Friday, October 16, 2009

தீபாவளியன்று உங்கள் கடமை

அப்போது நான் பயிற்சி மாணவன். பயிற்சி மருத்துவர் என்றும் சொல்வார்கள். தேர்வில் தேர்ச்சி அடைந்து இந்திய மருத்துவ கழகத்தில் ( medical council of india ) பதிவும் செய்துவிட்டிருந்தோம்.  எந்த நாட்டில் எவ்வளவு பெரிய மருத்துவப் படிப்புகள் படித்திருந்தாலும்  medical council of india பதிவு செய்திருக்கவில்லையென்றால் போலி மருத்துவராகவே கருதப் படுவார்.

தீபாவளிக்கு முதல்நாள். எலும்பு சிகிச்சைப் பிரிவில் பணி. எலும்பு சிகிச்சைப் பிரிவிலிருந்து விபத்து சிகிச்சைப் பகுதிக்கு அன்று எனக்கு 24 மணிநேர பணியாக அமைந்திருந்தது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மற்ற அனைத்து துறையினரும் கூடுதலாக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வது போல எங்களைப் போல சில துறைகள் முடியாது. அன்று எனக்கும் தீபாவளி அன்று விடுப்பு அனுமதித்து இருந்தார்கள். ஆனால் முதல் நாள் 24மணிநேர பணி. தீபாவளி காலையில் 8மணிஅளவில் விடுவிக்கப் படுவேன். அதற்குப் பிறகு புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து...,   அதனால் விடுப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த விடுப்பு வேறொருவருக்கு வழங்கப் பட்டுவிட்டது.

நம்து ஊரில் எலுமிச்சை, அன்னாசி, பலாப் பழங்கள் கதை சொல்வார்களே அது போல இருந்திருந்தது. விபத்து சிகிச்சைப் பிரிவில் அன்றைய பொழுதில் பணிக்குச் சென்ற போது. என்னோடு அன்று பணியில் இருந்த முதுகலை பயிற்சி மருத்துவருக்கு மறுநாள் தலைதீபாவளி. அவரது அலகில் அவர் மட்டுமே முதுகலைப் பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த 24மணிநேரப் பணியினை அவரே ஏற்றுச் செய்ய வேண்டிய நிலை.  அவரை ஒப்பு நோக்க நமது நிலை எவ்வளவோ பரவாயில்லை.

மாலை நேரத்தில் அவர் பணியிலிருந்த உதவிப் பேராசிரியரைச் சந்தித்தார். உடன் என்னையும் வைத்துக் கொண்டுதான் பேசினார். மறுநாள் தனக்கு தலைதீபாவளி என்பதால் கொஞ்சம் முன்னதாகவே திரும்ப அனுமதி கேட்டார். பயிற்சி நிறைவை நோக்கியுள்ள பயிற்சி மருத்துவர் மற்றும் உதவிப் பேராசியர் , செவிலியர்கள் என்று ஒரு முழுமையான அணி இருந்த காரணத்தால் உதவிப் பேராசியரும் அவருக்கு காலை 3 மணி அளவில் செல்ல அனுமதி அளித்தார். 3 மணிக்கு மேல் வரும் நோயாளிகளை முதுகலை பயிற்சி மருத்துவருக்குப் பதிலாக உதவிப் பேராசியரே கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.

இரவு நேரத்தில் உணவுக்காக கோயமுத்தூரின் மிக முக்கிய இடங்கள் எல்லாம் சென்றும் கூட உணவு என்பது மிகக் கடினமாகவே இருந்தது. பியூப்பில்'ச் பார்க் போன்ற மிகச் சில உணவகங்களே திற்ந்திருந்தன. மற்ற உணவங்கள் பெரும்பாலும் விடுப்பாக அமைந்திருந்தன. விடுதி உண்வகம் உட்பட..

பியூப்பில்'ஸ் பார்க்கில் சாப்பாட்டுக்காக காத்திருக்க மனமில்லாமல் ரொட்டித்துண்டுகளை வாங்கி அப்படியே விழுங்கிவிட்டு பணிக்கு திரும்பினோம்.  மருத்துவக் கல்லூரியில் நோயாளியைப் பார்ப்பதாக பெரும்பாலோனோர் வாங்குவதால் பன்ரொட்டிகள் தங்குதடையில்லாமல் கிடைக்கும்.

தீபாவளிக்கு முதல்நாள் இரவு பத்துமணிவரை பணி சராசரி அளவிலேயே வேலை இருந்தது. அதற்கடுத்து கொஞ்சம் பிஸி....,

குடித்துவிட்டு வண்டி ஓட்டிவிட்டு விழுந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தனர்.  விபத்துப் பதிவேடு, காவலர் அறிக்கை, மற்றும் நோயாளி பதிவேடு போன்றவைகளில் முதுகலை மருத்துவரும், காயங்களை சரிசெய்வது, தையல் போடுவது, போன்ற பணிகளை நானும், மற்றும் இன்னபிற வேலைகளை அவரவரும் செய்ய ஆரம்பித்தோம்.

மணி12ஐ நெருங்கும்போது கூட்டம் எல்லைமீர ஆரம்பித்தது. கூடுதல் மருத்துவர்களை அழைக்க விரும்பினோம். அழைத்தால் விடுப்பில் இருப்பவர்களின் திட்டுக்களை வாங்க வேண்டும் என்பதால் கூட்டத்தினை நாங்களே சமாளிக்கத் தீர்மாணித்தோம். முடிந்த அளவு மிக வேகமாக பணிகள் நடந்தன. அனைத்து பணிகளையும் உதவிப் பேராசிரியர் நேரடியாகக் கண்காணித்து எந்த தவறும் நேராமல் பார்த்துக் கொண்டிருந்தார். முதுகலை மருத்துவர் பயிற்சி மருத்துவர் தலைதீபாவளிக்காகச் சேலத்திற்குச் செல்ல வேண்டியவர்.

குறிப்பிட்ட கால கட்டத்தில் கூட்டம் குறையத் தொடங்கியது. எங்கள் பணிகளை நிறைவு செய்துவிட்டு, இருப்பிட செவிலியரை அழைத்தார் முதுகலை மருத்துவர். சிஸ்டர் நான் கொஞ்சம் முன்னாடியே புறப்படுகிறேன். கேஸ் வந்தால் தம்பிய பார்க்கச் சொல்லுங்க. கொஞ்சம் சிரமமான கேஸ் அப்படின்னா உதவிப் பேராசிரியர் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். அதனால் நான் புறப்படுகிறேன்.

அதற்கு செவிலியர்

சார் மணி இப்ப காலை 9,  என்னோட ரிலீவர் வந்து ஒருமணிநேரம் ஆச்சு. உங்க ரிலீவரும் எப்பவோ வந்துட்டாங்க , நீங்க பார்த்த கேஸ் லிஸ்ட் எல்லாம் ஒழுங்கு படுத்திக் கொடுத்தால் அவரவர் அடுத்த டூட்டி பார்ப்பவர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டுப் போய் கொண்டே இருக்கலாம். (அதாவது அவரது பணிநேரம் முடிந்தும் பிறகும் அவர் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அவரக்கு அடுத்த் பணிக்கு வருபவர் வந்துவிட்டதால் அவருக்கு நோயாளிகள் வருவது குறைந்திருக்கிறது)

என்று ஒரே போடாகப் போட்டார்.

அந்த முதுகலை பயிற்சி மருத்துவர் திருதிருவென்று விழித்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டு இருக்கிறது.

===================================================================

இந்த ஆண்டும் தீபாவளிக்கு முதல்நாள் அப்படித்தான். விடுப்பு விண்ணப்பம் கொடுத்த மருத்துவர், செவிலியர், மற்றும் பணியாளர்கள் அனைவரிடமும் ஒரு நாள் அரைநாள்தான் விடுப்புக் கொடுக்க முடியும் என்று கண்டிப்பாகச் சொல்லி அனைத்து நிலைகளிலும் பணீக்கு ஆள் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுவந்து விட்டேன்.

நீங்கள் தீபாவளி கொண்டாடுபவரா.., அப்படியென்றால் உங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு பணியில் இருப்பவர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லி அவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள். 

நீங்கள் தீபாவளி கொண்டாத நபர்களாக இருந்தால் இன்னும் வசதியாக போயிற்று. திராவிட, ஆரியக் கதைகளை விட்டு விடுங்கள். இன்று உங்களுக்காக தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு பணியில் உள்ள நபர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்களுடன் கொண்டாடுங்கள்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Sunday, October 4, 2009

சுலபமாய் கருக்கலைப்பு செய்ய..,

சென்ற இடுகையில் போலி பாம்புக் கடி மருத்துவத்தைப் பற்றிப் பார்த்தோம். இந்த இடுகையில் போலிக் கருக்கலைப்பு வைத்தியத்தைப் பற்றிப் பார்ப்போம்.

போலி பாம்புகடி வைத்தியர் என்ற பெயர் பொருந்துவது போல கருக்கலைப்பு வைத்தியருக்கு உபயோகப் படுத்துவது என்பது பொருந்தாது. போலி பாம்புக் கடி வைத்தியர் பாம்புக் கடியில் விஷப் பாம்பினால் கடி பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல் இறக்க விட்டுவிடுகிறார் என்பதையும், விஷத்தால் துளிகூட பாதிக்கப் படாத மனிதரை காப்பாற்றி விடுகிறார் என்பதையும் எவ்வாறு அவருக்கு இது சாத்தியமாகிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்தோம். (ஏனோ தமிழ்மணம், தமிழீஷ் வாசகர்களிடம் பெருமளவு சென்றடையவில்லை)


ஆனால் போலிக் கருக்கலைப்பு வைத்தியர் என்பவர் கருக்கலைப்பினை செய்துவிடுகிறார். ஆனால் பாதுகாப்பில்லாமல் செய்கிறார். எனவே ஆபத்தான கருக்கலைப்பாளர் போன்ற பதங்களை உபயோகப் படுத்தலாமா என்று தோன்றுகிறது.

கருக்கலைப்பு என்பதை சில வகைகளாக பிரிக்க முடியும்.இது போலி கருக்கலைப்பு மருத்துவருக்காக தயாரிக்கப் பட்ட அட்டவணை.
1. கரு கர்ப்பப் பையில் ஒட்டும் முன் (முதல் சில நாட்கள்)
2.கரு கர்ப்பப்பையில் இடுப்பு எலும்பு தாண்டி வளரும் முன்(12 வாரங்கள் வரை)
3.கரு உயிர்பிடிக்கும் முன்(28வாரம் வரை)
4.உயிர்பிடித்தபின்( இந்த நிலையில் கலைப்பதை குறைப்பிரசவம் என்றே சொல்லலாம்)

சட்டபூர்வமான கருக்கலைப்பு என்பது 12 வாரங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. பெண்சிசுக்கள் கருக்கலைப்பைத் தடுப்பதற்காக பல நடைமுறைகள் தற்போது பின்பற்ற படுகின்றன.

முதல் சிலநாட்களில் கருக்கலைப்பு என்பது மாத்திரை மூலமாகவேச் செய்ய முடியும். அந்த மாத்திரையைக் கொடுக்கும் முன் கரு கர்ப்பப் பையில்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த ஸ்கேன் சோதனை மற்ற ஸ்கேன் சோதனைகளிலிருந்து சிறிது மாறு பட்டது. கரு கர்ப்பப்பையில் இல்லாமல் கருக்குழாய்களில் இருந்தால் குழாய் உடைந்து மரணம் சில மணிநேரங்களில் நிகழும் வாய்ப்பு இருக்கிறது.



மருத்துவர் கருவிகளை உபயோகப் படுத்தி கருக்கலைப்புச் செய்தல் சிலவார கர்ப்பங்களுக்கு உதவும். இது சுத்திகரிக்கப் பட்ட அறுவை அரங்குகளில் வைத்து மட்டுமே ஒரு வல்லுநரால் கருக்கலைப்பு செய்யப் பட வேண்டும். மயக்க மருந்து மருத்துவ நிபுநரும் துணைக்குத் தேவைப் படுவார். அதற்காக நவீன கருவிகள் உள்ளன. கருக் கலைப்பில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க பல பரிசோதனைகள் அவசியமாக உள்ளன. சில நேரங்களில் ரத்தம் கூட முனெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்க வேண்டியுள்ளது.

தரமற்ற கருவிகளையும் நோய் தொற்று ஏற்படக்கூடிய இடங்களிலும் வைத்து கருக்கலைப்பு செய்தால் கருப்பை ஓட்டை அல்லது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து நிகழ நேரலாம். இந்த நிலையில் ஏற்படும் நோய்தொற்று பெரும்பாலும் அடுத்த குழந்தை பாக்கியத்தையும் தடுத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் வல்லுநர்களின் அவசியத்திற்கும், அறுவை அரங்கு மற்றும் நவீனக் கருவிகள் மற்றும் மருந்துகளுக்கும் ஆகும் செலவு பெரும்பாலான கருக்கலைப்பு விரும்பிகளுக்கு அதிகமாகத் தோன்றுவதால் செலவு குறைந்த கருக்கலைப்பாளர்களிடம் செல்ல நேரிடுகிறது.

போலி கருக்கலைப்பு செய்பவர்கள் என்ன செய்கிறார்கள்?

கரு கர்ப்பப்பையில் ஒட்டும் முன் கருக்கலைப்பு செய்வது என்பது சுலபம். ஆனால் இதில் உள்ள ஒரு சிக்கலை நோக்கவேண்டும்

கரு, கர்ப்பப் பையில் இல்லாமல் கருக்குழாய் போன்று வேறிடத்தில் இருந்தால் கொடுக்கும் மருந்து அல்லது கலைக்கும் முறையே எமனாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

பல தேவைகளுக்காக கிடைக்கும் ஹார்மோன் மருந்துகளை அதிக அளவில் கொடுப்பதன் மூலம் ஹார்மோன் ஏற்றத் தாழ்வினால் கரு கர்ப்பையில் ஒட்டாத தன்மை ஏற்பட்டு கரு இழப்பானது உருவாகலாம். சில உணவுகள் வைட்டமின் ஏ, ஈ போன்றவைகளை மிக அதிக அளவில் கொடுப்பதால் உடலில் ஒரு சமச்சீரற்ற தன்மை உருவாக்கி கரு இழப்பினை உருவாக்குகிறார்கள்.

இதிலெல்லாம் பல சிக்கல்கள் இருந்தாலும் கருக் கலைப்புக்காக பொறுத்துக் கொள்கிறார்கள்.

கரு கர்ப்பப் பையில் ஒட்டியபின்

பொதுவாக 12 வாரம் வரையில்தான் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய முடியும். ஆனால் போலிகள் 40வாரம் வரை கூட கருக்கலைப்பு செய்வார்கள்.
(பெரும்பாலும் 40வாரத்திற்கு முன்பே குழந்தை முழு ஆரோக்கியமாக பிறந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்)(மொத்த கர்ப்ப காலம் 280 நாட்கள்)

போலிகளின் மருத்துவ முறைகள் மிக எளிமை யானவை. கிராமங்களில் இந்தப் போலிகள் வீட்டுக்கே வந்து வேலையைச் சுமுகமாக முடித்துக் கொடுத்துவிடுவார்கள்.

ஒரு சிலர் சில வேர்களை வைத்திருப்பார்கள் .சிலர் மகப்பேறு மருத்துவர்கள் வைத்திருப்பது போன்று சில கருவிகளையும் வைத்திருப்பார்கள்.

கருப்பையின் வாய்க்குள் வைத்திருக்கும் வேர்களை நுழைத்து விடுவார்கள். இது ஒன்றும் மிக கடினமான செயல் அல்ல. கொஞ்சம் பயிற்சி எடுத்தால் யாருமே கர்ப்பப்பை வாயினை தொட்டுப் பார்க்க முடியும். சற்று முரட்டுத் தனமாக இதை செய்து விட்டால் போதும்.

எந்த ஒரு வெளிப் பொருளையுமே நமது உடல் ஒத்துக் கொள்ளாது. வெளீயே தள்ளவே முயற்சி செய்யும். அந்த நிலையில் அது போலியால் நுழைக்கப் படும் பொருளினை வெளியே தள்ள உடல் மேற்கொள்ளும் முயற்சிகளால் கரு வெளியேற்றப் படும்

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்கள் காலில் ஒரு முள் குத்திவிட்டால் உள்ளே இருக்கும் முள் வெளியேற காலில் என்னென்ன செயல்கள் நடைபெறுகின்றன என்று யோசித்துப் பாருங்கள். சீல் கட்டி, நெரி கட்டி, காய்ச்சல் வந்து, வெறும் காலில் குத்திய முள் எடுக்கவே உடல் இவ்வளவு தற்காப்பு நடவடிக்கை எடுத்து இவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டால் கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் வெளிப் பொருட்கள் வெளியேற எவ்வளவு சிரமங்கள் ஏற்படும்.

ஆனால் கிராமங்களில் வீட்டில் உள்ள பிறருக்கு குறிப்பாக ஆண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை , புரிவதில்லை. கருக்கலைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த வேதனைகளை தாங்கிக் கொண்டே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இதை ஒத்துக் கொள்கிறார்கள்.

கரு முழுவதும் வெளியாகாமல் சில நேரங்களில் பிசிறு ஏதும் இருந்தால் அந்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு இருந்து கொண்டே இருக்கும். உதிர இழப்பில் அந்தப் பெண்மணி மிகவும் பலவீனமாகப் போய்விடுவார்.

அந்த நேரத்தில் தொற்றும் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால் தொற்றுக்கிருமிகளால் மிக மோசமான நிலைக்கு தள்ளப் படுகிறார்.

இது போன்ற தொற்றுக்களாலும், போலிகளின் செயலாலும் ஒரு கூடுதல் பலன் ஒன்று உண்டு. அது கர்ப்பப்பை மிக பலவீனமடைவதால் இனி கர்ப்பம் என்பதே இருக்காது என்பதே!

இதைக்கூட சில போலிகள் கூடுதல் தகுதிகளாக வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் கருக்கலைப்பு செய்து கொண்டால் எதிர்காலத்தில் கர்ப்பம் என்பதே இருக்காது என்று விளம்பரப் படுத்திக் கொண்டு இருப்பார்கள்.

போலிக் கருக்கலைப்பால் மிக பலவீனமான பெண் உடலுற்விற்கே தகுதி இல்லாமல் போனால் பிறகெப்படி கருவுறுவார்?

ஆனால் போலிகள் வீட்டுக்கே வந்து கருக்கலைப்பு செய்து விடுவதாலும் தொடர்சிகிச்சைக்காக வீட்டுக்கே வந்து செய்வதாலும் அவருக்கு நல்ல பெயரே கிடைக்கிறது.

கர்ப்பத்தின் பின்பகுதியில்

கர்ப்பப்பையின் வாயினுள் ஒரு வேற்றுப் பொருள் நுழையும் போது பனிக்குடம் உடைந்து போகும். பனிக் குடம் உடைந்தால் கண்டிப்பாக கர்ப்பப் பையில் இருப்பது வெளியேறியே தீரும். இது ஏறக்குறைய பிரசவம் போலத்தான். நன்கு வலியெடுத்து நடக்கும் பிரசவம் சில மணிநேரங்களில் முடிந்துவிடும் . ஒருசிலருக்கு மிகச் சீக்கிரமே நடந்துவிடும். ஆனால் இவ்வாறு கரு வளர்ச்சி அடையும் முன்னரே பனிக்குடம் உடைவதால் நடக்கும் நிகழ்வானது சில நேரங்களில் சில நாட்கள் கூட போக வாய்ப்புண்டு. கரு பெரும்பாலும் வயிற்றுக்குள் இறந்துவிடும். வயிற்றுக்குள் இறந்த பிண்டம் இருக்கும்போது அதனால் கூட ஒவ்வாமை வேறுவிதமாக ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் ரத்தம் உறையும் தண்மை இழந்து மரணம் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.

குழந்தை பாதி வெளீயேறி கையாள் இழுத்து அறுந்து அந்த நிகழ்வு தாங்காமல் தாய் மரணம் அடைந்த சம்பவங்கள் கூட பத்திரிக்கைகளில் வந்துள்ளன.

குழந்தை வெளியே வந்து சில துள்ளுதுள்ளி இறந்து போன சம்பவம் கூட நான் கேள்விப் பட்டதுண்டு.

பல நேரங்களில் ரணஜன்னி தடுப்பூசிகள் போடப் படுவதில்லை. ஒரு சில போலிகள் ரணஜன்னி தடுப்பூசி போட்டாலும் அந்த ஊசி சரியான வெப்பநிலையில் பராமரிக்க படுவதில்லை. நோய் தொற்றை தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் ப்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த சில மருந்துகளை அவர்கள் தினமும் வீட்டுக்கே வந்து போட்டுவிட்டாலும் அந்த மருந்துகள் பெரும்பாலும் அவர்கள் செய்யும் கடுமையான வேலைக்கு போதாத அளவில்தான் இருக்கிறது.


கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பு பற்றிய உண்மைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கின்றன. போலிகளால் ஆகும் மொத்த செலவு தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவு எல்லாம் ஏற்க்குறைய சரிசமமாகவே இருக்கும். ஆனால் துவக்கத்தில் மட்டும் மிகக்குறைந்த செலவு போன்று தோன்றும்.

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கும் வழிமுறைகள் தெரியாத நிலையில் மக்கள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் வசதிகள்:

1.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக கருக்கலைப்பும் குடும்ப நல சிகிச்சையும் செய்யப் படுகின்றன.

2. காப்பர்-டி, மற்றும் நிரோத் போன்ற ஆணுறைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கிடைக்கின்றன. ஆணுறை மருத்துவமனையில் முக்கிய இடங்களில் தனி பெட்டிகளில் வைக்கப் பட்டுள்ளன. வேண்டியவர்கள் வேண்டுமளவு அவர்களாகவே எடுத்துப் போகலாம்.

3.எதிர்பாராத சூழலில் விபத்து போல நிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்து கர்ப்பம் ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால் கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கும் மாத்திரைகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. இவற்றை சம்பட்ட மருத்துவரை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த மாத்திரைகளை 72 மணிநேரத்திற்குள் உட்கொண்டால் கர்ப்பத்தை தடுத்துவிடலாம்.

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்தவும்

Read more...

Saturday, September 26, 2009

இதை இளநீரில் கலந்து குடி,அதை மோரில் கலந்து குடி.

அது ஒரு வியாழக் கிழமை, பள்ளிக் குழந்தைக்களுக்கான பரிசோதனைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அணியினர் தயாராகிக் கொண்டொருந்தனர். ஒவ்வொரு வியாழன் அன்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஒரு மருத்துவக் குழு அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்வார்கள். இதற்கான முன் பயணத்திட்டம் கல்வியாண்டு துவக்கத்திலெயே தயாரிக்கப் பட்டுவிடும். அதன் நகல் அந்தப் பள்ளிக்குமுதலியெயே கிடைத்துவிடும். ஆண்டு விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வியாழன்களிலும் இது நடந்து வரும். முதல் நாளே குழுவினர் சென்று குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை குறித்து வைத்துவிட்டனர். அடுத்த நாளில் சென்று குழந்தைகளுக்கான பரிசோதனைக்காக குழுவினர் சென்று கொண்டிருந்தனர். பரிசோதனை முடித்த உடன் குழந்தைகளுக்கான சுகாதாரக் கள்வியும் வழங்கப் படும். வளரிளம் பெண்களுக்கான சுகாதாரக் கல்வியும் வழங்கப் படும்.

அன்றைய திட்டப்படி செல்லவேண்டிய கிராமத்திற்கு பேருந்து வசதி அவ்வளவாகக் கிடையாது. எட்டுமணிக்கு செல்லும் பேருந்திலேயே கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர் சென்று விட்டனர். மருத்துவ அலுவலர் புறநோயாளிகள் பிரிவினைப் பார்த்துவிட்டு பள்ளிக் குழந்தைகளை பார்ப்பதற்காக கிளம்பினார். அந்த கிராமத்திற்குச் செல்லும் பிரிவில் இறங்கி பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கிருந்த மருந்துக் கடை உரிமையாளர், சார். பஸ் வர இன்னும் பத்து நிமிடம் ஆகும். அதுவரை கடையில் அமருங்கள் என்று அழைத்தார். மருத்துவரும் உள்ளே சென்று அமர்ந்தார். தவிர அந்தப் பகுதிக்கு அது ஒன்றுதான் மருந்துக் கடை.

வழக்கம்போல் தலைவலி மருந்து, ஹார்லிக்ஸ் வகை பானங்கள், மாட்டுக்கான மருந்துகள் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் வந்தார். ஒரு பெரிய காகிதத்தை எடுத்தார். அதில் மெட்ரனிடஜோல், அமாக்ஸிசிலின், சிப்ரோபிளாக்ஸின், பாரசட்டமால் மாத்திரைகள் கணிசமான அளவுக்கு குறிப்பிடப் பட்டிருந்தது. வந்தவரும் வாங்கிச் சென்றுவிட்டார்.

யாருக்குங்க இவ்ளோ மாத்திரை.

பக்கத்தில் சாமியார் ஒருத்தர் இருக்கார். அவருக்குத்தான்.

அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறார். தீராத வியாதியும் அவரிடம் வந்து மந்தரித்துச் சென்றால் உடனே சரியாகும் என்று சொல்வார்கள். பக்கத்து மாவட்டம், மாநிலங்களில் இருந்தாலெல்லாம் மக்கள் வருவார்களாம்.

பாவம் அவருக்கு பற்பல வியாதிகள் இருக்கும்போல மருத்துவர் வருத்தப் பட்டுக் கொண்டார்.

கடைக்காரர் சொன்னார். மருந்துகள் எல்லாம் அவருக்குத்தானுங்க.. ஆனால் அவருக்கு இல்லைங்க.....

???

இந்த மருந்தையெல்லாம் பொடிபண்ணி விபூதி(திருநீறு)யில் கல்ந்து வைச்சிருப்பாருங்க. அதை எல்லாம் பொட்டலம் போட்டு பூஜையில் வைத்திருப்பார். மக்கள் போய் கேட்டால் கொஞ்சம் நேரம் சம்பிரதாயங்கள் முடித்துவிட்டு விபூதி பொட்டலங்களைக் கொடுத்து இளநீர், பால், மோர் இப்படி எதிலாவது கலந்து கொடுக்க சொல்லுவார். இன்று அமாவாசை. பூசைக்கு நிறையப் பேர் வருவாங்க. அதற்குக்குத்தான் இவ்வளவும்..

GRRrrrrrr,
மருத்துவருக்கு மயக்கம் வராத குறைதான்.

Read more...

Saturday, August 15, 2009

சாமிக்கு ஆடுவெட்டுவது இப்படித்தான்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அந்த மருத்துவர் மாறுதல் வாங்கிக் கொண்டு வந்து பணியில் சேர்ந்தார். அந்தப் பேருந்து இறக்கிவிட்ட இடத்திலிருந்து பார்த்தார். ஊர் கண்ணில் தட்டுப் பட்டது. எப்படியும் ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.


நடந்து சென்று ஊரில் உள்ளவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விசாரித்தார். அது ஊரின் இன்னொரு பகுதியில் இருக்கிறதாம். நடந்து சென்று இடத்தை கண்டுபிடித்தார். எப்படியும் இன்னொரு ஒரு கிலோமீட்டர் நடந்து இருப்பார். பேருந்து வரும் நேரங்களை விசாரித்தார். ஒரேஒரு பேருந்து மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வழியாக பக்கத்துக்கு ஊருக்குச் செல்கிறதாம். அது வரும் நேரம் வேலை நேரத்திற்கு ஒவ்வாததாக அமைந்திருந்தது.

தினமும் மருத்துவர் பேருந்தில் வருவார். இறங்கி ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து பணிக்குச் சென்று திரும்பி வந்தார். இந்த சூழலில்தான் டரியல் பொன்னம்பலம் அறிமுகமாகிறார். உள்ளூரில் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் டரியல் பொன்னம்பலம். எப்போதும் புல்லட் வாகனத்தில்தான் இருப்பார். வாரத்தின் சில நாட்கள் அவர் மருத்துவரை அழைத்து வந்தார். சில வாரங்கள் கழித்து அவர் வரமுடியாத சூழலில் வேலை ஆட்கள் யாரையாவது அனுப்பி மருத்துவரை கொண்டுவந்து விடச் செய்வார். எதற்கு உங்களுக்கு வீண்சிரமம் என்று கேட்டபோது எங்கள் ஊருக்கு சேவை செய்ய வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தங்களது கடமை என்று கூறிவிட்டார். அதற்கு மேலும் மறுப்பதற்கு மருத்துவருக்கு மனம் இல்லை. இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டுமே.... சில மாதங்கள் இப்படியே சென்றது.


அடுத்த சில நாட்களில் வயதானவர்களுக்கு உதவித்தொகை வாங்க சிலரை அழைத்து வந்தார் டரியல் பொன்னம்பலம். நம்ம ஊர் தாத்தா பாட்டிகள்தான் சார். பாவம் யாரும் இல்லை. கொஞ்சம் போட்டுக் கொடுங்க சிபாரிசு செய்து வயது சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நகல்களில் சான்றொப்பம் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தார். நெருக்கமான நண்பர் அல்லவா.. மருத்துவர் சான்றிதழ்களை கொடுத்துக் கொண்டே வந்தார். சில நாட்கள் மட்டுமே அவர் வந்தார். பின்னர் அவரது வேலை ஆட்கள் யாராவது கூட்டி வருவார்கள். மருத்துவரும் போட்டுக் கொடுத்துக் கொண்டே வந்தார். நிலையத்திலும் தண்ணீர் பிரச்சனை, மின்சார பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் டரியல் பொன்னம்பலத்திடம் சொன்னால் உடனே ஆளனுப்பி செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த ஊரில் மக்கள் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே.. இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச இடங்களைவிட நம்ம நண்பர்கள் வேலை செய்யற இடங்களை விட ரொம்ப நல்ல ஊரா இருக்கிறதே.. மருத்துவர் மகிழ்ச்சியுடன் நாட்களை கடத்தி வந்தார்.

உள்ளூரில் ஒரு திருவிழா. டரியல் பொன்னம்பலம் அவர்கள் மருத்துவரை சாப்பாட்டுக்கு கூப்பிட்டு இருந்தார். நெருங்கிய நண்பர் ஆயிற்றே.. மருத்துவரும் சென்றார். சாப்பிட்டுவிட்டு இளைப்பாறிய போது டரியல் ஆரம்பித்தார். சார். உங்களால ஒரு காரியம் ஆகணுமே..

சொல்லுங்க செய்துவிடலாம். ஏதாவது பாட்டிகளுக்கு வயது சான்றிதழ் கேட்பார். அல்லது ஏதாவது மருத்துவ மனைக்கு சிபாரிசு கடிதம் கேட்பார் என்ற எண்ணத்தில் இருந்தார் மருத்துவர்.

நம்ம அண்ணன் ஒருத்தர் இறந்திட்டாரு.. அவருக்கு மரணச்சான்றிதழ் வாங்கணும்

எப்பங்க.. சொல்லவே இல்ல.. கொஞ்சம் அதிர்ந்தார்போல் முகம் தெரிந்தது

அது இரண்டு வருஷத்து முன்னாடி


அப்பவே வாங்கி இருக்கலாமே...

இல்ல சார், அப்ப பதிவு பண்ணல...

ஆமா 21 நாளுக்குள்ள பதிவு பண்ணணும்.

அதுதான் சார் போனவாரத்தில் ஒருநாள் அவர் செத்துப் போனது மாதிரி ஒரு சான்றிதழ் கொடுத்தீங்கண்ணா அதை வச்சு இறப்புச் சான்றிதழ் வாங்கிடுவேன். அதுனால் சொத்துகள் கூட இன்னும் பேர் மாறாம இருக்கு.

அந்த மனிதர் எப்படி இருப்பார்? எப்படி இறந்தார்?. உண்மையிலேயே இறந்துதான் போனாரா என்ற குழப்பத்தில் மருத்துவர் சிலையாக மாறி நின்றார்.

பின் குறிப்பு:-

மருத்துவர் பேசுவது பச்சை நிறத்திலும்

டரியல் பொன்னம்பலம் பேசுவது சிவப்பு நிறத்திலும் இடம்பெற்றுள்ளது

தமிழீஷில் ஓட்டுப்போட இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்

Read more...

Friday, August 14, 2009

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாப்பம்பட்டி























பாப்பம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எழிலான இந்த ஆண்டின் தோற்றத்தினை இந்த இடுகையின் மூலம் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.இந்தப் படங்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில் எடுக்கப் பட்டவை.



ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முந்தைய தோற்றத்தினை இதே வலைப்பூவில் வழங்கி இருக்கிறோம். அந்தப் பகுதிக்குச் செல்ல இந்தச் சுட்டி.

தமிழீஷில் ஓட்டளிக்க இந்தச் சுட்டியைப் பயன் படுத்துங்கள்.

Read more...

Thursday, August 13, 2009

இவர் எங்க ஊரு அம்மா

அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஊசிமருந்தினை எடுத்துக் கொண்டு திரும்பும்மா. என்றார். கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியோ என் குழந்தைக்குப் போடுங்க ..

செவிலியர் சற்று அதிர்ச்சியுடன் இது பவரான மருந்துமா. என்றார்.

ஆமாங்க என் குழந்தைக்கு ரொம்ப சளி. அதுனால டாக்டர்கிட்ட நாந்தான் கேட்டு வாங்கிட்டு வந்தேன். இது தாயார்

சற்று குழப்பத்துடன் இல்லையே இத குழந்தைக்ளுக்கு எழுதியிருக்க மாட்டாங்களே. இல்லைம்மா. இது உனக்குத்தான்

ஏம்மா.பெத்தவ இவ்வளவுதூரம் சொல்றேன்.. ஊசியப் போடுமா. சின்னப் புள்ளைக்கு ஊசி போடக் கூட மாட்டியா..

செவிலியருக்கு ஒரு சந்தேகம்தான். வழக்கமாக இந்த மருந்தினைக் குழந்தைக்கு போட மாட்டார்களே. எதற்கும் மருத்துவரிடம் கேட்டுவிட்டு வந்து விடுவோம்.

மருத்துவரின் அறைக்கு வந்து கேட்டார். இல்லையே ஸிஸ்டர். இந்த மருந்த எப்பவுமே நான் குழந்தைக்கு எழுதுனது இல்லையே.. நல்ல வேளை செஞ்சீங்க.


செவிலியர் அந்த தாயையும் குழந்தையும் ஊசிபோடும் அறையிலிருந்து
அழைத்துவந்துவிட்டார். அந்தக் குழந்தையையும் தாயையும் பார்த்த மருத்துவர் ஏம்மா உன் குழந்தைக்குத்தான் ஊசி தேவையில்லை. மாத்திரையும் திரவ மருந்தும் போதும்ன்னு சொன்னேனே. அப்புறம் எந்த சீட்டைம்மா கொடுத்த.

அந்தத்தாய் தலை குனிந்து கொண்டே சொன்னார்.

நீங்க ஊசி வேண்டாம்னு சொன்னீங்க. ஆனால் குழந்தைக்கு சளி நெறயா இருந்தது அதுனால என்க்குக் கொடுத்த ஊசி சீட்டக் கொடுத்து குழந்தைக்குப் போடச் சொன்னேன்.

Read more...

Wednesday, July 29, 2009

கீரைகளின் பயன்கள்

* கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன

* இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அறக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்


* கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும்


* கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்


* கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்


* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது

* கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது

* கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது

உணவில் உட்கொள்ள வேண்டிய கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு

*
பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு
*
ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு
*
பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் (4-6 வயது) க்கு 50 கிராம் ஒரு நாளைக்கு
*
10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு



* கீரை வகைகள் சிறுப் பிள்ளைகளில் வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. எனவே பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்ட்டிரியாக்கள்/கிருமிகள்/சிறு பூச்சிகள் மற்றும் பிற மாசுப்பொருள்கள் தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகளை மாசுப்படுத்துகிறது. எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செயயாமல் உணவில் சேர்க்கும்போது வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகிறது. எனவே வயிற்றுபோக்கு ஏற்படுவதை தடுக்க அணைத்து கீரைகளையும் சமைப்பதற்கு முன்பு நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்


* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கின பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் பயனுள்ளதாக அமைய, நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டி விடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடிவைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கீரைகளை வெய்யிலில் உளர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கராட்டீன்கள் வீனாகி விடும். கீரைகளை பொறிப்பதையும் தவிர்க்க வேண்டும்


* கீரைகளில் உள்ள சத்துக்களின் மதிப்பினை அவற்றின் விலைகளை கொண்டு நிர்ணயிக்க முடியாது. சில கீரைகள் மலிவான விலையில் கிடைப்பதனால், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட செய்து அவற்றை ஒதுப்கி விடுகின்றனர். எனவே சில கீரைகள் (உம், முருங்கை) விலை மலிந்து காணப்பட்டாலும், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பு மிக அதிகம் மற்றும் அவை அனைவருக்கும் தேவை


* கீரை வளர்ப்பினை அவசியம் ஊக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் கீரைகள் கிடைக்கும் நிலை உருவாகும். வீட்டுத் தோட்டங்கள், வீட்டின் மாடியில் தோட்டங்கள் ஏற்படுத்துவது, பள்ளி தோட்டங்கள் போன்றவைகளில் கீரைகளை வளர்த்து பயன் பெறலாம். வீட்டின் பின்புறத்தில் முருங்கை மரம், அகத்தி கீரை செடிகள் போன்றவற்றை வளர்ப்பதின் மூலம் மரங்களிலிருந்து கிடைக்கும் கீரைகளை மிக சுலபமாக மற்றும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்

தகவல் : தேசிய ஊட்டச்சத்து மையம், ஐதராபாத் -500007 இந்திய


தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே க்ளிக்குங்கள்

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP