Wednesday, February 24, 2010

அடடே' அரசு மருத்துவமனை! - துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையம்

அடடே' அரசு மருத்துவமனை!

அசுத்தம் இல்லை... அமுக்கல் இல்லை...

'இது உங்கள் மருத்துவமனை. சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்...' - அரசு மருத்துவமனை சுவர்களில் வழக்கமாகத் தென்படும் வாசகம் இது! இதை நிஜமாகவே படுசீரியஸாகப் பின்பற்றும் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோவை மாவட்டம் துடியலூரில் இருப்பது சந்தோஷமான விஷயம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த ஆரம்ப சுகாதர நிலையம்தான், தமிழகத்திலேயே 'தி பெஸ்ட்' என அடித்துச் சொல்லுகிறார்கள் சுகாதாரத் துறையினர். சமீபத்தில், இந்த மருத்துவமனைக்கு விசிட் அடித்துச் சென்ற சுகாதாரத் துறைச் செயலாளரான சுப்புராஜ், சுத்தம் மற்றும் பணியாளர்களின் சுறுசுறுப்பைப் பாராட்டி கடிதம் அனுப்பி இருக்கிறார்.

மருத்துவமனையில் பிரசவத்துக்காக அட்மிட் ஆகியுள்ள அம்பிகா என்ற


பெண்மணியிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்களுக்கு வசதி, வாய்ப்பு எதுவும் இல்லீங்க. தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க முடியாது. இங்க நல்லா பிரசவம் பார்க்குறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன். உண்மையிலே என்னை தங்கமா பார்த்துக்குறாங்க சார். எதுக்குமே பணம் கேட்காத இந்த இடத்துக்கு கடவுளா பார்த்துதான் என்னைய அனுப்பியிருக்கான்!'' என்றார் நெகிழ்ச்சியோடு.

அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்று சுட்டிக்கட்டப்படும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அலுவலரான (பொறுப்பு) உமா மகேஸ்வரியை சந்தித்தோம்.

''இன்னிக்கு இருக்குற தலைமுறையில் சுத்தம், சுகாதாரத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக் குறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் மாறித்தானே ஆகணும்! துடியலூர் சுகாதார நிலையத்துல முந்தி குப்பையாத்தான் இருந்துச்சு. அந்த ஏரியாவையே மாத்திக்காட்டணும்னு முடிவு பண்ணேன். போன வருஷம் அந்த சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கி இருந்த 1.75 லட்சம் ரூபாயை வெச்சுக்கிட்டு,உள்கட்டமைப்புகளை முழுசா மாத்தி அமைக்குற வேலையை ஆரம்பிச்சோம். இதைப் பாத்துட்டு, 'சூப்பர்'னு பாராட்டுன பொது சுகாதாரத் துறை உயரதிகாரிங்க, தேவையான அளவுக்கு பணம் ஒதுக்கீடு பண்ணினாங்க.

டாக்டர்கிட்ட, நோயாளிங்க மனம்விட்டு ரிலாக்ஸா பேசுறதுக்காக, தனியார் மருத்துவமனையில கேபின் அமைச்சிருப்பாங்க. அதுமாதிரி, எங்க டாக்டர்களுக்கும் தனித்தனி கேபின் அமைச்சுக் கொடுத்தோம். மருந்து, மாத்திரைகளை தனித்தனியா பிரிச்சு வைக்குறதுக்காக பார்மஸியையும் மேம்படுத்தினோம்.

இங்கே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் பிரசவத்துக்கு அதிகளவுல வர்றாங்க. அவங்க கொண்டு வர்ற மாற்றுத் துணிகளைப் பத்திரப்படுத்தி வைக்கிறதுக்கு இடமே இல்ல. அதுக்காக தனித்தனி லாக்கர் வசதி செஞ்சு கொடுத்தோம். ஏழைப் பெண்களால கைக்குழந்தைக்கு போட்டுவிடுறதுக்கு டிரஸ் வாங்ககூட முடியாத நிலைமை இருக்கு. ரொம்பப் பேரோட வீடுகளோட நிலைமையும் மோசமா இருக்கு. அதனால, எங்க ஆரம்ப சுகாதார நிலையத்துல ஆண் குழந்தை பொறந்தா நீல நிறத்துல இருக்குற மெத்தையும் , பெண் குழந்தைன்னா பிங்க் கலர் மெத்தையும் இலவசமா கொடுக்குறோம். அந்த மெத்தைக்குள்ளே ஒரு செட் துணியும் இருக்கும். அந்த பச்சிளம் குழந்தைகளுக்காக கரூர்ல இருந்து ஆர்டர் பண்ணி மெத்தையை வாங்கிக் கொடுக்குறோம்.

பெண்கள் கருவுற்ற 25 வாரம் முதல் 30 வாரத்துக்குள்ள ஸ்கேன் செஞ்சு பாத்துடுறது நல்லது. அப்போத்தான் குழந்தை என்ன நிலையில வயித்துக்குள்ள இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். எங்ககிட்ட இருக்குறது 'ரெசல்யூஷன்' குறைவான ஸ்கேன் இயந்திரம். இதுல அத்தனை துல்லியமான ரிப்போர்ட் கிடைக்காது. அதுக்காக கோவை ஆர்.எஸ்.புரத்துல இருக்குற ஒரு தனியார் ஸ்கேன் சென்டர்ல உதவி கேட்டோம். அவங்களும் தயங்காம இலவசமா ஸ்கேன் எடுத்துக் கொடுக்குறாங்க. இதுவரைக்கும் ஆயிரத்து 300 ஸ்கேன் எடுத்துக்கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன். அதோட மதிப்பு மட்டும் 14 லட்சம் ரூபாய். இந்த மாதிரி நல்லவங்க உதவியும் சேர்ந்திருப்பதால்தான், தரமான சிகிச்சையை ஏழைகளுக்கும் கொடுக்க முடியுது.

வாரந்தோறும் புதன்கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்கோம். குழந்தைகளைக் கொண்டு வர்ற பெற்றோருக்கு, தடுப்பூசி போடுற மையத்துல உட்கார்றதுக்குக்கூட இடவசதி இல்லாம இருந்துச்சு. அந்த இடத்துல இப்போ 30 பேரு உட்கார்ற அளவுக்கு இட வசதியை உருவாக்கிட்டோம். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் புறநோயாளிகள் 400 பேருக்கு மேல வர்றாங்க. அவங்க யாருமே வரிசையா வராததால, ஒரே தள்ளுமுள்ளு நிலைமை இருந்துச்சு. அந்தப் பிரச்னையை சரிசெய்யுறதுக்காக டோக்கன் சிஸ்டத்தை கொண்டு வந்திருக்கோம். புற நோயாளிகள் வந்தா, அவங்க கையில டோக்கனை கொடுத்துடுவோம். டோக்கன் நம்பரைக் கூப்பிட்டா மட்டும் டாக்டரைப் பார்க்குறதுக்கு அவங்க உள்ளே போவாங்க. இந்த முறையால தள்ளுமுள்ளு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைச்சது.

தனியார் மருத்துவமனையில வேலைபார்க்குற நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருப்பாங்க. அதுமாதிரி, எங்களோட நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருக்கோம். தனியார் மருத்துவமனைக்கு நிகரா உள்கட்டமைப்பு வசதியை செய்யுறதுக்கு 4.50 லட்சம் ரூபாய்தான் செலவானது. சிசேரியன் மூலமா பிரசவம் பார்க்குறதுக்கு தேவையான ஆபரேஷன் தியேட்டர் மட்டும் இங்க இல்ல. இப்போ, அதுக்கும் நிதி ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க. கிராமங்கள்ல இருக்குற பெண்களுக்கு நல்ல மருத்துவ வசதியைக் கொடுக்கணும்ங்கிறதுதான் எங்களோட நோக்கம். நல்ல உள்ளங்களோட கரங்கள் எங்களோட இணைஞ்சா, கிராமப்புறங்கள்ல இன்னும் ஏராளமா மருத்துவ வசதியை எங்களால செஞ்சு கொடுக்க முடியும்!'' என்றார் நம்பிக்கையுடன்.

நல்ல உதாரணங்கள் எளிதில் பின்பற்றக் கூடியவை. ஆனால், அவற்றைச் செயல்படுத்த நல்ல மனிதர்களும் வேண்டுமே

--
நன்றி : ஜூனியர் விகடன்

Read more...

Tuesday, February 23, 2010

ஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் please

அகில இந்திய மருத்துவ மேல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தங்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்ய கலந்தாய்வு 23ம் தேதி ஆரம்பிக்கிறது.

அதற்கான கால அட்டவணை கொடுத்து இருக்கிறார்கள்.

கால அட்டவணை காண இங்கே செல்லுங்கள்.


அதில் சில குறிப்புகள் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்..


  • SC/ST/PH candidates should report 3 counseling days in advance of their scheduled date of
counseling but not before the date of commencing of counseling. Who have reported in advance may or may not get the seat allotted on the same day. If they do not get the seats allotted on the same day, they will be allotted the seats on the following day or dates or as mentioned in the schedule. Hence, they should make arrangements atleast for 2-3 days stay in the city of the venue.
  • If SC, ST & PH candidates fail to report in advance, he/she will be marked absent and will not be considered for the counseling even on the specified date as mentioned in the counseling schedule.
இவ்வாறு சில நாட்களுக்கு முன்பே வந்திருந்து தனது வருகையை உறுதி படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? 


ஒருவேளை சாதிச் சான்றிதழை உறுதி படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் ஒருமணிநேரமோ அல்லது அரைநாளோ முன்னால் வரச் சொன்னால் போதாதா?   அந்தச் சாதிச் சான்றிதழை வைத்துத்தான் அந்த நபர் தனது எம்.பி.பி.எஸ் படித்து இருக்கிறார். தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடிப்பதற்கு முன் சாதிச் சான்றிதழில் மெய்தன்மையை உறுதிபடுத்த சில நடவடிக்கைகள் எடுப்பார்கள். அது அரசு ஊழியர்களின் சாதிச் சான்றிதழ் மெய்பித்தல் அளவு உறுதித் தன்மை வாய்ந்தது. அது மாணவர்களாக இருக்கும்போதே தமிழக அரசு உறுதி படுத்திவிடுகிறது.

பிறகு ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?

PH மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை ஏனோ..,?


இந்த நடைமுறை துவக்கம் எப்படி, எவ்வாறு ஆரம்பித்தது என்பதை தெரிந்த யாராவது சொல்லுங்கள். அடிப்படைக் காரணம் இருந்தால் சொல்லுங்களேன்.

இது நுழைவுத்தேர்வு என்பதால் அனைத்து துறைகளுக்கும் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Thursday, February 18, 2010

மாமன் மகள் சிறுநீரோடு......,

நாட்டு மருத்துவச்சி:

வயதுப் பெண் மயங்கிவிழுந்தால்  நாடி பிடித்துப்பார்ப்பார். அவருக்கு இரட்டை நாடி இருப்பதாகவும் எனவே கர்ப்பமாக இருப்பதாக கூறுவார். இது பல திரைப்படங்களில் வரும் காட்சி.

ஹைப்பர் டைனமிக் பல்ஸ் கர்ப்ப காலத்தில் தோன்றுவது தான் ஆனால் அதற்கான பல காரணங்களில் கர்ப்பம் முக்கிய இடத்தில் கிடையாது.  ஆண்களுக்கும் அவ்வகை நாடித் துடிப்பு கிடைக்கும்.

நிகழ்வு: சில மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போய் இருப்பதையும் வாந்தி மயக்கம் மற்றும் திருமணம் ( அது காந்தர்வ முறையாக கூட இருக்கலாம்) பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு குத்து மதிப்பாய் கொடுக்கும் வாக்கியம் அது

ஆங்கில மருத்துவரை அனுகினால்

இதே போன்று கேள்விகள் கேட்டுவிட்டு

கர்ப்பம் என்றால் அதற்குரிய அட்டைப- சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்வார்

பொதுவாக ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின், சர்க்கரை மற்றும் நீரில் உப்பு சர்க்கரை பரிசோதனைகள் செய்யச் சொல்வார்.

----------------------------------------------------

அவருக்கு கர்ப்பம் என்பதை உறுதியாகச் சொல்லவேண்டும். தேவையில்லாமல் கர்ப்பம் என்பதை சொல்லி மனதை காயப் படுத்திவிடக்கூடாது. கர்ப்பம் என்றால் ஆரோக்கியமாக குழந்தை வளர வழிவகைகளை ஆயாயும் அவசியத்தை உணர்ந்தவராக இருப்பார்.

கர்ப்பம் இல்லாத மயக்கம் என்றால்   மயக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்தே தீரவேண்டும் என்ற கட்டாயங்கள் இருக்கின்றன. அதனால் இந்தப் பரிசோதனைகள் அவசியமாகின்றன


சில நேரங்களில்
இருதயப் படம் எடுக்கச் சொல்வார்.

சிலருக்கு தைராய்டு பரிசோதனைச் செய்யச் சொல்வார்.

மொத்தத்தில் கிராம மக்களின் மனதில் செலவு வைக்கும் நபராக நினைவில் பதிக்கப் பட்டுவிடுவார்.

========================================================

உடலில் ஏதாவது அரிப்பு, தடிப்பு ஏற்பட்டால்  எம்பிபிஎஸ் மருத்துவர் , ஊசி மாத்திரைகள் போடுவார். பல் நேரங்களில் சரி ஆகிவிடும். சில நேரங்களில் அது மீண்டும் மீண்டும் தொடர் அரிப்பாக மாறிவிடுவது உண்டு.  அதற்கு சிறப்பு மருத்துவரின் பார்வை, மற்றும் பல ரத்தப் பரிசோதனைகள் செய்யச் சொல்லுவார்..

கிராம மருத்துவரிடன் சென்றால்   மிகச் சுலபமான மருத்துவம் சொல்வார். மாமன் மகளின் ( பெண்களுக்கு மாமன் மகனுடயது) சிறுநீரைப் பிடித்து  அதில் அடுப்புச் சாம்பலை பூசி விட பெரும்பாலும் திரும்ப வராது.

நிகழ்வது. அரிப்பு பெரும்பாலும் ஒவ்வாமை மற்றும் அலர்ச்சி வகையறாகவே அமையும். தீவிர பக்க விளைவாக இருக்கும் வாய்ப்பும் மறுக்க இயலாது

நடப்பது:-

ஒவ்வாமை மற்றும் தீவிர எதிர்விளைவு ஆகியவையின் போது சுரக்கும் சுரப்புகள் தானியங்கி மண்டலம் மூலம் நடக்கின்றன.  அதனால் மருந்துகள் சாப்பிட்டாலும்கூட அரிப்பு, எரிச்சல் போன்றவை இருப்பதாக நினைத்தால் இருப்படு போலவே தென்படும்

அதாவது பூஜையின்போது குரங்கை நினைக்காதே என்று சொன்னால் அதுதான் நினைவுக்கு வரும் அல்லவா அதுபோல. பல நாட்டுவைத்தியர்களும் மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்று சொல்வதுண்டு.

அரிப்பு போல எரிச்சல் போல இருக்கும் நிகழ்வுகளுக்கு இதுபோன்ற மாமன் மகளின் சிறுநிரைத் தடவுதல் என்பதில் உள்ளூர வெறுத்து அரிப்பே இல்லை என்ற உள்மனநிலை எடுக்கப் பட்டு அரிப்பு குணமடைந்துவிடும். மற்ற தீவிர வகை எரிச்சல் அரிப்பு போன்றவை இவ்வாறு குணமடைவது இல்லை..

===================================================================
ஒரு அடி குழல் ஒன்று

ஒரு நுனி நோயாளியின் வாயை ஒட்டி,  மறுநுணி கிராமத்து ஹீரோவின் வாயில்  சில மந்திரங்கள் ஒரு உறுஞ்சு

குழாயிலிரூந்து தக்காளித் தோல் முதல்  குரங்கு குடல் வரை ஏதாவது வரும். அதன் காரணமாகவே வயிற்று வலி , இனிமேல் வயிற்று வலி இருக்காது என்று உறுதி கொடுக்கப் பட்டு அனுப்பப் படுவார்.

அறிவியல் பிண்ணனி:  உணவுக்குழலில் தொடர்ச்சியாக இடம் பெற்றிருப்பது இரைப்பை.  இரைப்பையிலிருந்து ஒரு பொருள் திரும்பவும் உணவுக்குழாய்க்கு வர மிகக் கடுமையான அழுத்தம் இரைப்பையிலிருந்து கொடுக்கப் பட வேண்டும். உதட்டை ஒட்டி லேசாக உறிஞ்சினால் எதுவும் வர இயலாது.  இது  முழுக்க முழுக்க நடைமுறையில் சாத்தியமில்லாதது.  ஆனால் எப்படி எடுக்கிறார்கள் என்பது அறிய வேண்டுமானால் முப்பது நாட்களில் மேஜிக் புத்தகம் வாங்கிப் படியுங்கள். அந்த அரிய பொக்கிஷம் அனைத்து மாரியம்மன் கோவில் திருவிழாக்களிலும் பொருட்காட்சிகளிலும் கிடைக்கும்.

நோயாளி குணமடைய காரணம்.: பொதுவாக வயிற்று வலிக்கு நோய் தொற்றும் வயிற்றுப் புண் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. திரவ ஆகாரமும் சில நாள் உணவுக் கட்டுப் பாடும் இது போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை அளிக்கக் கூடும்.


இதுவே எம்பிபிஸ் மருத்துவர் என்றால் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப் படும் வியாதிகள் அல்லது தொடர்சிகிச்சை செய்யும் வியாதிகள் இல்லை என்பதை  முதலிலேயே உறுதி படுத்தும் கடமை இருக்கிறது. ( நகர் பகுதியில் முதலிலேயே சொல்லவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றம் செல்லும் காட்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கிராமத்தில் கட்டைப் பஞ்சாயத்து ).

எனவே  அவர் சில நாள் மருத்துவ சிகிச்சையில் கட்டுப்படவில்லை என்றால் அவர் ஸ்கேன் முதலான பரிசோதனைகள் செய்யச் சொல்வார். கிராம வாசிக்கு அலைச்சலும், பணச் செலவும் ஏற்படுத்தும்.

அதே குழல் வைத்தியருக்கு அவரது வைத்தியமுறை பலிக்கவில்லை என்றால் பெரிய இக்கட்டு ஏதும் ஏற்படாது.

================================================================


இந்த இடுகை புரியவில்லை என்றால்

மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?

 கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்?

 

இடுகைகளை படித்துவிடுங்கள்


தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

இதன் அடுத்த பகுதி விரைவில் வெளிவரும்.

Read more...

Tuesday, February 9, 2010

மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?

எம்.பி.பி.எஸ் மருத்துவர் கிராமத்திற்குச் செல்லும்போது அவர் சந்திக்கக் கூடிய அடுத்த கட்ட பிரச்சனை சான்றிதழ்கள் வழங்குவது.  கடந்த சில ஆண்டுகள் அரசுப் பணிக்கு வந்த இளம் மருத்துவர்கள் கிராமத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் பகுதி இங்கே.  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்னும்போது அவருக்கு உதவியாக எப்படியும் சிலர் அங்கே இருப்பார்கள். சமாளிக்க முடியாமல் போகும்போது காவல்துறையை உடனடியாக அழைத்துக் கொள்ளலாம். அரசு மருத்துவமனையில் பிரச்சனை செய்தால் கிடைக்கக்கூடிய தண்டனைகள் பற்றி அரசல்புரசலாக தெரியும் என்பதால் பிரச்சனை செய்பவர்கள் யாராவது சமாதானம் செய்யவந்தாலே அமைதியாகிச் சென்று விடுவார்கள்.

தனியாக கிளினிக் கிராமத்தில் ஆரம்பித்தால் இந்த பிரச்சனைகளை அந்த ஒரே ஒரு மனிதர்( எம்.பி.பி.எஸ் மருத்துவர்) மட்டுமே  சந்தித்தாக வேண்டும். காவல்துறையினரை அழைக்க நினைத்தாலும் அதற்கு நேரம் கிடைக்காது.  எல்லாம் முடிந்த பின்னர் காவல்துறையை அழைப்பதற்கு கிளினிக்கை இழுத்து மூடிவிட்டு வேறிடம் சென்று விடலாம் அல்லது அரசுப் பணியை மட்டும் பார்த்துக் கொண்டு அமைதியாக காலம் தள்ளிக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்து விடுவார்.


சான்றிதழ்களில் விடுப்புச் சான்றிதழ்கள் பெரிய பிரச்ச்னையாக இருக்காது.   பணிகளில் இருப்பவர் லேசான வயிற்று வலி என்று சொல்லிவிட்டு ஒருவாரம் விடுப்பு வேண்டும் என்று கேட்பார். பொதுவாக விடுப்பு வழங்கும் அலுவலர் விடுப்புவழங்க தயாராக இருப்பதால் இந்த சான்றிதல் அடிப்படையில் விடுப்பு வழங்கி விடுவதால் பெரும்பாலும் பிரச்சனை வராது. மாணவர்களும் அதே நிலைதான்.

ஆனால் நோயாளியைப் பார்க்காமல் மருத்துவ சான்றிதழ் வழங்கி தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்ட மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த சான்றிதழ்கள் பற்றி பிறிதொரு இடுகையில் பார்க்கலாம்.

கிராமத்து மருத்துவர்களின் பிரச்சனைகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.  பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள்.

பிறப்புச் சான்றிதழ்கள்: இவை பிரசவம் பார்த்த மருத்துவர் பதிவு செய்ய வேண்டியது அவரின் கடமை என்பதால் இது ஒரு பிரச்சனை அல்ல.

இறப்புச் சான்றிதல்:

இயற்கை மரணத்திற்கு அந்த கிராமத்தில் இருக்கும் பிறப்பு இறப்பு பதிவாளர் பதிந்து விட்டால் அவரே கொடுத்துவிடுவார். ஆனால் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தால், அல்லது இளம் வயதில் மரணம் அடைந்துவிட்டால் மருத்துவ சான்றிதழுடன் வந்தால் தான் உடனே கொடுப்பதாக சொல்லிவிடுவார். ( மருத்துவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பிறப்பு இறப்பு பதிவாளர் சந்திக்கும் பிரச்சனைகளும் சளைத்தவை அல்ல).

நோயாளி இறந்தால் இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவருக்கு உண்டு.  இதில் தவறான தகவல் கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால்  நோயாளியைப் பார்க்காமல் இறந்து போனவரை பற்றி அதுவும் அடக்கம் செய்யபின் எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்? ஆனால் நிர்பந்தம் கடுமையாக இருக்கும்.

சில நோயாளிகளை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மருத்துவர் பார்த்திருப்பார்.  மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்திருப்பார். அழைத்து சென்றிருந்தால்  நோயாளி பிழைத்திருக்கக் கூடும்.  ஆனால் நோயாளியை அழைத்துச் செல்ல சூலம் பார்த்து , கிழமை பார்த்து - திங்கள் பயணம் திரும்பாப் பயணம்- காலம் தாழ்த்த நோயாளி இறந்திருப்பார்.

இப்போது சான்றிதழ் கேட்டு நிற்பார்கள். மருத்துவ சான்றிதழில் உடனடிக் காரணம் என்று என்ன போட முடியும்? அந்த நேரத்தில் என்ன நடந்திருக்கக்கூடும் என்று மருத்துவரால யூகித்தத்தான் முடியுமா? நீங்கள்தானே நோயாளியைப் ( சில நிமிடங்கள்தான் பார்த்திருப்பார்) பார்த்திருக்குறீர்கள் .அதனால் கொடுத்தே தீர வேண்டும் என்று நிர்பந்தப் படுத்துவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.    சில நேரங்களில் வெகு நாட்களாக படுத்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு குளிர்ந்த நீரால் குளிப்பாட்டுதல் நடக்கும். மிக்குளிர்ந்த நீர் தலைவழியாக வேகமாக ஊற்றப் படும்போது படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளி மரணம் அடைந்துவிடுவார்.( பிரேதப் பரிசோதனை செய்தால் இதை கண்டறிய முடியும்) இதில் தப்பி விட்டால்  நோயாளிக்கு நூறு ஆயுசாம்.

இதற்கும் அடக்கம் செய்து சில நாட்கள் கழித்து வந்து கேட்டால் என்ன செய்ய முடியும்.

சில நேரங்களில் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடியவர்களுக்கு கரும காரியங்களை முடித்துவிட்டு ஊரின் முக்கிய சில வெள்ளை வேட்டிகளுடன் இறந்து போனதாக பதிவு செய்யச் செல்லும்போது அவர் மருத்துவ சான்றிதழ் கேட்டு அனுப்பி விடுவார். (சொத்துப் பிரச்சனைகளுக்கு உதவும் ) இங்கு கிராமத்தில் கிளினிக் வைத்திருக்கும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்தான் மாட்டுவார். இது போன்ற பிரச்சனைகளில் சாம பேத தான தண்ட வழிகள் பிரயோகம் ஆவது உண்டு.

கிராமத்து ஆட்களிடம் அடிவாங்க  யார்தான் தயாராக இருப்பார்கள்.

வயதுச் சான்றிதழ் 

முதியோர் உதவித் தொகை மாநில அரசால் வழங்கப் பட்டு வருகிறது. வயதானவர்களை சிரமப் படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தோடு  அவரது வாய்மொழியாகச் சொல்லும்  வயதும் உடல் தோற்றமும் ஒத்திருப்பதாக மருத்துவர் சான்றழித்தால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது.

கிராமத்தில் சில புரோக்கர்கள் இருப்பார்கள். அறியாமையால் இருக்கும் மக்களிடம் அரசு அலுவலகங்களில் வேலைகளை முடித்துத் தருவதாகக் கூறி, சில நேரங்களில் முடித்தும் கொடுத்து காசு பார்த்துவருவார்கள். கிராம மக்களுக்கு நகரங்களில் சுற்றுவதற்கு இவரது உதவி மிகவும் அத்தியாவசியமாக இருக்கும்.  இவர்களில் சிலருக்கு பணத் தேவை என்று வந்து விட்டால்  அந்த ஊரில் உள்ள முதியவர்களுக்கு   விண்ணப்பங்களை வழங்கி விட்டு வயதுச் சான்றிதழ்களுக்காக மருத்துவரிடம் அனுப்பி விடுவார்கள் .   அதில் தகுதி உள்ளவர்களுக்கு சில மாதங்கள் கழித்துவரும். சிலர் காத்திருப்பு பட்டியலுக்குச் செல்வார்கள். சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருக்கும். ஆனால் புரோக்கருக்கு பணத்தேவை வரும்போதெல்லாம் விண்ணப்பங்கள் வழங்கப் படும்.  கையெழுத்திட்ட காரணத்தால் அந்த வயதானவர்கள் மருத்துவரிடம் வந்து திட்டிக் கொண்டே செல்வார்கள்.  மக்களின் அறியாமையே அயோக்கியர்களின் பலம். தினமும் திட்டு வாங்குவதற்கு பயந்து கொண்டே அந்த மருத்துவர் கிராமத்திலிருந்து எஸ்கேப்..,

அதே போல பதினெட்டு வயது ஆகாத பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு  பதிவு செய்வதற்காகவும்.  அரசின் நலத்திட்டங்களில் உதவித் தொகை பெறுவதற்காகவும் பதினெட்டு வயது நிரம்பியதாக சான்று கேட்டும் மிரட்டல்களைச் சந்திக்க வேண்டி வரும்.  மருத்துவர் கொடுத்துவிட்டால் அவர் மேல் மைனர் பெண் கடத்தலுக்கு உதவியது, கற்பழிப்புக்கு உதவியது, குழந்தை திருமணத்தை ஆதரித்தது போன்ற பிரிவுகளில் வழக்குத் தொடர முடியும். 

அப்புறம் எங்கே அவர் அந்த ஊர் பக்கம் தலைவைத்துப் படுக்கப் போகிறார்?

இதையெல்லாம் சமாளித்து அந்த மருத்துவர் கிராமத்தில் தொடர்ச்சியாக கிளினிக் நடத்தி வருகிறாரா? அவருக்கு அடுத்து வரும் பிரச்சனைகள் அடுத்த இடுகையில்..,


தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Monday, February 8, 2010

கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்?

கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்ல மறுக்கிறார்கள் என்ற வாதம் தற்போது குறைந்து கொண்டு இருந்தாலும் இன்னும் சிலர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரசுப் பணியில் செல்ல எந்த ஒரு மருத்துவரும் கடந்த சில ஆண்டுகளில் மறுக்கவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் கிராமங்களில் எத்தனை என்பதில்தான் தற்போது இதுபோன்ற கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.

குக்கிராமங்களுக்கு மருத்துவர்கள் ஏன் சென்று சொந்தமாக கிளினிக் நடத்துவதில்லை என்ற கேள்விக்கு பதில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதை தனியாக பின்னர் பார்ப்போம்.

ஓரளவு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது பேருந்து வரும் கிராமங்களுக்கு தனியாக கிளினிக் துவங்க நினைக்கும் மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி நாம் பார்க்கலாம்.

( ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் இதே போன்ற ஒரு கிராமத்தில் எனது கிளினிக் இருப்பதால் எனக்கு இதில் நல்ல அனுபவம் உண்டு. )

இந்த பிரச்சனை பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து வரக்கூடிய கிராமங்களிலும் உண்டு.  நகரத்தை மிக ஒட்டி இருக்கும் கிராமங்களை நகரத்தோடே சேர்த்துக் கொள்ளலாம்.

தற்போதைய சூழலில் கடந்த சில ஆண்டுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால் பல இளம் மருத்துவர்களும் இந்தப் பிரச்சனைகளை சந்தித்து பின்னர் அரசுப் பணி மட்டும் போதும் என்ற சூழலில் இருக்கிறார்கள்.

கட்டாயமாக கிராமங்களில் பணியாற்ற அரசு உத்தரவிட்டு இருப்பதால் அவருக்கு பணி மாறுதல் பொதுவாக கிடையாது. நகரத்தில் ஏற்கனவே வளர்ந்த நிலையில் இருக்கும் மருத்துவமனைகளுடன் போட்டி போட முடியாது என்ற சூழலில்

இந்த இளம் மருத்துவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஓரளவு பெரிய  கிராமத்தில் கிளினிக் ஆரம்பித்து பின்னர் பல பிரச்ச்னைகளை சந்தித்து கிளினிக்கை மூடிவிட்டு அரசுப் பணியை மட்டும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை சரி செய்தாலே  மாலைவேளைகளில் அவர்களை அந்த கிராமங்களில் அமர வைக்க முடியும். 

அந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசவே இந்த இடுகை



================================================================


முதல் பிரச்சனை


அந்த ஊரில் ஏற்கனவே இருக்கும் போலி மருத்துவர். பொதுவான வியாதிகளுக்கு பொதுவான சில வைத்திய முறைகளைப் பின்பற்றி குணப் படுத்தி வாழ்வை ஓட்டி வருபவர்கள் இவர்கள். ஆனால் மிக நுணுக்கமான சில அறிகுறிகள் மருத்துவர்களால் பார்க்கப் பட்டிருந்தால் உயிர் பிழைத்திருக்கக் கூடிய பல நோயாளிகளை பரலோகம் அனுப்பிய பெருமை இவர்களுக்கு உண்டு.


எங்கள் பாடப் புத்தகத்தில் ஒரு பொன்மொழி போட்டிருப்பார்கள்.


உன் அறிவுக்குத் தெரிந்தவைதான் உன் கண்களுக்குப் புலப் படும்.


போலிக்கு அதெல்லாம் தேவையில்லையே...


ஆனால் அந்த ஊரில் வீட்டிற்கே வந்து அவர் வைத்தியம் பார்ப்பதால் அவர் அந்த ஊரில் ஒரு ஹீரோ போல இருப்பார்.


அந்த ஊரில் உள்ள பெரும் புள்ளிகளுக்கு வீட்டிற்கே சென்று காத்திருந்து சத்து ஊசி போட்டு விடுவதால்  அந்த ஊர் பெரும் புள்ளிகளின் அன்புக்கு பாத்திரமாக இருப்பார்.


நமது எம்.பி.பி.எஸ் மருத்துவர் அந்த ஊருக்குப் போனால் ஓரளவு படித்தவர்கள், ஓரளவு நல்ல வேலையில் இருப்பவர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் புதிதாக கிராமத்திற்கு வந்த எம்.பி.பி.எஸ் மருத்துவரிடம் வரத்தொடங்குவார்கள். ( ஆனால் அவர்களும், அவர்கள் குழந்தைகளும் வழக்கப் போல நகரத்திற்குத்தான் செல்வார்கள், அவர்கள் இந்தப் பக்கம் திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும் ).


இது போன்ற வருவாய்தரத்தக்க முக்கிய வாடிக்கையாளர்கள் இடம் மாறுவதால் நமது போலி ( அரைகுறை என்று சொல்லலாமா? என்று தெரியவில்லை)  அவருக்கு செல்வாக்கு உள்ள பெருந்தலைகள் உதவியுடன் மறைமுகமாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பிப்பார்.




கருக்கலைப்பு



இன்றைய சூழலில் கருக்கலைப்பு என்பது கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்தான். நகருக்குச் சென்று கருக்கலைப்பு செய்தல என்பது பிறருக்குத் தெரிந்து விடும் என்பதால் உள்ளூரிலேயே கருக்கலைப்பு செய்யும் ஆட்கள் சிலர் இருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் சில வாடிக்கையாளர்கள் நட்பிற்காக எதையும் செய்வார்கள். ( போலிகளின் கருக்கலைப்பு எவ்வாறு மிகக்குறைந்த செலவில் நடக்கிறது என்பதை இந்த சுட்டி மூலம் தெரிந்து கொள்ளலாம்).


நமது எம்.பி.பி.எஸ் மருத்துவரை மட்டம் தட்டுவதில் முதல் கவனம் செலுத்துவார். நமது மருத்துவர் டிஸ்போசபிள் சிரிஞ்ச் உபயோகப் படுத்துவதில் ஆரம்பிப்பார். தேவையில்லாமல் மக்களுக்கு செலவு வைப்பதாகச் சொல்லுவார்.   தான் எப்போதும் சொந்த ஊசி மற்றும் குழல் கொண்டுவருவதாக பெருமை அடித்துக் கொள்வார். எனக்குத்தெரிந்த ஒரு போலி திருமலை படம் வெளிவந்த நேரத்தில்  விஜய் சட்டைக் காலரிலிருந்து வாயால் கவ்வி சிகரெட் எடுப்பது போல ஊசியை எடுப்பார்.

அடுத்ததாக ஊசியை வெந்நீரில் கழுவாமல் உபயோகப் படுத்துவதாக சொல்லிக் கொண்டு சுற்றுவார்.( சுத்திகரிக்கப் பட்ட ஊசி மற்றும் குழாயை கவர் உடைத்ததும் அப்படியே உபயோகப் படுத்த வேண்டும் என்பது கிராம மக்களுக்கு தெரியாதல்லவா)

அடுத்ததாக அதிக டோஸ் மருந்துகள் உபயோகப் படுத்துவதாகவும்  அதனால்தான் ஊரில் உள்ள அவருக்கு அந்த தொந்தரவு வந்தது இவரூக்கு இந்த தொந்தரவு வந்தது என்று சொல்லுவார்.

அடுத்ததாக் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது நண்பர்களை அனுப்பி சண்டை செய்யச் சொல்லுவார். பின்னர் அவரே வந்து சமாதானப் படுத்துவார். பின்னர் இந்த ஊர் பசங்க ரொம்ப கெட்டவங்க சார். உங்க அறுமை இவனுகளுக்குத் தெரியல இவனுகளோடு உங்களுக்கு என்னப் பேச்சு என்று அழகாகப் பேசி  மருத்துவரை மூட்டைக்கட்ட வைத்து விடுவார்.




இந்த அரைகுறைகளை பற்றி அரசுக்குத் தெரியப் படுத்தி கலைய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. அப்படியே இவர்களை கைது செய்ய வந்தாலும் இவர்கள் தனியாக போர்டு எதுவும் வைக்காத காரணத்தாலும், அந்த ஊருக்கு ஒரே ஒரு வழி மட்டும் இருக்கும் காரணத்தாலும் கிராமத்தில் உள்ளவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இருப்பதாலும் போலியை கைது செய்ய முடியாது. அப்படியே உள்ளே போனாலும் அவரது வாடிக்கையாளர்கள் அவரது மகனை அடுத்த வாரிசாக உருவாக்கி விடுவார்கள்.





தொடரும்.

தமிழீஷில் ஓட்டுக் குத்த இங்கு அழுத்தவும்

Read more...

மூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு.

மூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு பற்றி தி டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிக்கை வெளியிட்ட செய்தி மேலே உள்ளது.

=================================================================

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Sunday, February 7, 2010

கிராமப் புற மருத்துவம் பாகம் 2

Bachelor of Rural Medicine and Surgery பற்றி

Dr Ketan Desai, president of the Medical Council of India  சொல்லுவது


மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதத் தேவையில்லை.அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். கிராமத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும். தகுதிப் பட்டியல் இந்தப் பள்ளி மாணவர்களிடமிருந்தே தயாரிக்கப் படும். பெருநகரங்களில் படித்த மாணவர்கள்சேர்த்துக் கொள்ள படமாட்டார்கள்.


முதல் ஆண்டில் இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெறுவார்கள். இரண்டாம் ஆண்டில் மாவட்ட மருத்துவ மனைகளிலும், மூன்றாம் ஆண்டுகளில் மூன்றாம் நிலை கவனிப்பு மருத்துவமனைகளிலும் பயிற்சி பெறுவார்கள். முதலில் ஐம்பது மாணவர்களைக் கொண்டு துவக்கப் படும்.


முதலில் 50,000க்கும் குறைவான மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயிற்சி செய்ய ( தொழில் செய்ய) அனுமதிக்கப் படுவார்கள். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இவர்களுக்கு முதுகலைப் படிப்புக்கு அனுமதிக்க கிடையாது.  பின்னர் இவர்கள்  பெரு நகரங்களுக்கு சென்றுவிடலாம்

மற்ற மருத்துவர்களைப் போல முதுகலைப் படிப்புக்கு அனுமதிக்கப் படுவார்கள்.

மூலம்   http://readerszone.com/india/what-is-bachelor-of-rural-medicine-and-surgery.html

==========================================================================

இதைப் படிக்கும் போது உங்களுக்கே சில கேள்விகள் தோன்றலாம். இதைவிடச் சிறந்த தீர்வு  தமிழக அரசு மூலம் நடந்துவருகிறது.  மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி துவங்கி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சில மருத்துவ கல்லூரிகள் அரசின் சார்பில் துவக்கப் பட்டு வருகின்றன. அங்கு முழுவதும்  மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவருகிறார்கள். அனைவரின் மதிப்பெண்களும்  பொதுப் பார்வைக்கு வைக்கப் படுகின்றன. தகுதிவாய்ந்த நபர்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது.படிப்புச் செலவு எனபது மிக குறைவான செலவு வைக்கும் தனியார் பள்ளியில் ஆகும் செலவைவிட குறைவு.  அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஸ்காலர்ஷிப் பெற தகுதி உள்ளவர்களாக வேறு இருப்பார்கள்.

===================================================================

மீண்டும்   B R M S பற்றி யோசிப்போம்.

//  அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் //

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் மூன்று முதல் ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்களா? இவ்வாறு தேசிய அளவில் முக்கியப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? அல்லது பரிந்துரை செய்யவாவது தகுதியோடு இருப்பார்களா?

உதாரணமாக  ஐ.ஏ.எஸ் படிக்க ஊக்கப் படுத்துவது வழிகாட்டுவது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஐ.ஏ.எஸ் மாணவரைத் தேர்ந்தெடுக்க அந்த மாவட்ட ஆட்சித்த்லைவர் மட்டும் போதுமா?

=================================================================

//கிராமத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும்.//

முன்னுரிமை என்றால் அடுத்த உரிமை யாருக்கு?

=================================================================

//பெருநகரங்களில் படித்த மாணவர்கள்சேர்த்துக் கொள்ள படமாட்டார்கள்.

//The merit list will be drawn from these schools and not from metropolitan cities.//

பழனி, தேனி மாணவர்களை என்ன செய்வது?

=====================================================
//For five years after finishing training, these doctors will practice only in areas which have a population of less than 50,000.//

//முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 50,000க்கும் குறைவான மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயிற்சி செய்ய ( தொழில் செய்ய) அனுமதிக்கப் படுவார்கள்//

பழனி நகராட்சிக்கு அடுத்துள்ள கிராம பஞ்சாயத்தில் மக்கள் தொகை 50000க்குள் தான் இருக்கும். அங்கேதான்  பழனியின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள், முக்கியப் பள்ளிகள் பழனி கோவில் பக்தர்கள் குவியும் இடங்கள் உள்ளன.   இந்த நபர் அங்கே போய் அமர்ந்து கொண்டால் என்ன செய்வது.   சென்னைக்கு அருகில் நாற்கரச் சாலையில் இதேபோல பல கிராமப் பஞ்சாய்த்துக்கள் இருக்க வாய்ப்பு உள்ளன.

============================================================

//"For five years, they will not be eligible for post-graduate courses. After that, they will be at par with other doctors. Then they can go to the city and pursue PG studies//

ஐந்து வருடம் பலன் தருவதற்கு இவ்வளவு கூத்தா?  இதைவிட தமிழக அரசின் முயற்சி மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி மிகச் சிறப்பு வாய்ந்தது.

தவிரவும் பி.ஆர். எம். எஸ் மூலமாக பின் வாசல் வழியாக சிறப்பு மருத்துவரை மிகச் சுலபமாக உருவாக்கிவிடலாம்.

 தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP