பிரசவ கால விபத்துக்கள்
மனிதனுக்கே உரித்தான சிறப்பான ஒரு செயல். மனிதனுக்கு மட்டுமே பிறரின் உதவி தேவைப் படுகிறது.
இந்த இடுகை யாரையும் பயமுறுத்துவதற்கோ அல்லது குழப்புவதற்கோ அல்ல., எனக்குத் தெரிந்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவே.., விருப்பம் உள்ளவர்கள் தரமான புத்தகங்களின் உதவியோடு மேலும் இது தொடர்பான தங்கள் பார்வையை வளர்த்துக் கொள்ளலாம்.
அம்னியாட்டிக் ஃப்ளூயிட் எம்பாலிஸம்
Amniotic fluid embolism
பனிக்குடத்தில் உள்ள திரவமோ குழந்தையின் உடலில் உள்ள முடி முதலான ஏதாவது ஒரு பொருள் தாயின் ரத்த ஓட்டத்தில் கலந்து தாயாருக்கு தீவிரமான ஒவ்வாமை விளைவுகளை உருவாக்கி மிகவும் அவசரம் மற்றும் மோசமான உடல் நிலையை உருவாக்கும் நிலையாகும். இந்த நிலையை முன்கூட்டியே கண்டறிதல் இயலாது. உருவாகிய உடனே கண்டறிந்தால் தாயைக் காப்பாற்ற போர்க்கால அவசர சிகிச்சையைத் தொடங்கி நடத்த வேண்டும்.
இது லட்சத்தில் 1 முதல் 12 தாய்மார்களுக்கு ஏற்படுகிறது, குழந்தை பிறப்பின்போதோ குழந்தை பிறந்த உடனே ஏற்படலாம்.
அறிகுறிகள்
திடீரென மூச்சிறைத்தல்
நுறையீரலில் நீர்கோர்த்தல்
ரத்தம் உறையாமல் போதல்
திடீரென ரத்த அழுத்தம் குறைதல்
இதயம் செயல் படாமல் போதல்
குமட்டல் , வாந்தி
பதட்டம்
மனநிலை தீடீரென மாறுதல்
நடுக்கம்
வலிப்பு
கோமா நிலை
இவை போன்ற அறிகுறிகள் தீடீரென அதி வேகமாக அதி தீவிரமாக உருவாகக்கூடும்.
காரணங்கள்
இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என இதுவரை முழுமையாக கண்டறியப் படவில்லை. கர்பப்பையில் இருக்கும் இரத்த நாளங்களில் ஏதேனும் சேதம் அடையும்போது பனிக்குடத்தின் சவ்வுகள் கிழியும் போது பனிக்குடத்தில் உள்ள திரவமோ வேறு ஏதாவது பொருள்களோ தாயாரின் ரத்த ஓட்டத்தில் கலந்து விடுவதால் இது ஏற்படுகிறது. பனிக்குடம் உடைவது, குழந்தை தள்ளப் படுவது, நஞ்சுக்கொடி பிரிவது போன்ற நிகழ்வுகள் பிரசவத்தின்போது இயற்கையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா நேரங்களிலும் அதி தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு விடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது. அதுவே நிலைமையை மோசமானதாகவும் சிக்கலானதாகவும் மாற்றி விடுகிறது.
இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தாயார்ருக்கு இருக்கக்கூடிய உயர் ரத்த அழுத்தம், அதிக எடை, சர்க்கரை, விபத்து, பரம்பரைத் தன்மை ஆகியவை இந்நிலை உருவாகக் கூடுதல் காரணங்களாக இருக்கக்கூடும்.
விளைவுகள்.
பனிக்குடத்தில் இருக்கும் பொருட்கள் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் மெக்கானிக்கல் இஞ்சூரி என்று சொல்லப் படக் கூடிய அடைப்புக்கள் ஏற்ப்டலாம். இதனால் முக்கிய உறுப்புகளுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் நின்று போகலாம். பல நேரங்களில் மூளை, இதயத்திற்கு போகும் ரத்த ஓட்டம் நின்று உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.
அதி தீவிர ஒவ்வாமை காரணமாக இதய் நுரையீரல் செயலிழப்பு ஏற்படலாம்.
பரிசோதனைகள்:
முழுக்க முழக்க நோய்குறியீடுகளின் அடிப்படையிலேயே நோய் கண்டறியப் படுகிறது.பல நேரங்களில் நோயானது தாயாரின் மரணத்திற்குப் பிறகே உண்ரப் படும் சூழலே நிலவுகிறது. சில வேளைகளில் போஸ்ட் மார்ட்டம் பரிசோதனையின் போது சிசு தொடர்பான பொருட்கள் நுரையீரலில் காணப் பட்டிருக்கின்றன.
சிகிச்சை
தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும்
உடனடியாக சுவாசம் நன்கு நடைபெற செயற்கை முறையில் உதவிடல் வேண்டும். பல நேரங்களில் செயற்கை சுவாசம், வெண்டிலேட்டர் போன்றவை தேவைப்படலாம்.
இரத்த அழுத்தம், இதயத்துடிப்புகளை கூட்டும் மருந்து தேவைப்படலாம்
உதிரப் போக்கு அதிகமாக இருப்பதால் ரத்தம் நிறையவே ஏற்றவேண்டி வரும்.
ஒருவேளை குழந்தை பிறப்பதற்கு முன் இந்த நிலை ஏற்பட்டால் அவசர அறுவை சிகிச்சை தேவைப் படலாம். இது வெகு அபூர்வமே..,