Wednesday, August 4, 2010

டாக்டர் என்னும் தொழிலாளி

புகுமுன்:-

இந்த இடுகை   மருத்துவப்  பட்டப் படிப்பு படித்துவிட்டு தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கானது. நான் தொடங்கியபோது எனது மூத்த சகாக்கள் சொன்னதன் தொகுப்பு.  எனக்கு நினைவில் இருப்பவை மற்றும் என்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவிய வழிகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
இதில் வாதம் செய்ய நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான வாதத்திற்கும் அல்லது அவர்களின் உள்ளத்தில் குடைந்து கொண்டிருக்கும் சந்தேகங்களை மட்டுமே கேட்கவும்.


1.மருத்துவப் படிப்பு முடித்தவுடன் நீங்கள் எதிர்கால வாழ்க்கை முறையை தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
அ..மருத்துவத்தொழில் பிடித்திருக்கிறது. இதில் சாதிக்க வேண்டும்.
ஆ.மருத்துவத் தொழில் பிடிக்கவில்லை. மாறிவிட  நினைக்கலாம்

=======================================================================
மாறிவிட நினைக்கிறீர்கள் என்றால் உங்கள் முன் உள்ள வழிகள்:

1. இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகியவற்றிற்கு சென்று விடலாம்.
2.மருத்துவத் துறையிலேயே மருத்துவம் சார் படிப்புகளுக்கு ஆசிரியப் பணிக்குச் சென்றுவிடலாம்.
3.இன்னும் சில வழிகள் உள்ளன. இந்த இடுகையில் மருத்துவம் பற்றி மட்டும் பேச விருப்பம்.
======================================================================

மருத்துவத் துறையில் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். அனைவருக்குமே சம்பாதிப்பதுதான் முதல் நோக்கமாக இருக்கமுடியும்.  எந்த தொழிலுக்குமே  முதல் என்பது  நற்பெயர், நேர்மைதான்.  அதுவும் மருத்துவத் தொழிலில்  வருமானம் என்பது நற்பெயரினை வைத்துத்தான். எனவே நற்பெயருக்கு பங்கம் வராமல் தொழில் செய்ய வேண்டும்.

=================================================================

உங்களுக்கு வசதி இருந்தாலும், இல்லாவிட்டாலும்  முதலில் ஆலோசனை மட்டும் தரக்கூடிய சிறிய வகை கிளினிக் தொடங்குங்கள்.

உங்கள் தந்தை  மிகப் பெரிய மருத்துவ மனைக்குச் சொந்தக் காரராக இருந்தாலும்  முதலில் தனியாக கிளினிக் தொடங்குவதே நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

இதில் சில வகை சிறப்பு மேல் படிப்பு முடித்தவர்களுக்கு விலக்குக் கொடுக்கலாம். ஆனால் மேல்படிப்பு படித்தவர்கள்கூட கிளினிக் தொடங்குவதுதான் நன்று.

உள் நோயாளியாகச் சேர்க்க வேண்டியவர்களை அருகிலுள்ள மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்ளலாம்.

=======================================================================
நீங்கள் அரசுப் பணியில் இருக்குறீர்கள் என்றால்  அந்த ஊரிலேயே மருத்துவமனை தொடங்கும் யோசனை இருந்தால் நல்ல போக்குவரத்து சிறப்பு மருத்துவர்கள் அழைத்தால் வர தயாராக இருக்கும் இடத்தில் கிளினிக் தொடங்குங்கள்.  அது நகரமாக இருந்தாலும் சரி, பெரிய கிராமமாக இருந்தாலும் சரி.

மேற்படிப்பு படிக்கப் போகும் எண்ணத்தில் இருந்தால் நல்ல மக்கள் தொகையும், மக்கள் வந்து போகும் வசதியும் உள்ள கிராமத்தில்  கிளினிக் தொடங்கலாம்.. அங்கே ஏற்கனவே ஓரிரு மருத்துவர்கள் இருந்தாலும் கவலைப் பட தேவையில்லை.   இந்தக் கிராமங்கள் நீங்கள் படிக்கச் செல்லும் வரையிலான சில ஆண்டுகளில் உங்களுக்கு நல்ல அளவிலான நோயாளிகளைத் தரவல்லன.

இங்கும் உங்கள் நற்பெயரைக் கட்டிக் காக்க வேண்டியது அவசியம். காலந்தவறாமை மிக அவசியம்.  கிளினிக்கில்  பலகையில் எழுதிய நேரத்தில் வந்து அமரவேண்டும்.  அதேபோல் நீங்கள் அரசு மருத்துவமனையிலும் நல்ல பெயரை சேர்க்க வேண்டும்.  நீங்கள் சொந்தக் கிளினிக்கில் கொடுக்கும் தரமே அரசு மருத்துவமனையிலும் இருக்கும் என்ற எண்ணம் தேவை. நாட்டில் அரசு மருத்துவமனையில் கூட்டத்தோடு கூட்ட்மாக வர விருப்பம் இல்லாத நிறையப் பேர் இருக்கிறார்கள். தவிரவும் பகலில் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள்.  அவர்கள் உங்கள் கிளினிக்கைத் தேடி வருவார்கள்.


எந்தக் கால கட்டத்திலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உங்கள் கிளினிக்கிற்கு வரச் சொல்லாதீர்கள்.  அது உங்கள் நேர்மையான நற்பெயரைக் கெடுத்துவிடும்.  அதே போல நாளை அரசு மருத்துவமனைக்கு வருகிறேன். இந்த மருந்துகளை தாருங்கள் என்று சொல்பவர்களுக்கு முகம் கோணாமல் பதில் தாருங்கள்.


======================================================================

அரசுப் பணியில் இல்லை என்றாலும் காலந்தவறாமை, பொறுமை, நேர்மை ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்.  அரசுப் பணியில் இல்லாதவர்கள்  முழு நேரமும் அமர்ந்தால் இங்கு வந்தால் நல்ல தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கும். அருகிலுள்ள மருத்துவமனைகளில் உள்ளவர்களுடன் நல்ல உறவினை வளர்த்துக் கொண்டு உங்கள் சிபாரிசுக் கடிதங்களுக்கு நல்லதொரு மதிப்பினைக் கொடுக்கும் வகையில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


======================================================================

எந்தக் காலத்திலும் நோயாளிக்கு மருந்துக்கள் எழுதுவதில் உங்கள் சொந்த முடிவை எடுங்கள். சில மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் பரிசுப் பொருள்களுக்கு  ஆசைப் படாதீர்கள். நோய் குணமடையவில்லை என்றால் நோயாளிகள் நிரந்தரமாக வேறொரு மருத்துவரைப் பார்க்கச் சென்றுவிடக் கூடும்.  பிராண்ட் X எழுதினால் அதே  பிராண்ட் X  தான் நோயாளிக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் சில நிறுவனங்களின் தரம் சில நிறுவனங்களில் இருக்காது,   தரமான மருந்துகள் எந்த நிறுவனத்தால் குறைந்தவிலைக்கு வழங்குகிறதோ அந்த மருந்துகளையே  தேர்வு செய்யுங்கள்.  உங்கள் நோயாளிகளுக்கு த்ரமான மருந்துகள் கிடைப்பதற்கு நீங்களே பொறுப்பு.


நோயாளி வெளியூர் சென்றால் கூட அந்த மருந்து அங்கே கிடைக்கும் வகையிலான மருந்துகளையே தேர்வு செய்யுங்கள்.

==============================================================

உங்களுக்கு அவசியம் என்று தோன்றும் பரிசோதனைகளை செய்ய, செய்யச் சொல்ல தயங்காதீர்கள்.  அவசியமில்லை என்றால் எந்த ஒரு காரணத்திற்காகவும் செய்யாதீர்கள்.

================================================================

அடுத்த அடுத்த கட்ட மருந்து பிரயோகங்களைப் ப்ற்றி நன்கு தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.  உங்கள் பாடப் புத்தகங்களில் உள்ள வழிமுறைகளை உங்கள் பகுதி ஏற்றாற்போல உபயோகிக்க பழ்கிக் கொள்ளுங்கள். எந்த சூழலிலும்  புத்தகங்களும் , துறைத்தலைவர்களும் உங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழிமுறைகளை மீறாதீர்கள்.

===============================================================
எந்தச் சூழலிலும் உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்கள் பாடத்திட்டத்தில் இல்லாத மருந்துக்களை உபயோகப் படுத்தாதீர்கள்.  உங்கள் ஊரில் இருக்கும் பயிற்சி இல்லாத மருத்துவராக அழைக்கப் படும் நபரைப் பார்த்து உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள் . உங்களிடம் திறமை இருக்கும்போது மக்கள்  கண்டிப்பாக திறமையாளரின் பக்கமே வருவார்கள்.



================================================================
இந்திய மருத்துவக் கழகம் போன்ற அமைப்புக்களில் உறுப்பினராகிக் கொள்ளுங்கள். அவர்கள் நடத்தும் தொடர்கல்வி உட்பட அனைத்துச் செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதில் உள்ள திட்டங்களில் உங்களை உறுப்பினராக்கிக் கொள்ளுங்கள்.

==================================================================
இண்ட்லியில் வாக்களிக்க இங்கு அழுத்திச் செல்லவும்


இதன் அடுத்த பகுதி விரைவில் வரும்.

66 comments:

அ.முத்து பிரகாஷ் August 4, 2010 at 5:16 AM  

ஜெயமோகனுக்கு சமர்ப்பணம் !

அ.முத்து பிரகாஷ் August 4, 2010 at 5:17 AM  

மேற்சொன்னது நகுதற் பொருட்டு மட்டுமே ...

கல்வெட்டு August 4, 2010 at 5:23 AM  

நீங்கள் சொல்லும் இந்த விசயங்கள் எல்லா துறைக்கும் பொறுந்த‌க்கூடியவையே. நன்றி

**

Q1: அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் நீதிபதி,போலீஸ் போல எந்த நேரமும் பணி செய்யத் தயாரக இருக்க வேண்டுமா? அல்லது 8 மணி நேரம் மட்டுமா?

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் தலைமை மருத்துவர் உட்பட பலருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அருகிலேயே அரசாங்க வீடுவசதிகள் உள்ளது. அதன் நோக்கம் அவர்கள் அங்கே இருக்க வேண்டும் என்பதே.

Q2: அப்படியானல் அவர்கள் தனியாகவும் மருத்துவம் செய்வது பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

.

கல்வெட்டு August 4, 2010 at 5:30 AM  

.

தமிழ்நாடு "மக்கள் டாக்டர் சங்கம்" என்று ஒன்று ஆரம்பித்து

http://www.locostindia.com

இந்த நிறுவனத்தில் மருந்துகள் இல்லாவிட்டால் மட்டுமே மற்ற நிறுவன மருந்துகளைப் பரிந்துரை செய்யவேண்டும் என்று ஒரு நன்னடைத்தை தீர்மானம் போட்டால் என்ன?

மருத்துவர்களுக்கு இந்த நிறுவனத்தின் தரம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் நேரடியா விளக்கம் /பரிசோதனை முடிவை ஆராயலாமே? இதன்மூலம்க் கொள்ளைவியாபாரிகளின் மருந்தைப் புறக்கணிக்கலாமே? என்ன தடை உள்ளது?

.

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 9:15 AM  

//அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் நீதிபதி,போலீஸ் போல எந்த நேரமும் பணி செய்யத் தயாரக இருக்க வேண்டுமா? அல்லது 8 மணி நேரம் மட்டுமா?//

உங்களுக்கான பதில் இந்த இடுகையில் சுருக்கமாக உள்ளது.

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 9:23 AM  

வீடுகள் சிலருக்கு மட்டுமே உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திலும் அதாவது பஞ்சாயத்து யூனியனில் ஒரே ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டுமே ஒரு வீடு உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வட்டாரங்களில் அதுவும் கிடையாது. நகரத்தினை விட்டு வெகு தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவ்வாறு அமைக்கப் பட்டு இருந்தன. அது மருத்துவர்கள் அதுபோன்று அமைந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற ஊக்குவிக்க அமைக்கப் பட்ட திட்டமாகும். குறிப்பாக நகரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தள்ளி உள்ள கிராமம் ஒரு நபர் பணிக்கு வருகிறார். அவருக்கான போதுமான தங்கும் வசதி இல்லையெனும்போது அவர் நகரத்திற்கு அருகில் காலியிடம் அமையும்போது மாறிவிட வாய்ப்பு உண்டு. அந்த சூழல் அவ்வாறு வீடுகள் அமைந்தபோது தவிர்க்கப் பட்டிருந்தன.

சில வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தவிர பிற சுகாதார நிலையங்களில் மருத்துவருக்கு வீடு கிடையாது.

அவரது பணிநேரம் தவிர பிற நேரங்களில் தனியாக தொழில் செய்யலாம்.

சில குறிப்பிட்ட அழைப்புப் பணிக்கு வர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தயார இருக்க வேண்டும். அவை பற்றியும் மேற்கண்ட சுட்டி விளக்கும் என்று நினைக்கிறேன். சந்தேகம் இருந்தால் மேலும் கேட்கலாம.

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 9:26 AM  

//இந்த நிறுவனத்தில் மருந்துகள் இல்லாவிட்டால் மட்டுமே மற்ற நிறுவன மருந்துகளைப் பரிந்துரை செய்யவேண்டும் என்று ஒரு நன்னடைத்தை தீர்மானம் போட்டால் என்ன?//


ஏறக்குறைய அரசே ஒரு மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிப்பது போலத்தான் உள்ளது.

செய்யலாம். பி எஸ் என் எல் தனி ஆளுமை செய்வதற்கும் தற்போது பிற தொலைபேசி நிறுவனங்கள் வந்த பிறகு சேவை செய்வதற்கும் உள்ள வித்தியாசம் நினைவுக்கு வருகிறது.

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 9:29 AM  

//இதன்மூலம்க் கொள்ளைவியாபாரிகளின் மருந்தைப் புறக்கணிக்கலாமே?//

இப்போது கூட கண்டிப்பாக முடியும். மருந்து வாங்கும் அனைவரும் முழு விவரங்கள் அடங்கிய பில் கேட்டாலே இதை அடக்கி விட முடியும்.

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 9:30 AM  

// நியோ said...

ஜெயமோகனுக்கு சமர்ப்பணம் !//

எனக்குப் புரியவில்லை. புரியாதது தவறில்லை என்று நினைக்கிறேன்

தமிழ் ஓவியா August 4, 2010 at 9:52 AM  

//எனக்குப் புரியவில்லை. புரியாதது தவறில்லை என்று நினைக்கிறேன்//

விஜய் தொலைக்காட்சியில் நீயா/நானா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜெயமோகன் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.அதன் அடிப்படையில் தோழர் நியோ விமர்சித்துள்ளார்.

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 10:02 AM  

//விஜய் தொலைக்காட்சியில் நீயா/நானா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜெயமோகன் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.//


தெளிவான விவரங்கள் தெரியவில்லை. யூ ட்யூப்பில் யாராவது ஏற்றியிருந்தால் தொடுப்புக் கொடுங்கள். இடுகைத் தொடரை இன்னும் வளமையாக கொண்டு செல்லலாம்.

Dr.ராம் August 4, 2010 at 10:03 AM  

//மருத்துவத் துறையில் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். அனைவருக்குமே சம்பாதிப்பதுதான் முதல் நோக்கமாக இருக்கமுடியும். எந்த தொழிலுக்குமே முதல் என்பது நற்பெயர், நேர்மைதான். அதுவும் மருத்துவத் தொழிலில் வருமானம் என்பது நற்பெயரினை வைத்துத்தான். எனவே நற்பெயருக்கு பங்கம் வராமல் தொழில் செய்ய வேண்டும்.//

கலக்கல் தல

Dr.ராம் August 4, 2010 at 10:05 AM  

//எந்தக் கால கட்டத்திலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உங்கள் கிளினிக்கிற்கு வரச் சொல்லாதீர்கள். அது உங்கள் நேர்மையான நற்பெயரைக் கெடுத்துவிடும். அதே போல நாளை அரசு மருத்துவமனைக்கு வருகிறேன். இந்த மருந்துகளை தாருங்கள் என்று சொல்பவர்களுக்கு முகம் கோணாமல் பதில் தாருங்கள்.//

நியாயமான அறிவுரை ...

Dr.ராம் August 4, 2010 at 10:20 AM  
This comment has been removed by the author.
Dr.ராம் August 4, 2010 at 10:28 AM  

// நியோ said...

ஜெயமோகனுக்கு சமர்ப்பணம் !//

//எனக்குப் புரியவில்லை. புரியாதது தவறில்லை என்று நினைக்கிறேன்//

ஞாயிறு நீயா நானா நிகழ்ச்சியில் மருத்துவர்கள்,பொதுமக்கள் விவாதத்தில் ஜெயமோகன் பேசுகையில் மருத்துவர்களை கடுமையாக குற்றம் சாட்டினார் ..அவருடைய தரப்பில் மருத்துவர்கள் அனைவருமே தவறு இழைப்பவர்கள் என்ற தொனி இருந்தது..

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 10:34 AM  

//அவருடைய தரப்பில் மருத்துவர்கள் அனைவருமே தவறு இழைப்பவர்கள் என்ற தொனி இருந்தது.//

தவறிழைப்பவர்களா? தவறு மட்டுமே இழைப்பவர்களா? என்று தெரியவில்லை. யூ ட்யூப் லின்க் ஏதும் இருந்தால் கொடுங்களேன்.

ஜெயமோகன் என்பவர் ஒரு காலத்தில் ஆனந்த விகடன் மூலமாக விளம்பரப் படுத்தப் பட்டாரே அவர்தானே தல, அவராக இருந்தால் அவரது பார்வை மற்றும் எண்ண ஓட்ட்ம் கொஞ்சம் விசாலமாகத்தான் இருக்கும்

கல்வெட்டு August 4, 2010 at 10:45 AM  

.

//
Dr.ராம் said...
இதுபற்றி சுரேஷ் போதுமான விளக்கம் கொடுத்துள்ளார்....இருப்பினும் என்றாவது உங்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்பிற்கு சென்று பார்த்திருக்கிறீர்களா ..அதன்பின் இந்த கேள்வியை கேட்கலாம்..//

நான் பார்க்கவில்லை என்ற முன் அனுமானத்துடன் நீங்கள் சொல்லி உள்ளீர்கள்.
தலைமை மருத்துவர் மற்றும் செவிலியர் ,மருந்தாளுநர்கள் என்று அனைவரும் வசிக்கும் வண்ணம் ,பாதுகாப்புச் சுவருடன் இருந்த ஆரம்பசுகாதர நிலையங்களில் இளம் பருவத்தில் பல நாள்,வருடங்கள் இருந்த பார்த்த அனுவனம் உண்டு.

கேள்விகள் கேட்பது குற்றம் சொல்ல அல்ல தற்போதைய நிலையையும் எனது புரிதல்களையும் சரிபார்த்துக் கொள்ள.

****

//
அரசு மருத்துவர்கள் வேலை நேரம் தவிர பிற நேரங்களில் தனியாக மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை..//

மகப்பேறு போன்ற சம்பவங்களில் இரவு வேளையில் மருத்துவர் ஆரம்பசுகாதர நிலையத்தில் இல்லாமல் , அவரது தனி மருத்துவமனையில் இருந்து அழைத்து வர சிரமப்பட்டது உண்டு.

தடை இல்லை என்று நீங்கள் சொன்னமைக்கு நன்றி.

.

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 10:53 AM  

//தலைமை மருத்துவர் மற்றும் செவிலியர் ,மருந்தாளுநர்கள் என்று அனைவரும் வசிக்கும் வண்ணம் ,பாதுகாப்புச் சுவருடன் இருந்த ஆரம்பசுகாதர நிலையங்களில் இளம் பருவத்தில் பல நாள்,வருடங்கள் இருந்த பார்த்த அனுவனம் உண்டு. //


ஒரு பஞ்சாயத்து யூனியனில் அமைந்துள்ள ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் இது போன்ற அனைவருக்கும் குடியிருப்புகளுடன் இருந்தது உண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று ஆரம்பசுகாதார நிலையங்களில் இதுபோன்று இருக்கும். அதில் பலரும் தங்கி இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.



வட்டார ஆரம்ப சுகாதார நிலைய அந்தஸ்து இல்லாத எந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குடியிருப்பு கிடையாது, வெகு சில வட்டார ஆ. சு. நி. களில் குடியிருப்பு உண்டு.


திருமணமாகாத, புதிதாக திருமணமாகி மிகச் சிறு குழந்தைகள் உள்ள, குழந்தைகள் கல்லூரிப் படிப்புக்குச் சென்று விட்ட என்ற நிலைகளில் உள்ள மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் இது போன்று வெகுசிலவே என்று இருக்கும் குடியிருப்புக்களை உபயோகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். குடியிருப்புகளில் தங்கி இருப்பதில் பல வசதிகள் உள்ளன. குறிப்பாக கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அ.முத்து பிரகாஷ் August 4, 2010 at 10:54 AM  

// யூ ட்யூப் லின்க் ஏதும் இருந்தால் கொடுங்களேன் //

அவரது இணையதளத்தில் பாருங்கள் டாக்டர் ...

www.jeyamohan.in

கல்வெட்டு August 4, 2010 at 10:55 AM  

.

சுரேஷ்,
புருனோவின் பதிவை முன்னரே படித்துள்ளேன். இருந்தாலும் ஆரம்பசுகாதரப் பணியில் தலைமை மருத்துவர் 24 மணி நேரமும் வேலைக்கு தயாராக (போலீஸ் / நீதிபதி போல) இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதை விளங்கிக் கொள்ளவே கேட்டேன்.

***

நான் லோகாஸ்ட் http://www.locostindia.com
பற்றிச் சொன்னது தனிமருத்துவ மனைகளில் பணியாற்றும் அல்லது தனியாக கிளினிக் வைத்து இருக்கும் மருத்துவர்களுக்காக. அவர்கள் எல்லாம் ஒரு சிண்டிகேட் அமைத்து செயல்பட்டால் நல்லது.

குடும்ப டூர், டிவி, பிரிட்ஜ் என்ற எல்லா வித மருந்துவிற்கும் மருந்துக் கம்பனிகளின் டாக்டட் பேக்கேஜ் நடைமுறைகளும் தெரிந்தமையால் சொல்கிறேன். :-(((

***

இலாபம் மற்றும் பணம் சம்பாதிப்பது முதல் முக்கிய நோக்கம் என்றால் கந்துவட்டி நல்ல தொழில். பணத்துடன் ஆத்ம திருப்தியும் முக்கியம் என்பவர்கள் மட்டுமே டாக்டர், வாத்தியார் போன்ற தொழில்களுக்கு வரவேண்டும் என்பது எனது கருத்து. ஏன் என்றால் அதில் வழிகாட்டலும் நம்பிக்கையும் முக்கியம், பணம் இரண்டாவது. கந்துவட்டியில் பணம் முக்கியம் மற்றது அப்புறம்.


.

கல்வெட்டு August 4, 2010 at 10:58 AM  

//சுரேஷ்,
குடியிருப்புகளில் தங்கி இருப்பதில் பல வசதிகள் உள்ளன. குறிப்பாக கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.//

அதே ..
மருத்துவருக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய கடமை சென்னையில் தலைமையிடம் கொண்டுள்ள அரசைவிட அந்த ஊரில் வாழும் மக்களுக்கு அதிகம் உள்ளது.

பொது மக்கள் நினைத்தால் தங்கள் மருத்துவர் மற்றும் காவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான நல்ல அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 10:59 AM  

//குடும்ப டூர், டிவி, பிரிட்ஜ் என்ற எல்லா வித மருந்துவிற்கும் மருந்துக் கம்பனிகளின் டாக்டட் பேக்கேஜ் நடைமுறைகளும் தெரிந்தமையால் சொல்கிறேன்.//

பிரிட்ஜுக்காக பிராக்டீசை பலியாக்க துணிந்தவர்களைப் பற்றி என்ன சொல்வது?

அதிகமான பரிசுப் பொருட்களை எதிர்பார்த்து அனுகுவதைவிட அந்த மருந்துகளுக்கு நோயாளிகள் குணமடைகிறார்களா? என்று பார்த்து செயல்படுவது நல்லது

Dr.ராம் August 4, 2010 at 11:00 AM  

//Q1: அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் நீதிபதி,போலீஸ் போல எந்த நேரமும் பணி செய்யத் தயாரக இருக்க வேண்டுமா? அல்லது 8 மணி நேரம் மட்டுமா?//


நீதிபதி , போலீஸ், மருத்துவர்கள் மட்டுமல்ல எந்த ஒரு மனிதனுக்குமே 8 மணி நேரம் பணி மட்டுமே இருக்கவேண்டும்.. அத்தியாவசிய பணிகளில் வேலை பார்ப்பவரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றலாம்...

//அப்படியானல் அவர்கள் தனியாகவும் மருத்துவம் செய்வது பற்றி சட்டம் என்ன சொல்கிறது?//

அரசு மருத்துவர்கள் வேலை நேரம் தவிர பிற நேரங்களில் தனியாக மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை..

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 11:01 AM  

//பணத்துடன் ஆத்ம திருப்தியும் முக்கியம் என்பவர்கள் மட்டுமே டாக்டர், வாத்தியார் போன்ற தொழில்களுக்கு வரவேண்டும் என்பது எனது கருத்து//


உண்மை இந்தத் தொழிலில் கிடைக்கும் மரியாதை மிகவும் அதிகம். 25 வயது பையனைப் பார்த்த உடன் 60வயது மனிதர் கூட சிகரெட்டை அணைத்து விடுவது என்பது இங்கு மட்டுமே கிடைக்கும்

Dr.ராம் August 4, 2010 at 11:02 AM  

//நான் பார்க்கவில்லை என்ற முன் அனுமானத்துடன் நீங்கள் சொல்லி உள்ளீர்கள்.
தலைமை மருத்துவர் மற்றும் செவிலியர் ,மருந்தாளுநர்கள் என்று அனைவரும் வசிக்கும் வண்ணம் ,பாதுகாப்புச் சுவருடன் இருந்த ஆரம்பசுகாதர நிலையங்களில் இளம் பருவத்தில் பல நாள்,வருடங்கள் இருந்த பார்த்த அனுவனம் உண்டு.

கேள்விகள் கேட்பது குற்றம் சொல்ல அல்ல தற்போதைய நிலையையும் எனது புரிதல்களையும் சரிபார்த்துக் கொள்ள.//

நன்றி.. புரிதலுக்கு.. அதனால் அந்த குறிப்பிட்ட பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.. மன்னிக்கவும்

Dr.ராம் August 4, 2010 at 11:06 AM  

//பணத்துடன் ஆத்ம திருப்தியும் முக்கியம் என்பவர்கள் மட்டுமே டாக்டர், வாத்தியார் போன்ற தொழில்களுக்கு வரவேண்டும் என்பது எனது கருத்து. ஏன் என்றால் அதில் வழிகாட்டலும் நம்பிக்கையும் முக்கியம், பணம் இரண்டாவது. கந்துவட்டியில் பணம் முக்கியம் மற்றது அப்புறம். //

வழிமொழிகிறேன்..
ஆனால் பெரும்பான்மையான மக்கள் "சேவை" என்ற பதத்தை "பணம் வாங்காமல்" என்ற அர்த்தத்துடன் அணுகுகின்றனர் என்பது எனது தாழ்மையான கருத்து...

கல்வெட்டு August 4, 2010 at 11:08 AM  

//
சுரேஷ்
உண்மை இந்தத் தொழிலில் கிடைக்கும் மரியாதை மிகவும் அதிகம். 25 வயது பையனைப் பார்த்த உடன் 60வயது மனிதர் கூட சிகரெட்டை அணைத்து விடுவது என்பது இங்கு மட்டுமே கிடைக்கும்//

உண்மை சுரேஷ்.
வாத்தியார் மற்றும் மருத்துவப் பணிகள் வழிகாட்டல் தன்மை (மென்டோரிங்) அடங்கியது. பணம் என்பது அத்தியாவசியத் தேவை. ஆனால் அதை சம்பாரிக்கும் வழியில் ஒரு ஆத்ம திருப்தி வேண்டும். சாரயம் விற்றும் பணம் சம்பாரிக்கலாம் சலைன் வாட்டர் விற்றும் பணம் சம்பாரிக்கலாம். முன்னதில் குடும்பத்தில் இருந்து வசவுகள் வரும் பின்னதில் கடவுளாகவே பார்க்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

10 பேர்கள் செய்யும் தவறுக்காக மீதம் இருக்கும் 90 பேரையும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால் அந்த 10 போர்களால் மற்றவர்களும் அவமானம் அடைய நேரிடுகிறது எனப்துதான் நிதர்சனம்

அ.முத்து பிரகாஷ் August 4, 2010 at 11:11 AM  

//அவராக இருந்தால் அவரது பார்வை மற்றும் எண்ண ஓட்ட்ம் கொஞ்சம் விசாலமாகத்தான் இருக்கும் //

இலக்கிய படைப்பாளியாக அவர் பெரும் வணக்கத்துக்குரியவர் (படைப்பில் உறைந்திருக்கும் அரசியல் சாய்வு தனி விடயம்)... இலக்கியம் சாரா அவரின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியவை;சிலவை/பலவை விஷமத்தனமானவை...

ஆனால் ,நீயா நானா நிகழ்வில் அவர் வெகு ஜன மக்களின் குரலில் பேசினார் .. அவர் பேசியதில் மிக எளிதாக குறைகளை பட்டியலிடலாம் ... அவர் ஒன்றும் மேடை பேச்சாளர் அல்ல ... இன்னும் சொல்லப் போனால் அவர் கலந்து கொள்ள சம்மதித்த முதல் நிகழ்விதுவென நண்பரொருவர் கூறினார் ... அவரின் பேச்சில் ஒலித்த அடிநாத உணர்விற்கு எந்த மருத்துவராலும் பதில் சொல்லிவிட முடியாது ... விதிவிலக்கான மருத்துவர்கள் இருக்கின்றார்கள் .. மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளான,தொடர்ந்து உடல்/மன சிக்கல்களுக்கு ஆளாகி வரும் என்னுடைய வாழ்வில் நான் ஒரு மோசமான மருத்துவரை கூட சந்தித்ததில்லை ... ஆனால் அவர்கள் விதிவிலக்கானவர்கள் ... முப்பது சதவிகிதத்தினருக்கும் குறைவானவர்கள் ...அவர்களுக்கு வந்தனங்களை எப்போதும் நமது சமூகம் தொடர்ந்து செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றது ...

கல்வெட்டு August 4, 2010 at 11:19 AM  

.

//

Dr.ராம் said...
நன்றி.. புரிதலுக்கு.. அதனால் அந்த குறிப்பிட்ட பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.. மன்னிக்கவும்

//

அதனால் ஒன்றும் இல்லை ராம். மருத்துவம் எனது துறை அல்ல. ஆனால், அப்பாவின் நண்பர்கள் தொடங்கி எனது நண்பர்கள் வரை பலர் அரசு மருத்துவப்பணியிலும் தனியார் மருத்துவப் பணியிலும் உள்ளார்கள்.

மருத்துவம் சம்பந்தமாக துறைசார்ந்த பல விசயங்கள் எனக்குத் தெரியாது. பதிவின் வழியாக கைக்கெட்டும் தூரத்தில் இப்படி சுரேஷ் /புருனோ போன்றவர்கள் இருப்பதால் பல நேரம் சட்டென்று கேள்விகளை கேட்டுவிடுவேன். தேடித் தெரிந்து கொள்ள சோம்பல் அல்லது இவர்களிடமே கேட்டுவிட்டால் என்ன என்று தோன்றும் அவசரம்... என்று எப்படி வேன்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். :-)

**

அக்காவின் மகப்பேறுகாலத்தில் இரவில் சென்று தலைமை மருத்துவரின் வீட்டுக் கதவைத் தட்டியவுடன் ஓடோடி வந்தவர்களும் உண்டு. "நீ வேனும்னா இங்கேயே இருடா எதுக்கு ஆசுபத்த்ரிக்கு?" என்று செவிலியர் வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதி கொடுத்தவர்களும் அதே அரசு மருத்துவப் பணியில் உள்ளவர்கள்தான்.

நல்லவன் என்ன வேலையில் இருந்தாலும் மனிதத்துடன் இருப்பான். மனிதமற்றவன் எங்கு இருந்தாலும் அந்த பணிக்கு அவமானத்தை தேடித்தருவான்.

*

Dr.ராம் August 4, 2010 at 11:22 AM  

மருத்துவர்களிலேயே இரண்டு வகையினர் உள்ளனர் .. மெரிட் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்து வருபவர்கள், நன்கொடை கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருபவர்கள்..முதலாம் வகையினர் பெரும்பாலும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்..அவர்களில் பெரும்பாலோர் ஆத்மதிருப்தியுடன் கூடிய சேவையை தர விரும்புபவர்கள்..ஆனால் பணமின்றி இலவச சேவை செய்ய இயலாதவர்கள்..இரண்டாம் வகையினர் பணம் படைத்தவர்கள்..மருத்துவத்தை வியாபாரமாக ஆக்குவதில் இவர்களுக்கே பெரும்பங்கு உண்டு.இந்த இரண்டு வகையினரையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதில்தான் சமூகத்தின் தவறு இருக்கிறது...

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 11:25 AM  

பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல் இரண்டு பகுதி பார்த்துவிட்டேன். ஏதோ அவர்கள் விருப்பத்திற்கேற்ப கொண்டு செல்வது போல உள்ளது. முதல் பகுதியில் உள்ள இரண்டு நிகழ்வுகள் பல ஆண்டுகளாக பேசப் படும் நகைச்சுவைகள்

Dr.ராம் August 4, 2010 at 11:28 AM  

சேவை என்பது மருத்துவம் சார்ந்தது மட்டுமே அல்ல.. எந்த ஒரு தொழிலிலும் வாங்கும் பணத்திற்கு நியாயமாக மனிதத்தன்மையுடன் வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்வதே சேவை என்பது எனது கருத்து.. ஆனால் இங்கு சேவை என்பது மருத்துவர்களை பார்த்து மட்டுமே கேட்கப்படுகிறது.. அதுவும் இலவசமாக செய்யப்படவேண்டும் என்ற அர்த்தத்திலேயே கேட்கப்படுகிறது

அ.முத்து பிரகாஷ் August 4, 2010 at 11:31 AM  

//இந்த இரண்டு வகையினரையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதில்தான் சமூகத்தின் தவறு இருக்கிறது...//

உண்மை தான் டாக்டர் ! இரண்டு வகையினரில் எந்த பிரிவினர் அதிகம் என்பதும் முக்கியமானது.முதலாம் பிரிவினர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம்.ஆனால் மருத்துவமனைகளை வைத்திருப்பவர்கள் இரண்டாம் வகையினர் என்பது தானே கசப்பான உண்மை .

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 11:36 AM  

எனக்குத் தெரிந்து சில மருத்துவர்களின், மருத்துவர்களின் ரத்த உறவுகளின் அறுவை சிகிச்சைகள் கோவை மருத்துவக் கல்லூரியில் நடந்து உள்ளன. ஆனால் இவருக்கு மருத்துவ நண்பர்கள் இருந்தும் மதுரையில் செய்ய முடியவில்லை என்று மூன்றாவது வீடியோவில் வரும் நண்பர் கூறுகிறார். எனக்கென்னவோ இது சரியாகவே படவே இல்லை. அதை மறுத்துப் பேச வேண்டியவர்களின் வாதமும் ஏனோதானோவென்று இருக்கிறது.

அ.முத்து பிரகாஷ் August 4, 2010 at 11:42 AM  

டாக்டர் ராம் !

// இலவசமாக செய்யப்படவேண்டும் என்ற அர்த்தத்திலேயே கேட்கப்படுகிறது //

அப்படியல்ல டாக்டர் ! நியாயமாக செய்யப்படவேண்டுமென்பது தான் அனைவரும் வேண்டுகோள்கள் !

ஏற்கனவே இறந்து போனவரின் உடலை வைத்துக் கொண்டு காசு பறிக்கும் சம்பவங்கள் திரைப்படங்களில் மட்டுமே நடப்பதல்ல.நானுட்பட நம்முடைய பதிவர்களுக்கே சொந்த அனுபவம் உண்டு.சமீபத்தில் தோழர் மதார் கூட தனது பதிவில் ரத்தக் கண்ணீர் வடித்திருந்தார் .

இத்தகைய குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட உங்கள் மீது வைக்கப் படுவதாக நீங்கள் ஒருபோதும் எண்ணாதீர்கள் ...நீவீர் விதிவிலக்குகள் ...30%... பணம் தான் உங்களை போன்றவர்களுக்கு முக்கியமெனில் வெட்டியாய் கம்ப்யூட்டர் முன்னமர்ந்து வலைப்பூ எழுதும் நேரத்தில் பத்து கேஸ் பார்த்து பணம் பண்ணியிருப்பீர்கள் ...

ஜெயமோகனும் கல்வெட்டும் நானும் பாமர மக்களும் வைக்கும் கேள்விகளும் ஆதங்கமும் அந்த 70% நோக்கியே ...

கல்வெட்டு August 4, 2010 at 11:48 AM  

.

//
Dr.ராம் said...

ஆனால் பெரும்பான்மையான மக்கள் "சேவை" என்ற பதத்தை "பணம் வாங்காமல்" என்ற அர்த்தத்துடன் அணுகுகின்றனர் என்பது எனது தாழ்மையான கருத்து...//


சர்வீஸ் என்பது எப்படியோ தமிழில் இலவச சேவை என்றாகிவிட்டது.

சர்வீஸ் என்பதும் ஒரு விற்பனைப் பொருள்தான். அதைச் செய்பவர் அதன்மூலம்தான் பொருள் ஈட்டி அவரின் பிழைப்பையும் ஓட்ட வேண்டும் என்ற புரிதல் இல்லை.

ஏதாவது பொருளை கொடுத்தால்தான் அது விற்பனையாகவும் அந்த பொருளின்பொருட்டு அதற்காக பணம் கொடுத்தலும் சரி என்ற எண்ணம் பலரிடம் உள்ளது.

சேவை என்பது உதவுதல் என்றாகிவிட்டது. உதவிக்கு எதுக்கு காசு என்ற எண்ணமே உள்ளதால் மருத்துவ சேவை என்ற தொழிலில் இருப்பவர்கள் , தேவையில்லாத பொருட்களை விற்று அதன் மூலம் உண்மையான சேவைக்கான பணத்தைப் பெற நிர்பந்திக்கப்ப்டுகிறார்கள் என்பதும் உண்மை. :-((((


**

எங்கள் ஊரில் உள்ள எம்.பி.பி.எஸ் மருத்துவர் பார்க்கும் சேவைக்கு (சர்வீசிற்கு ..சர்வீஸ் என்பதும் ஒரு தொழில்) யாரும் காசு கொடுக்க மாட்டார்கள்.. அவர் ஊசி போட்டால் தவிர. :-))))

1. அதாவது காய்ச்சல் என்று ஒருவர் வருகிறார்.

2. மருத்துவர் 15 நிமிடங்கள் அவரிடம் செலவழிக்கிறார்.

3.மருத்துவர் செய்த சின்னச்சின்ன சோதனைகளில் ,வந்தவருக்கு இருந்த ஒவ்வாமை கண்டறியப்பட்டு , எல்லாம் இரன்டு நாளில் சரியாகிவிடும் என்று சொல்லி, பாரசிட்டமால் மாத்திரை வாங்கி சாப்பிடச் சொல்கிறார்.

4. வந்தவர் சரி என்று எழுந்துபோவிடுவார். போகும்போது மருந்துச் சீட்டு கொடுங்க டாக்டர் என்று கேட்டு வாங்கிக்கொள்வார்.

5. இந்த டாக்டர் செலவழித்த 15 நிமிட சேவைக்கு யார் பணம் கொடுப்பது?

6. வந்தவரிடம் "அய்யா 20 ரூபாயை நர்ஸிடம் கொடுத்துட்டுப்போங்க" என்று சொன்னால், " ஒன்னுமே செய்யல நீங்க? எதுக்கு காசு ?" என்பார். :-)))

இந்தக் கொடுமைக்காக இந்த எம்.பி.பி.எஸ் மருத்துவர் கண்டுபிடித்த டெக்னிக் "ஊசிக்கு பத்து ரூபாய்".

கடைசியில் அவரை இரண்டு ஊசி டாக்டர் என்றே ஆக்கிவிட்டார்கள் மக்கள். அவரும் எப்படித்தான் 20 ரூபாயை வாங்குவது மக்களிடம் இருந்து? மேலும் அவர் உள்ளூர்காரர் பலர் என்னப்பா இதுக்குபோயி காசு கேட்குற? உங்க அப்பா எங்க தாத்தகிட்ட படிச்சவர் என்று அலம்பல் பண்ணுவார்கள்.

:-))



ஊசி போட்டால் அதை விற்பனை செய்யத்தக்க பொருளாக எண்ணி காசு கொடுக்க தயாராக இருப்பவர்கள் பரிசோதனை / ஆலோசனை என்ற சேவையை விற்கத்தகுந்த மதிப்புள்ள ஒன்றாகக் கருதுவது இல்லை. :-((

வளர்ந்த நக‌ரங்களில்கூட இந்தப் புரிதல் குறைபாடு உண்டு.

.

SUREஷ்(பழனியிலிருந்து) August 4, 2010 at 11:51 AM  

//வந்தவரிடம் "அய்யா 20 ரூபாயை நர்ஸிடம் கொடுத்துட்டுப்போங்க" என்று சொன்னால், " ஒன்னுமே செய்யல நீங்க? எதுக்கு காசு ?" என்பார். :-)))//


அடுத்தடுத்த இடுகைகளில் இதைப் பற்றியும் எழுத இருக்கிறேன். நீங்களும் சொல்லுவது இன்னும் வலுச் சேர்க்கும் என்றே நினைக்கிறேன்.

Dr.ராம் August 4, 2010 at 11:57 AM  

நீயா நானாவில் அன்று நடைபெற்ற விவாதம் ஒருதலைபட்சமாகவே இருந்தது.. மருத்துவர்களின் மீது புள்ளிவிவரங்களுடன் குற்றச்சாட்டுகளை சொல்ல அனுமதித்து ,ஆனால் மருத்துவர்கள் புள்ளிவிவரங்களுடன் அதனை மறுக்க முற்படும்போது, புள்ளி விவரங்கள் தேவை இல்லை என்று நிகழ்ச்சியை நடத்துபவரால் கூறப்பட்டது..ஜெயமோகன் மருந்துசீட்டு சம்பந்தமாக பொதுவான ஒரு குற்றச்சாட்டை வைக்க, அதனை ஒரு மருத்துவர் மிகுந்த நேர்மையுடன் அந்த குறிப்பிட்ட மருந்துசீட்டு மட்டும் அல்ல,எந்த ஒரு மருத்துவரின் மருந்துசீட்டிலும் தேவையின்றி மருந்துகள் எழுதப்படுவதில்லை.. அப்படி எதாவது ஒரு மருந்துசீட்டை பொது மேடையில் வைத்து நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டபோது ஜெயமோகன் அதற்கு பதில் அளிக்கவில்லை.. அகவே இதுபோன்ற ஒருதலைபட்சமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் மருத்துவர்கள் புறக்கணிக்க வேண்டும்..

Bruno August 4, 2010 at 12:31 PM  

//Q1: அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் நீதிபதி,போலீஸ் போல எந்த நேரமும் பணி செய்யத் தயாரக இருக்க வேண்டுமா? அல்லது 8 மணி நேரம் மட்டுமா?//

எந்த நேரமும் அழைப்பு பணி
8 மணி நேரம் அல்லது அதிகமாகவே இருப்பு பணி

விபரங்களுக்கு :

தமிழக அரசு மருத்துவர்களின் வேலை நேரம் என்ன தெரியுமா

மற்றும்

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் வேலை நேரம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது

//ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் தலைமை மருத்துவர் உட்பட பலருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அருகிலேயே அரசாங்க வீடுவசதிகள் உள்ளது. அதன் நோக்கம் அவர்கள் அங்கே இருக்க வேண்டும் என்பதே.//

ஆமாம்

Bruno August 4, 2010 at 12:32 PM  

//Q2: அப்படியானல் அவர்கள் தனியாகவும் மருத்துவம் செய்வது பற்றி சட்டம் என்ன சொல்கிறது?//
தமிழக அரசு பணியில் உள்ள மருத்துவர்கள் தனியாக பிராக்டீஸ் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது

காரணம் இங்கு ஊதியம் மிக மிக குறைவு

மத்திய அரசு பணியில் ஒரு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் வாங்கும் சம்பளம் மாதம் 1.5 லட்சம்

ஆனால் தமிழகத்திலோ 50000 முதல் 80000 வரை தான்

--

இதனால் தான் அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டிஸ் செய்ய அனுமதி

--

இந்தியாவிலேயே மருத்துவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவது தமிழக அரசு தான்

இதனால் தான் அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டிஸ் செய்ய அனுமதி

--

ஒரு பொறியியல் கல்லூரி பேராசிரியருக்கும் கலைக்கல்லூரி பேராசிரியருக்கும் ஒரே பணி தான்

கற்பித்தல்

ஆனால் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் கற்பிக்கவும் வேண்டும்
சிகிச்சை அளிக்கவும் வேண்டும்

நீதிமன்ற பணி செல்லவும் வேண்டும்

ஆனால் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களை விட அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மிக மிக குறைவான அளவே ஊதியாம் பெறுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா

தமிழகத்தில் கலைகல்லூரி பேராசிரியர்களை விட அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மிக மிக குறைவான அளவே ஊதியாம் பெறுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா

Bruno August 4, 2010 at 12:34 PM  

கல்வெட்டு சார்

அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டீஸ் செய்வதை தடை செய்ய நீங்கள் ஏதாவது இயக்கம் ஆரம்பித்தால் சொல்லுங்கள்

உங்களுக்கு உதவ தயார் :) :) :)

அப்படியே இதையும் படித்து பாருங்கள்

Bruno August 4, 2010 at 12:37 PM  

//மருத்துவர்களுக்கு இந்த நிறுவனத்தின் தரம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் நேரடியா விளக்கம் /பரிசோதனை முடிவை ஆராயலாமே? இதன்மூலம்க் கொள்ளைவியாபாரிகளின் மருந்தைப் புறக்கணிக்கலாமே? என்ன தடை உள்ளது?//

இவர்கல் மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு மருந்து கண்டுபிடித்துள்ளார்களா அல்லது பிற நிறுவனங்கள் கண்டுபிடித்து பரிசோதித்து பாதுகாப்பானது மற்றும் பலனுள்ளது என்று ஆவணப்படுத்திய மருந்து பொருட்களை தயார் செய்ய மட்டும் செய்கிறார்களா என்று தெரிந்து கொள்ள ஆவல்

Bruno August 4, 2010 at 12:44 PM  

//மகப்பேறு போன்ற சம்பவங்களில் இரவு வேளையில் மருத்துவர் ஆரம்பசுகாதர நிலையத்தில் இல்லாமல், அவரது தனி மருத்துவமனையில் இருந்து அழைத்து வர சிரமப்பட்டது உண்டு.//

சீமாங்க் நிலையங்கள் தமிழகத்தில் நூற்றிற்கும் மேல் உள்ளன

அங்கு இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு DGO அல்லது MD OG தேர்ச்சி பெற்ற மருத்துவர் பணியில் இருப்பார். மற்றும் அங்கு அறுவை அரங்கும் தயார் நிலையில் இருக்கும்

எனவே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவரை அழைத்து வரும் தேவையே இல்லை

மேலும் பல ஆரம்ப சுகாதார நிலையத்தில் (சில நிலையங்கள் தவிர) அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை

எனவே நோயாளியை 108 பிணியாளர் ஊர்தி மூலம் அருகிலுள்ள சீமாங்க நிலையத்திற்கு அனுப்புவதே சிறந்த வழிமுறை

Bruno August 4, 2010 at 12:45 PM  

//சுரேஷ்,
புருனோவின் பதிவை முன்னரே படித்துள்ளேன். இருந்தாலும் ஆரம்பசுகாதரப் பணியில் தலைமை மருத்துவர் 24 மணி நேரமும் வேலைக்கு தயாராக (போலீஸ் / நீதிபதி போல) இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதை விளங்கிக் கொள்ளவே கேட்டேன்.//

இதை என் பதிவிலேயே கேட்டிருக்கலாமே :) :)

ஆரம்ப சுகாதார நிலையம் என்பது முதல் நிலை வைத்தியத்திற்கு உள்ளது

உங்கள் புரிதலில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது

என் இடுகையில் கேட்டால் விளக்க தயார்

Bruno August 4, 2010 at 12:50 PM  

//
சுரேஷ்,
புருனோவின் பதிவை முன்னரே படித்துள்ளேன். இருந்தாலும் ஆரம்பசுகாதரப் பணியில் தலைமை மருத்துவர் 24 மணி நேரமும் வேலைக்கு தயாராக (போலீஸ் / நீதிபதி போல) இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதை விளங்கிக் கொள்ளவே கேட்டேன்.//

சுனாமி, வெள்ளம், விபத்து, காலரா போன்ற (பொது சுகாதாரம் தொடர்பான) இயற்கை சீற்றங்களுக்கு மருத்துவர் 24 மணிநேரமும் பணியில் இருக்க வேண்டும்.

மற்றப்படி ஆரம்ப சுகாதார நிலையம் என்பது முதல் நிலை வைத்திய நிலையம் என்பதால் காய்ச்சல், தலைவலி, போன்ற தனிநபர் நோய்களுக்கு வேலை நேரத்திற்கு பிறகு வந்து பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை

இது என் இடுகையில் தெளிவாக விபரமாக உள்ளது

உங்களுக்கு மூன்று நிலை வைத்தியங்கள் பற்றி தெரியும் தானே

தெரியவில்லை என்றால் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம் என்ற இடுகையை வாசிக்கவும்

Bruno August 4, 2010 at 12:51 PM  

//நான் லோகாஸ்ட் http://www.locostindia.com
பற்றிச் சொன்னது தனிமருத்துவ மனைகளில் பணியாற்றும் அல்லது தனியாக கிளினிக் வைத்து இருக்கும் மருத்துவர்களுக்காக. அவர்கள் எல்லாம் ஒரு சிண்டிகேட் அமைத்து செயல்பட்டால் நல்லது.//

அதற்கும் முன்னர் அவர்களை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்

//குடும்ப டூர், டிவி, பிரிட்ஜ் என்ற எல்லா வித மருந்துவிற்கும் மருந்துக் கம்பனிகளின் டாக்டட் பேக்கேஜ் நடைமுறைகளும் தெரிந்தமையால் சொல்கிறேன். :-(((//

பரவாயில்லை

எனக்கு இது வரை யாரும் குடும்ப டூட், டிவி, பிரிட்ஜ் போன்றவை அளித்ததில்லை

இப்படி எல்லாம் உள்ளது என்று தெரிவித்ததற்கு நன்றி :) :)

Bruno August 4, 2010 at 12:54 PM  

//அதே ..
மருத்துவருக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய கடமை சென்னையில் தலைமையிடம் கொண்டுள்ள அரசைவிட அந்த ஊரில் வாழும் மக்களுக்கு அதிகம் உள்ளது.//

மருத்துவரின் குடியிருப்பை நாசம் செய்து அதில் அவர் தங்கி இருக்க முடியாத நிலைக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றுபவர் அந்த ஊரின் போலி மருத்துவர்(கள்) தான்

//பொது மக்கள் நினைத்தால் தங்கள் மருத்துவர் மற்றும் காவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான நல்ல அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.//
பெரிதாக ஒன்றும் வேண்டாம்
வண்டியை பஞ்சர் செய்வது, பெயர் பலகையை உடைப்பது, வீட்டிற்கு தொலைபேசி செய்து ஊரை காலி பண்ணிவிடு என்று மிரட்டுவது போன்ற செயல்களை செய்யாமல் இருந்தால் போதும்

Bruno August 4, 2010 at 12:56 PM  

//மருத்துவர்களிலேயே இரண்டு வகையினர் உள்ளனர் .. மெரிட் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்து வருபவர்கள், நன்கொடை கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருபவர்கள்..முதலாம் வகையினர் பெரும்பாலும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்..அவர்களில் பெரும்பாலோர் ஆத்மதிருப்தியுடன் கூடிய சேவையை தர விரும்புபவர்கள்..ஆனால் பணமின்றி இலவச சேவை செய்ய இயலாதவர்கள்..இரண்டாம் வகையினர் பணம் படைத்தவர்கள்..மருத்துவத்தை வியாபாரமாக ஆக்குவதில் இவர்களுக்கே பெரும்பங்கு உண்டு.இந்த இரண்டு வகையினரையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதில்தான் சமூகத்தின் தவறு இருக்கிறது...//

வழிமொழிகிறேன்

Bruno August 4, 2010 at 12:57 PM  

//உண்மை தான் டாக்டர் ! இரண்டு வகையினரில் எந்த பிரிவினர் அதிகம் என்பதும் முக்கியமானது.முதலாம் பிரிவினர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம்.ஆனால் மருத்துவமனைகளை வைத்திருப்பவர்கள் இரண்டாம் வகையினர் என்பது தானே கசப்பான உண்மை.//

நீங்கள் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்

அங்கு முதலாவது பிரிவினர் தான் அதிகம்

Bruno August 4, 2010 at 12:58 PM  

// இரண்டு வகையினரில் எந்த பிரிவினர் அதிகம் என்பதும் முக்கியமானது.முதலாம் பிரிவினர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம்.ஆனால் மருத்துவமனைகளை வைத்திருப்பவர்கள் இரண்டாம் வகையினர் என்பது தானே கசப்பான உண்மை ./

இது குறித்த மேலும் சில விபரங்கள்

Bruno August 4, 2010 at 1:00 PM  

//இத்தகைய குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட உங்கள் மீது வைக்கப் படுவதாக நீங்கள் ஒருபோதும் எண்ணாதீர்கள் ...நீவீர் விதிவிலக்குகள் ...30%... பணம் தான் உங்களை போன்றவர்களுக்கு முக்கியமெனில் வெட்டியாய் கம்ப்யூட்டர் முன்னமர்ந்து வலைப்பூ எழுதும் நேரத்தில் பத்து கேஸ் பார்த்து பணம் பண்ணியிருப்பீர்கள் ...//

:)

//ஜெயமோகனும் கல்வெட்டும் நானும் பாமர மக்களும் வைக்கும் கேள்விகளும் ஆதங்கமும் அந்த 70% நோக்கியே ...//

நியோ

எனக்கென்னவோ நீங்கள் சொல்லும் சதவிதம் மாற்றி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த இடுகையை பார்க்கவும்

Bruno August 4, 2010 at 1:03 PM  

//ஊசி போட்டால் அதை விற்பனை செய்யத்தக்க பொருளாக எண்ணி காசு கொடுக்க தயாராக இருப்பவர்கள் பரிசோதனை / ஆலோசனை என்ற சேவையை விற்கத்தகுந்த மதிப்புள்ள ஒன்றாகக் கருதுவது இல்லை. :-((

வளர்ந்த நக‌ரங்களில்கூட இந்தப் புரிதல் குறைபாடு உண்டு.//

தெளிவான புரிதல். நன்றி சார்

--

இது தான் அரசு மருத்துவமனைகளில் நடப்பது

அங்கு மாத்திரை அளித்தால் அது இரண்டு ரூபாய்க்கு பெறுமானமுள்ள வைத்தியம்

ஊசி போட்டால் இருபது ரூபாய்க்கு பெறுமானமுள்ள வைத்தியம்

சிரைவழி திரவம் ஏற்றினால் 200 ரூபாய்

--
கிராம மக்களின் கருத்து என்னவென்றால்

சிரை வழி திரவம் ஏற்றும் மருத்துவர் நல்லவர்

ஊசி போடுபவர் சராசரி

மாத்திரை எழுதுபவர் மோசடி பேர்வழி ஏனென்றால் அவர் 2 ரூபாய் மாத்திரையை மட்டும் அளித்து விட்டு 20 ரூபாய் ஊசியை அவர் கிளினிக்கிற்கு எடுத்து சென்று விடுகிறார் :) :) :)

கல்வெட்டு August 4, 2010 at 1:20 PM  

.

//புருனோ...

இவர்கல் மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு மருந்து கண்டுபிடித்துள்ளார்களா அல்லது பிற நிறுவனங்கள் கண்டுபிடித்து பரிசோதித்து பாதுகாப்பானது மற்றும் பலனுள்ளது என்று ஆவணப்படுத்திய மருந்து பொருட்களை தயார் செய்ய மட்டும் செய்கிறார்களா என்று தெரிந்து கொள்ள ஆவல்//


நீங்கள் "இவர்கள்" என்று சொல்வது http://www.locostindia.com
பற்றியா?

இவர்கள் மட்டும் அல்ல இந்தியாவில் யாரும் அலோபதி மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இல்லை. எல்லாம் இறக்குமதி ஜெனரிக் பார்முலா என்பதே எனது எண்ணம். அப்படி ஏதாவது இந்திய கம்பெனிகளின் கண்டுபிடிப்புகளின் பட்டியல் இருந்தால் தெரிந்துகொள்ள ஆவல்.

இவர்கள் ஏதும் கண்டுபிடிக்காவிட்டாலும் ஒரே வியாதிக்கான தரமான மருந்தை மற்றவர்களைவிடக் குறைவான விலையில் கொடுத்தால் ஏற்றுக் கொண்டு , இவர்களை பரிந்துரைத்து இவர்களின் சந்தையை ஊக்குவிப்பதில் என்ன தவறு?

‍======================

// புருனோ...
அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டீஸ் செய்வதை தடை செய்ய நீங்கள் ஏதாவது இயக்கம் ஆரம்பித்தால் சொல்லுங்கள்//


நிச்சயம் :-)))


======


//கல்வெட்டு....மகப்பேறு போன்ற சம்பவங்களில் இரவு வேளையில் மருத்துவர் ஆரம்பசுகாதர நிலையத்தில் இல்லாமல், அவரது தனி மருத்துவமனையில் இருந்து அழைத்து வர சிரமப்பட்டது உண்டு.//

//புருனோ..
எனவே நோயாளியை 108 பிணியாளர் ஊர்தி மூலம் அருகிலுள்ள சீமாங்க நிலையத்திற்கு அனுப்புவதே சிறந்த வழிமுறை//


டாக்டர்...நான் சொல்வது 20 ஆண்டுகளுக்கு முன்பு. 108 அப்போது இல்லை என்றே நினைக்கிறேன்.

**

ஆனால் இன்றும் அரசு மருத்துவரே தனியாக வீட்டில் படுக்கை வசதி வைத்து , "அங்க வாங்க நல்லா பார்க்கலாம்" என்று அழைத்து சிகிச்சை செய்தது உண்டு.

நான் ஏற்கனவே சொன்னது போல 10 சதவீதம் தவறு செய்பவர்களால் மற்றவர்களுக்கும் அவப்பெயர் என்ற புரிதலுடனே நான் சொல்கிறேன்.

====


//புருனோ...
ஆரம்ப சுகாதார நிலையம் என்பது முதல் நிலை வைத்தியத்திற்கு உள்ளது
உங்கள் புரிதலில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது //


ம்ம்... தேர்வுநிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள‌ ஆரம்ப சுகாதர நிலையத்தில் எல்லாமே ஒரே இடத்தில் ஒரே கட்டிடத்தில் ஒரே தலைமை மருத்துவரின் தலைமையில் இயங்கியது. முதல் வைத்தியம் , மகப்பேறு என்ற உட்பிரிவுகள் நிர்வாகத்திற்காக துறைசார்ந்து பிரிக்கப்பட்டு இருந்திருக்கலாம். எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .

.

கல்வெட்டு August 4, 2010 at 1:32 PM  

.

டாக்டர் புருனோ, சுரேஷ், ராம் மற்றும் நான் அறியாத மருத்துவப் பதிவர்களுக்கு...

கல்வி, ஆரம்பசுகாதரம் எளிய சட்டங்களைப் புரிந்து கொள்ளுதல் செயல்படுத்துதல் போன்றவற்றில் மக்களும் அரசும் ஒத்து இயங்கவேன்டும் என்று நினைக்கும் மிகச்சாதரணமானவன் நான்.

பதிவு வழியாக உங்களிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைப்பதால் பயன்படுத்திக்கொள்கிறேன் அவ்வளவே. அதைத்தாண்டி மருத்துவ அறிவோ அல்லது மருத்துவம் சார்ந்த அரசுத்துறையின் சட்டங்களோ, உங்களுக்குத் தெரிந்ததில் ஒரு சதவீதம் மட்டுமே எனக்கு தெரிந்து இருக்கும்.

எனவே, எனது கேள்விகளை உங்களை நோக்கிய தனிப்பட்ட விமர்சனமாகக் கொள்ளாமல் மருத்துவம்/அரசு மருத்துவத்துறைகளில் பொதுப்புத்தியில் இருந்து கேள்வி கேட்கும் ஒரு சாதரண இராம‌சேசன் அல்லது பத்மநாபன் என்று எடுத்துக் கொண்டு உங்களின் துறைசார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும்.

உங்களின் நேரம், கடமை, உண்மையைச் சொல்ல நினைக்கும் வேகம் போன்றவற்றை மதிக்கிறேன்.


.

கல்வெட்டு August 4, 2010 at 1:39 PM  

.

// புருனோ..
பெரிதாக ஒன்றும் வேண்டாம் , வண்டியை பஞ்சர் செய்வது, பெயர் பலகையை உடைப்பது, வீட்டிற்கு தொலைபேசி செய்து ஊரை காலி பண்ணிவிடு என்று மிரட்டுவது போன்ற செயல்களை செய்யாமல் இருந்தால் போதும்
//

:‍-))

அனுசரித்துப் போகாவிட்டால் அய்யேஎஸ் ஆபிசரா இருந்தாலும் சங்குதான். இதெல்லாம் தெரியாத டாக்டர் நமக்கு. :-))

இதையும் தாண்டி நல்லது நடந்துவிடாத என்ற எண்ணம்தான்.

.

அ.முத்து பிரகாஷ் August 5, 2010 at 12:27 AM  

//நியோ
எனக்கென்னவோ நீங்கள் சொல்லும் சதவிதம் மாற்றி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த இடுகையை பார்க்கவும் //

டாக்டர் ப்ருனோ !
நீங்கள் அளித்த சுட்டிக்கு நன்றி!

எனக்கு பாரத கதையில் தருமன் ஊரிலுள்ள கெட்டவர்களை கணக்கெடுக்க சென்று விட்டு யாருமில்லை என்று சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகின்றது !

உரையாடலுக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொள்கிறேன் டாக்டர் !

அ.முத்து பிரகாஷ் August 5, 2010 at 12:28 AM  

//நியோ
எனக்கென்னவோ நீங்கள் சொல்லும் சதவிதம் மாற்றி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த இடுகையை பார்க்கவும் //

டாக்டர் ப்ருனோ !
நீங்கள் அளித்த சுட்டிக்கு நன்றி!

எனக்கு பாரத கதையில் தருமன் ஊரிலுள்ள கெட்டவர்களை கணக்கெடுக்க சென்று விட்டு யாருமில்லை என்று சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகின்றது !

உரையாடலுக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொள்கிறேன் டாக்டர் !

Anonymous,  August 5, 2010 at 2:26 AM  

//இவர்கள் மட்டும் அல்ல இந்தியாவில் யாரும் அலோபதி மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இல்லை. எல்லாம் இறக்குமதி ஜெனரிக் பார்முலா என்பதே எனது எண்ணம். அப்படி ஏதாவது இந்திய கம்பெனிகளின் கண்டுபிடிப்புகளின் பட்டியல் இருந்தால் தெரிந்துகொள்ள ஆவல். //

ஆராய்ச்சி செய்து புதிய மருந்துக்களை கண்டுபிடிப்பவர்களும், அதை நோகாமல் பிரதி எடுத்து தயாரிப்பவர்களும் ஒரே விலையில் விற்பது சாத்தியமா

Bruno August 5, 2010 at 2:29 AM  

//
எனவே, எனது கேள்விகளை உங்களை நோக்கிய தனிப்பட்ட விமர்சனமாகக் கொள்ளாமல் மருத்துவம்/அரசு மருத்துவத்துறைகளில் பொதுப்புத்தியில் இருந்து கேள்வி கேட்கும் ஒரு சாதரண இராம‌சேசன் அல்லது பத்மநாபன் என்று எடுத்துக் கொண்டு உங்களின் துறைசார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும்.

உங்களின் நேரம், கடமை, உண்மையைச் சொல்ல நினைக்கும் வேகம் போன்றவற்றை மதிக்கிறேன்.//

கல்வெட்டு சார்

உங்கள் கேள்விகளின் நோக்கம் புரிவதால் தான் விளக்கமாக பதிலளிக்கிறோம்

Bruno August 5, 2010 at 2:29 AM  

//
:‍-))

அனுசரித்துப் போகாவிட்டால் அய்யேஎஸ் ஆபிசரா இருந்தாலும் சங்குதான். இதெல்லாம் தெரியாத டாக்டர் நமக்கு. :-))

இதையும் தாண்டி நல்லது நடந்துவிடாத என்ற எண்ணம்தான்.
//

நடக்கும்

கடந்த 20 ஆண்டுகளாக நிலைமை முன்னேறி வருகிறதே தவிர கீழிறங்க வில்லை

எனவே இனி மேலும் முன்னேற்றம் தான் நடக்கும்

Bruno August 5, 2010 at 2:30 AM  

//எனக்கு பாரத கதையில் தருமன் ஊரிலுள்ள கெட்டவர்களை கணக்கெடுக்க சென்று விட்டு யாருமில்லை என்று சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகின்றது !

உரையாடலுக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொள்கிறேன் டாக்டர் !//

ஹி ஹி ஹி
எனக்கு துரியோதனன் ஞாபகம் வருகிறது சார் :) :)

கேள்விகள் இருந்தால் கேட்கலாம்

Bruno August 5, 2010 at 3:32 AM  

//இவர்கள் மட்டும் அல்ல இந்தியாவில் யாரும் அலோபதி மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இல்லை. எல்லாம் இறக்குமதி ஜெனரிக் பார்முலா என்பதே எனது எண்ணம். அப்படி ஏதாவது இந்திய கம்பெனிகளின் கண்டுபிடிப்புகளின் பட்டியல் இருந்தால் தெரிந்துகொள்ள ஆவல். //

ஆராய்ச்சி செய்து புதிய மருந்துக்களை கண்டுபிடிப்பவர்களும், அதை நோகாமல் பிரதி எடுத்து தயாரிப்பவர்களும் ஒரே விலையில் விற்பது சாத்தியமா

-

இது நான் இட்ட மறுமொழியே

எப்படி அனானியானது என்று தெரியவில்லை

கல்வெட்டு August 5, 2010 at 4:27 AM  

.


//புருனோ Bruno, August 5, 2010 3:32 AM
ஆராய்ச்சி செய்து புதிய மருந்துக்களை கண்டுபிடிப்பவர்களும், அதை நோகாமல் பிரதி எடுத்து தயாரிப்பவர்களும் ஒரே விலையில் விற்பது சாத்தியமா//

புருனோ
ஜெனரிக், காப்பிரைட் காலாவதி பற்றிய புரிதலுடன்...

ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்து அந்த கம்பெனியால் மட்டுமே சில காலத்திற்கு சந்தைப்படுத்தமுடியும். மற்ற ஒருவர் அதைச் அவர்களுக்குத் தெரியாமல் சந்தைப்படுத்த தயாரிக்க முடியாது. சட்டப்படி குற்றம்.

ஆனால், அதற்கான காலம் (உதாரணம் 10 ஆண்டுகள் என்று கொள்வோம்) முடிந்தவுடன் அது ஜெனரிக்காக மாறி யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும்.

எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் காப்பிரைட் காலம் உண்டு. மருந்துகளுக்கு என்று ஒரு காலம் உண்டு.

உதாரணம்...

Pfizer will lose its patent for Viagra on March 27, 2012, according to the U.S. Patent and Trademark Office, at which point any drug company will be able to make and sell a cheap "generic" version of the blockbuster erectile dysfunction (ED) drug.

http://www.accessrx.com/research/viagra-patent-expires.htm

அந்தக் காலம் தாண்டியபிறகு , தரமான ஒன்றை (முக்கியம் தரம்) சகாயவிலையில் கொடுத்தால் வாங்குவதில் என்ன தவறு?

இங்கே கண்டுபிடிப்பு என்பதும் அதன் உழைப்பும் போற்றத்தக்கது.

ஆனால், சட்டப்படி பேட்டண்ட் எக்ஸ்பயர் ஆன ஒன்று ஜெனரிக் drug ஆனவுடன் தரத்துடன் மலிவு விலையில் தயாரிக்கமுடியும். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சட்டப்படி ஜெனரிக்கான ஒன்றை தரம் சரியில்லை என்று சொல்லுங்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பேட்டண்ட் எக்ஸ்பயர் ஆனபின்னாலும் கண்டுபிடித்தவர்களிடமே அதிக விலையில் வாங்க வேண்டும் என்றால் குளுகோஸ்பவுடர்கூட சகாயமாகக்கிடைக்காது.

மருந்துகளுக்கான பேட்டண்ட் சட்டமும் அதற்கான காலவரம்பும் இதைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டவை.

.

புருனோ Bruno August 5, 2010 at 4:42 AM  

கல்வெட்டு சார்
விளக்கத்திற்கு நன்றி

Sweatha Sanjana,  August 5, 2010 at 8:28 PM  

பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP