Sunday, August 8, 2010

பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள்

புகுமுன்:-

டாக்டர் என்னும் தொழிலாளி   தொடர்ச்சியாகவே இந்த இடுகை அமைகிறது.  புதிதாக மருத்துவத் தொழிலில் இறங்கும் மருத்துவ பட்டதாரிக்கு எனக்கு என் மூத்தோர் சொன்ன வார்த்தைகளை தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறேன். மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பார்கள்.

ஆனால் புதிதாக மருத்துவம் படித்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு சுவை யெல்லாம் உணரக் கூடிய நிலை இருப்பதில்லை.  தமிழகத்தில் மருத்துவம் படித்து வரும், கடந்த சில பத்தாண்டுகளில் படித்து முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள்  பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குவித்த ஒரே தகுதியில் உள்ளே வந்தவர்கள். அவர்களில் பலரின் பெற்றோர், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வசதிப்படைத்தவர்கள் என்பவர்கள் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பவர்கள்தான்.  வெகுசிலரே  பெரிய மருத்துவமனைக்குச் சொந்தக் காரர்களின் பிள்ளைகள்.

இந்த நடுத்தரக் குடும்பத்தை, மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாங்கள் செய்யப் போகும் தொழிலின்  மேன்மை தெரிந்திருந்தாலும்,  அவனது கடமை அவனை பயமுறுத்திக் கொண்டேதான் இருக்கும். அவர்கள் வாங்கிருக்கும் வங்கிக் கடன், அவர்களை மருத்துவக் கல்லூரில் சேர்த்ததால் அவர்களது சகோதர்களையும் தனியார் தொழிற்நுட்பக் கல்லூரிகளில் சேர்த்து பெற்றோர் வாங்கி வைத்த கடன்,  சில நேரங்களில் இவர்களைப் படிக்க வைப்பதால் இவர்களின் தங்கைகளுக்கு உள்ளூர் கலைக் கல்லூரி படிப்பை மட்டுமே தரக் கூடிய சூழல் அவர்களது பெற்றோருக்கு இருக்கும். எனவே  தங்கைக்கு வயதாகும் முன்பே திருமண ஏற்பாட்டை கவனிக்க வேண்டும். சில நேரங்களில் அக்கா வேறு இருப்பார். அவரது திருமணத்திற்கு பொருள்  ஈட்ட வேண்டு,   ( எம்.பி.பி.எஸ் முடிக்கும் போதே 17+6 = 23 வய்து குறைந்த பட்சம் ஆகியிருக்கும்.) .  எனது ஜூனியர் மாணவர் ஒருவரது படிப்புச் செலவுக்காக அவரது தம்பி  பனியன் கம்பெனியில் வேலை பார்த்து பணம் அனுப்புவார்.  செலவு என்பது குறைவுதான்., இருந்தாலும்  குடும்பத்தில் இன்னொருவரும் சம்பாதிக்க வேண்டிய சூழல் .   இவ்வாறாக பெரிய மனச்சுமையோடுதான்  பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெளியே வருகிறார்கள்.

இவர்களுக்கு நெல்லிக் கனியின் கசப்பு பெரும்பாலும் தெரிய வாய்ப்பு இல்லாத காரணத்தால்  மூத்தோர் சொற்கள் நன்றாகவே போய் சேருகின்றன.

======================================================================

சென்ற இடுகையில்  அனைத்து மருத்துவர்களும் (சில சிறப்பு மேல் படிப்புகளைத் தவிர ) தனியாக சிறிய அளவிளான கிளினிக் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.  அனைவரின் வாழ்க்கையிலுமே இந்த கிளினிக் வாழ்க்கை மிக முக்கியமானது.   இந்த கிளினிக்கில்தான்  ஒவ்வொரு நோயாளியின் அருமையும் தென்படும்.  தினமும் பார்க்கும் நோயாளிகளைப் பற்றிய சிறுகுறிப்புக்களை ஒரு பதிவேட்டில் ஏற்றிக் கொண்டே வர வேண்டும்.   ஒவ்வொரு நாள் கிளினிக் முடிந்த உடனும்,  நோயாளிகளைப் பற்றி அசைப் போட வேண்டும்.  இதில்  கிளினிக் வழியில் இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்? அருகிலுள்ள மருத்துவ மனையில் கூட்டமாக இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்?  நம்மையே எதிர்பார்த்து வந்தவர்கள் எத்தனை பேர் ?  வந்தவர்களில் நாமே வைத்தியம் பார்க்கும் அளவில் இருந்தவர்கள் எத்தனை பேர்? பரிந்துரை செய்யப் பட்டவர்கள் எத்தனை பேர் என்பதையும்  வந்த நோயாளிகளுக்கு நாம் கொடுத்த மருத்துவம் சரியானதுதானா என்பதையும் ஏதாவது கூட்டி அல்லது குறைத்து இருக்கலாமா? என்பதையும்  யோசிக்க வேண்டும்.

குறிப்பாக முதல் நாளில் வந்து இரண்டாம் நாளும் வந்து எந்த முன்னேற்றமும் இல்லை என்று சொன்னால் ஏன் இல்லை, இதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் போனற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.    இது போன்ற  விஷயங்களில் நன்கு கவனம் செலுத்தி வந்தால் முதல் இரண்டு மாதங்களில் தினமும் ஐந்து பேராவது வர தொடங்கி விடுவார்கள்.  

இரண்டாவது மாத முடிவில் ஐந்து என்பதே பெரிய எண்ணிக்கை . எனவே மனம் தளராமல் உழைக்க வேண்டியது தான்.  தொடர்ந்து உழைத்தால், ஓராண்டு முடிவில் 20 - 25 பேரைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.    இந்த கால கட்டத்தில்  வரும் நோயாளிகளின் பரிந்துரையில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.  இந்த வகையான நோயாளிகள்தான் நமக்கு தனி வாடிக்கையாளர்களை உருவாக்குவார்கள். அவர்களது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை  தனியே உற்று நோக்கிவந்தால் மட்டும் நாமும் ஒரு நிலை பெற முடியும்.

இது போன்ற சிறு கிளினிக் தொடங்கும்போது ஊசி போடுதல், காயத்துக்கு மருந்து கட்டுதல்,  மருந்துகளை எப்படிச் சாப்பிடுவது என்று சொல்லிக் கொடுத்தல் போன்ற பணிகளை  ஒருத்தரே செய்வதுதான் நலம்.  தனியார் மருத்துவம்னையில் வேலைக்குச் சேர்ந்தாலோ அரசுப் பணியிலோ இந்த வாய்ப்புகள் கிடைக்காது.  இந்த வேலைகள் செய்து வந்தால் மட்டுமே நோயாளிக்கும் நமக்கும் ஒரு நெருக்கம் அமையும். சில காயங்களை தனி ஒரு ஆளாக சுத்தப் படுத்தி தையல் போட்டு பின்னர் கட்டும்போட்டு, ஊசி போட்டு அனுப்பும்போது    கிடைக்கும்     தொழில் திருப்தி என்பது ஒரு காகிதத்தில்  எல்லாவற்றையும் செய்யுமாறு ஆணைகளை எழுதித் தரும்போது கிடைக்காது.   பொதுவாக கிளினிக் ஆரம்பிக்கும்போது மிக ஆரம்ப கட்டத்தில் கூட்டுவது,  வரிசைப் படுத்தி அனுப்புவது போன்ற வேலைகளுக்கு மட்டும் ஒரே ஒரு வயதானவரை வேலைக்கு வைத்துக் கொள்ளுவது போதுமானது.

சில நப்ர்கள் காயங்களில் தண்ணீர் பட்டால் சீல் பிடித்துக் கொள்ளும் என்ற எண்ணத்தில் காயம் இருக்கும் பகுதி முழுவதும் மோசமாகப் பராமரித்து வருவார்கள். இதில் கிளம்பும் நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு சுத்தம் செய்து ஆற்றுவது என்பதே ஒரு சவாலாக இருக்கும்.  இதெல்லாம் செய்தால் மட்டுமே நமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்க முடியும்.  ஒவ்வொரு நோயாளியின் முக்கியத்துவத்தையும் உண்ரும்போதுதான் நாம் சம்பாதிக்கும் காசின் மதிப்பும் நமக்குத் தெரியும்.  இந்தக் கட்டத்தை தவர விடுவதுதான் பல பெரிய மருத்துவர்களின் மகன்கள் தந்தை அளவிற்கு சாதிக்க முடியாமல் போவதற்குக் காரணம்.   ஒரு ஆலமரத்தின் அடியில் சிறுபுல் பூண்டுகூட முளைக்காது என்பதற்கு உதாரணம் இவர்கள்தான்.    ஒவ்வொரு வாடிக்கையாளரையும் சம்பாதிப்பது எவ்வளவு சிரமம் என்பதையும் அதைத் தக்கவைப்பது அதைவிட எவ்வளவு சிரமம் என்பதும் தெரிந்தால் மட்டுமேதொழிலில் நிற்பது சாத்தியம். 


நோயாளியிடம் பீஸ் வாங்குவது என்பது நமது உரிமை.,  சராசரியாக அந்தப் பகுதியில் வாங்கப் படும் ஃபீஸை வாங்குங்கள்.  எந்த நேரத்திலும் குறைக்காதீர்கள்.  போட்டியாளர்களின் உள்ளாவீர்கள். தவிரவும் உங்களை கற்றுக்குட்டி டாக்டர் என்றும்  ஏமாந்த சோணகிரி என்றும் முடிவு செய்துவிட வாய்ப்பு இருக்கிறது.  அதே நோயாளியால்  அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்ற நேரத்தில்  இந்தத் தொகைதான் வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள்.  சில நேரங்களில் இலவசமாகப் பார்த்தால் கூட தவறில்லை.

================================================================

தொடரும்...................................................

1 comments:

pradeep kumar April 3, 2012 at 3:40 AM  

மிகவும் பயனுள்ள பதிவு. இதை 2 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்க கூடாதா என ஏங்க வைக்கிறது.

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP