தீபாவளியன்று உங்கள் கடமை
அப்போது நான் பயிற்சி மாணவன். பயிற்சி மருத்துவர் என்றும் சொல்வார்கள். தேர்வில் தேர்ச்சி அடைந்து இந்திய மருத்துவ கழகத்தில் ( medical council of india ) பதிவும் செய்துவிட்டிருந்தோம். எந்த நாட்டில் எவ்வளவு பெரிய மருத்துவப் படிப்புகள் படித்திருந்தாலும் medical council of india பதிவு செய்திருக்கவில்லையென்றால் போலி மருத்துவராகவே கருதப் படுவார்.
தீபாவளிக்கு முதல்நாள். எலும்பு சிகிச்சைப் பிரிவில் பணி. எலும்பு சிகிச்சைப் பிரிவிலிருந்து விபத்து சிகிச்சைப் பகுதிக்கு அன்று எனக்கு 24 மணிநேர பணியாக அமைந்திருந்தது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மற்ற அனைத்து துறையினரும் கூடுதலாக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வது போல எங்களைப் போல சில துறைகள் முடியாது. அன்று எனக்கும் தீபாவளி அன்று விடுப்பு அனுமதித்து இருந்தார்கள். ஆனால் முதல் நாள் 24மணிநேர பணி. தீபாவளி காலையில் 8மணிஅளவில் விடுவிக்கப் படுவேன். அதற்குப் பிறகு புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து..., அதனால் விடுப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த விடுப்பு வேறொருவருக்கு வழங்கப் பட்டுவிட்டது.
நம்து ஊரில் எலுமிச்சை, அன்னாசி, பலாப் பழங்கள் கதை சொல்வார்களே அது போல இருந்திருந்தது. விபத்து சிகிச்சைப் பிரிவில் அன்றைய பொழுதில் பணிக்குச் சென்ற போது. என்னோடு அன்று பணியில் இருந்த முதுகலை பயிற்சி மருத்துவருக்கு மறுநாள் தலைதீபாவளி. அவரது அலகில் அவர் மட்டுமே முதுகலைப் பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த 24மணிநேரப் பணியினை அவரே ஏற்றுச் செய்ய வேண்டிய நிலை. அவரை ஒப்பு நோக்க நமது நிலை எவ்வளவோ பரவாயில்லை.
மாலை நேரத்தில் அவர் பணியிலிருந்த உதவிப் பேராசிரியரைச் சந்தித்தார். உடன் என்னையும் வைத்துக் கொண்டுதான் பேசினார். மறுநாள் தனக்கு தலைதீபாவளி என்பதால் கொஞ்சம் முன்னதாகவே திரும்ப அனுமதி கேட்டார். பயிற்சி நிறைவை நோக்கியுள்ள பயிற்சி மருத்துவர் மற்றும் உதவிப் பேராசியர் , செவிலியர்கள் என்று ஒரு முழுமையான அணி இருந்த காரணத்தால் உதவிப் பேராசியரும் அவருக்கு காலை 3 மணி அளவில் செல்ல அனுமதி அளித்தார். 3 மணிக்கு மேல் வரும் நோயாளிகளை முதுகலை பயிற்சி மருத்துவருக்குப் பதிலாக உதவிப் பேராசியரே கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.
இரவு நேரத்தில் உணவுக்காக கோயமுத்தூரின் மிக முக்கிய இடங்கள் எல்லாம் சென்றும் கூட உணவு என்பது மிகக் கடினமாகவே இருந்தது. பியூப்பில்'ச் பார்க் போன்ற மிகச் சில உணவகங்களே திற்ந்திருந்தன. மற்ற உணவங்கள் பெரும்பாலும் விடுப்பாக அமைந்திருந்தன. விடுதி உண்வகம் உட்பட..
தீபாவளிக்கு முதல்நாள் இரவு பத்துமணிவரை பணி சராசரி அளவிலேயே வேலை இருந்தது. அதற்கடுத்து கொஞ்சம் பிஸி....,
குடித்துவிட்டு வண்டி ஓட்டிவிட்டு விழுந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தனர். விபத்துப் பதிவேடு, காவலர் அறிக்கை, மற்றும் நோயாளி பதிவேடு போன்றவைகளில் முதுகலை மருத்துவரும், காயங்களை சரிசெய்வது, தையல் போடுவது, போன்ற பணிகளை நானும், மற்றும் இன்னபிற வேலைகளை அவரவரும் செய்ய ஆரம்பித்தோம்.
மணி12ஐ நெருங்கும்போது கூட்டம் எல்லைமீர ஆரம்பித்தது. கூடுதல் மருத்துவர்களை அழைக்க விரும்பினோம். அழைத்தால் விடுப்பில் இருப்பவர்களின் திட்டுக்களை வாங்க வேண்டும் என்பதால் கூட்டத்தினை நாங்களே சமாளிக்கத் தீர்மாணித்தோம். முடிந்த அளவு மிக வேகமாக பணிகள் நடந்தன. அனைத்து பணிகளையும் உதவிப் பேராசிரியர் நேரடியாகக் கண்காணித்து எந்த தவறும் நேராமல் பார்த்துக் கொண்டிருந்தார். முதுகலை மருத்துவர் பயிற்சி மருத்துவர் தலைதீபாவளிக்காகச் சேலத்திற்குச் செல்ல வேண்டியவர்.
குறிப்பிட்ட கால கட்டத்தில் கூட்டம் குறையத் தொடங்கியது. எங்கள் பணிகளை நிறைவு செய்துவிட்டு, இருப்பிட செவிலியரை அழைத்தார் முதுகலை மருத்துவர். சிஸ்டர் நான் கொஞ்சம் முன்னாடியே புறப்படுகிறேன். கேஸ் வந்தால் தம்பிய பார்க்கச் சொல்லுங்க. கொஞ்சம் சிரமமான கேஸ் அப்படின்னா உதவிப் பேராசிரியர் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். அதனால் நான் புறப்படுகிறேன்.
அதற்கு செவிலியர்
சார் மணி இப்ப காலை 9, என்னோட ரிலீவர் வந்து ஒருமணிநேரம் ஆச்சு. உங்க ரிலீவரும் எப்பவோ வந்துட்டாங்க , நீங்க பார்த்த கேஸ் லிஸ்ட் எல்லாம் ஒழுங்கு படுத்திக் கொடுத்தால் அவரவர் அடுத்த டூட்டி பார்ப்பவர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டுப் போய் கொண்டே இருக்கலாம். (அதாவது அவரது பணிநேரம் முடிந்தும் பிறகும் அவர் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அவரக்கு அடுத்த் பணிக்கு வருபவர் வந்துவிட்டதால் அவருக்கு நோயாளிகள் வருவது குறைந்திருக்கிறது)
என்று ஒரே போடாகப் போட்டார்.
அந்த முதுகலை பயிற்சி மருத்துவர் திருதிருவென்று விழித்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டு இருக்கிறது.
===================================================================
இந்த ஆண்டும் தீபாவளிக்கு முதல்நாள் அப்படித்தான். விடுப்பு விண்ணப்பம் கொடுத்த மருத்துவர், செவிலியர், மற்றும் பணியாளர்கள் அனைவரிடமும் ஒரு நாள் அரைநாள்தான் விடுப்புக் கொடுக்க முடியும் என்று கண்டிப்பாகச் சொல்லி அனைத்து நிலைகளிலும் பணீக்கு ஆள் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுவந்து விட்டேன்.
நீங்கள் தீபாவளி கொண்டாத நபர்களாக இருந்தால் இன்னும் வசதியாக போயிற்று. திராவிட, ஆரியக் கதைகளை விட்டு விடுங்கள். இன்று உங்களுக்காக தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு பணியில் உள்ள நபர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்களுடன் கொண்டாடுங்கள்.
தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்