ஆனால் கிராமங்களில் வீட்டில் உள்ள பிறருக்கு குறிப்பாக ஆண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை , புரிவதில்லை. கருக்கலைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த வேதனைகளை தாங்கிக் கொண்டே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இதை ஒத்துக் கொள்கிறார்கள்.
கரு முழுவதும் வெளியாகாமல் சில நேரங்களில் பிசிறு ஏதும் இருந்தால் அந்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு இருந்து கொண்டே இருக்கும். உதிர இழப்பில் அந்தப் பெண்மணி மிகவும் பலவீனமாகப் போய்விடுவார்.
அந்த நேரத்தில் தொற்றும் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால் தொற்றுக்கிருமிகளால் மிக மோசமான நிலைக்கு தள்ளப் படுகிறார்.
இது போன்ற தொற்றுக்களாலும், போலிகளின் செயலாலும் ஒரு கூடுதல் பலன் ஒன்று உண்டு. அது கர்ப்பப்பை மிக பலவீனமடைவதால் இனி கர்ப்பம் என்பதே இருக்காது என்பதே!
இதைக்கூட சில போலிகள் கூடுதல் தகுதிகளாக வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் கருக்கலைப்பு செய்து கொண்டால் எதிர்காலத்தில் கர்ப்பம் என்பதே இருக்காது என்று விளம்பரப் படுத்திக் கொண்டு இருப்பார்கள்.
போலிக் கருக்கலைப்பால் மிக பலவீனமான பெண் உடலுற்விற்கே தகுதி இல்லாமல் போனால் பிறகெப்படி கருவுறுவார்?
ஆனால் போலிகள் வீட்டுக்கே வந்து கருக்கலைப்பு செய்து விடுவதாலும் தொடர்சிகிச்சைக்காக வீட்டுக்கே வந்து செய்வதாலும் அவருக்கு நல்ல பெயரே கிடைக்கிறது.
கர்ப்பத்தின் பின்பகுதியில்
கர்ப்பப்பையின் வாயினுள் ஒரு வேற்றுப் பொருள் நுழையும் போது பனிக்குடம் உடைந்து போகும். பனிக் குடம் உடைந்தால் கண்டிப்பாக கர்ப்பப் பையில் இருப்பது வெளியேறியே தீரும். இது ஏறக்குறைய பிரசவம் போலத்தான். நன்கு வலியெடுத்து நடக்கும் பிரசவம் சில மணிநேரங்களில் முடிந்துவிடும் . ஒருசிலருக்கு மிகச் சீக்கிரமே நடந்துவிடும். ஆனால் இவ்வாறு கரு வளர்ச்சி அடையும் முன்னரே பனிக்குடம் உடைவதால் நடக்கும் நிகழ்வானது சில நேரங்களில் சில நாட்கள் கூட போக வாய்ப்புண்டு. கரு பெரும்பாலும் வயிற்றுக்குள் இறந்துவிடும். வயிற்றுக்குள் இறந்த பிண்டம் இருக்கும்போது அதனால் கூட ஒவ்வாமை வேறுவிதமாக ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் ரத்தம் உறையும் தண்மை இழந்து மரணம் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.
குழந்தை பாதி வெளீயேறி கையாள் இழுத்து அறுந்து அந்த நிகழ்வு தாங்காமல் தாய் மரணம் அடைந்த சம்பவங்கள் கூட பத்திரிக்கைகளில் வந்துள்ளன.
குழந்தை வெளியே வந்து சில துள்ளுதுள்ளி இறந்து போன சம்பவம் கூட நான் கேள்விப் பட்டதுண்டு.
பல நேரங்களில் ரணஜன்னி தடுப்பூசிகள் போடப் படுவதில்லை. ஒரு சில போலிகள் ரணஜன்னி தடுப்பூசி போட்டாலும் அந்த ஊசி சரியான வெப்பநிலையில் பராமரிக்க படுவதில்லை. நோய் தொற்றை தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் ப்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த சில மருந்துகளை அவர்கள் தினமும் வீட்டுக்கே வந்து போட்டுவிட்டாலும் அந்த மருந்துகள் பெரும்பாலும் அவர்கள் செய்யும் கடுமையான வேலைக்கு போதாத அளவில்தான் இருக்கிறது.
கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பு பற்றிய உண்மைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கின்றன. போலிகளால் ஆகும் மொத்த செலவு தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவு எல்லாம் ஏற்க்குறைய சரிசமமாகவே இருக்கும். ஆனால் துவக்கத்தில் மட்டும் மிகக்குறைந்த செலவு போன்று தோன்றும்.
தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கும் வழிமுறைகள் தெரியாத நிலையில் மக்கள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் வசதிகள்:
1.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக கருக்கலைப்பும் குடும்ப நல சிகிச்சையும் செய்யப் படுகின்றன.
2. காப்பர்-டி, மற்றும் நிரோத் போன்ற ஆணுறைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கிடைக்கின்றன. ஆணுறை மருத்துவமனையில் முக்கிய இடங்களில் தனி பெட்டிகளில் வைக்கப் பட்டுள்ளன. வேண்டியவர்கள் வேண்டுமளவு அவர்களாகவே எடுத்துப் போகலாம்.
3.எதிர்பாராத சூழலில் விபத்து போல நிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்து கர்ப்பம் ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால் கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கும் மாத்திரைகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. இவற்றை சம்பட்ட மருத்துவரை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த மாத்திரைகளை 72 மணிநேரத்திற்குள் உட்கொண்டால் கர்ப்பத்தை தடுத்துவிடலாம்.
தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்தவும்
அது ஒரு வியாழக் கிழமை, பள்ளிக் குழந்தைக்களுக்கான பரிசோதனைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அணியினர் தயாராகிக் கொண்டொருந்தனர். ஒவ்வொரு வியாழன் அன்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஒரு மருத்துவக் குழு அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்வார்கள். இதற்கான முன் பயணத்திட்டம் கல்வியாண்டு துவக்கத்திலெயே தயாரிக்கப் பட்டுவிடும். அதன் நகல் அந்தப் பள்ளிக்குமுதலியெயே கிடைத்துவிடும். ஆண்டு விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வியாழன்களிலும் இது நடந்து வரும். முதல் நாளே குழுவினர் சென்று குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை குறித்து வைத்துவிட்டனர். அடுத்த நாளில் சென்று குழந்தைகளுக்கான பரிசோதனைக்காக குழுவினர் சென்று கொண்டிருந்தனர். பரிசோதனை முடித்த உடன் குழந்தைகளுக்கான சுகாதாரக் கள்வியும் வழங்கப் படும். வளரிளம் பெண்களுக்கான சுகாதாரக் கல்வியும் வழங்கப் படும்.
அன்றைய திட்டப்படி செல்லவேண்டிய கிராமத்திற்கு பேருந்து வசதி அவ்வளவாகக் கிடையாது. எட்டுமணிக்கு செல்லும் பேருந்திலேயே கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர் சென்று விட்டனர். மருத்துவ அலுவலர் புறநோயாளிகள் பிரிவினைப் பார்த்துவிட்டு பள்ளிக் குழந்தைகளை பார்ப்பதற்காக கிளம்பினார். அந்த கிராமத்திற்குச் செல்லும் பிரிவில் இறங்கி பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கிருந்த மருந்துக் கடை உரிமையாளர், சார். பஸ் வர இன்னும் பத்து நிமிடம் ஆகும். அதுவரை கடையில் அமருங்கள் என்று அழைத்தார். மருத்துவரும் உள்ளே சென்று அமர்ந்தார். தவிர அந்தப் பகுதிக்கு அது ஒன்றுதான் மருந்துக் கடை.
வழக்கம்போல் தலைவலி மருந்து, ஹார்லிக்ஸ் வகை பானங்கள், மாட்டுக்கான மருந்துகள் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் வந்தார். ஒரு பெரிய காகிதத்தை எடுத்தார். அதில் மெட்ரனிடஜோல், அமாக்ஸிசிலின், சிப்ரோபிளாக்ஸின், பாரசட்டமால் மாத்திரைகள் கணிசமான அளவுக்கு குறிப்பிடப் பட்டிருந்தது. வந்தவரும் வாங்கிச் சென்றுவிட்டார்.
யாருக்குங்க இவ்ளோ மாத்திரை.
பக்கத்தில் சாமியார் ஒருத்தர் இருக்கார். அவருக்குத்தான்.
அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறார். தீராத வியாதியும் அவரிடம் வந்து மந்தரித்துச் சென்றால் உடனே சரியாகும் என்று சொல்வார்கள். பக்கத்து மாவட்டம், மாநிலங்களில் இருந்தாலெல்லாம் மக்கள் வருவார்களாம்.
பாவம் அவருக்கு பற்பல வியாதிகள் இருக்கும்போல மருத்துவர் வருத்தப் பட்டுக் கொண்டார்.
கடைக்காரர் சொன்னார். மருந்துகள் எல்லாம் அவருக்குத்தானுங்க.. ஆனால் அவருக்கு இல்லைங்க.....
???
இந்த மருந்தையெல்லாம் பொடிபண்ணி விபூதி(திருநீறு)யில் கல்ந்து வைச்சிருப்பாருங்க. அதை எல்லாம் பொட்டலம் போட்டு பூஜையில் வைத்திருப்பார். மக்கள் போய் கேட்டால் கொஞ்சம் நேரம் சம்பிரதாயங்கள் முடித்துவிட்டு விபூதி பொட்டலங்களைக் கொடுத்து இளநீர், பால், மோர் இப்படி எதிலாவது கலந்து கொடுக்க சொல்லுவார். இன்று அமாவாசை. பூசைக்கு நிறையப் பேர் வருவாங்க. அதற்குக்குத்தான் இவ்வளவும்..
GRRrrrrrr,
மருத்துவருக்கு மயக்கம் வராத குறைதான்.
© Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008
Back to TOP