Showing posts with label tansac. Show all posts
Showing posts with label tansac. Show all posts

Wednesday, October 22, 2008

பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)

பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)

தாய்மை எந்த ரூபத்திலும் எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இதோ கீழே இருக்கும் ஒரு கலந்துரையாடலே சான்று.

தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .

கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மரணப்படுக்கையில்.. அவரைப் பார்த்துக் கொள்வது அவருடைய பத்து வயது மகள்.


சம்பந்தப் பட்ட குழந்தையின் நலன் கருதி, பெயரோ, அடையாளமோ கொடுக்கப்படவில்லை.


எத்தன நாளா அம்மா இப்படி இருக்காங்க?
ஒரு வருஷமா அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவங்க ஒரு ஹோட்டல்ல வேலை செய்துட்டு இருந்தாங்க. அங்க யாருடனோ ஏற்பட்ட தொடர்பால் தங்கச்சி பாப்பா பிறந்தா. அப்ப இருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லை. அம்மாக்கு எய்ட்ஸ் வியாதின்னு சொன்னாங்க. அம்மா ரொம்ப நாளா எங்க கிட்ட சொல்லலை...லேட்டா தான் வெளியே சொன்னாங்க.. முதல்ல எல்லாம் ரொம்ப அழுவேன். இப்ப எனக்கு தைரியம் வந்துடுச்சு. சொந்தக்காரர் ஒருத்தர் தைரியமா இருக்க சொன்னதுனால அம்மாவ நல்லா பார்த்துக்குறேன்.

அம்மாக்கு என்ன எல்லாம் நீ செய்வே.. எப்படி பார்த்துப்பே?
அம்மா உடம்ப தொடச்சி விடனும். வாயில் நீர் வழிஞ்சுட்டே இருக்கும். அதை தொடர்ந்து தொடைக்கனும். துணி மாத்தி விடனும். தினமும் படுக்கை மாற்றனும். பவுடர் போடனும். அவங்க டாய்லெட் போனா கழுவி விடனும்.

உனக்கு இது எல்லாம் செய்ய கஷ்டமா இல்லையா?
( நம் கண்களுக்குள் ஊடுறுவிப் பார்த்துட்டு)

என் அம்மாதானே, நான் தானே செய்யனும்...

அம்மாவ மட்டும் இல்லை.... தங்கச்சி பாப்பாவையும் நான் தான் பார்த்துப்பேன். அவ ரொம்ப குறும்பு ( சிரித்துக் கொண்டே).. சில சமயம் அம்மாவ கவனிச்சுட்டு இருக்கும் போது அவளை கவனிக்கலைன்னு அழுவா... கோவம் வந்துடும் அவளுக்கு..(ஹா ஹா என்று சிரிப்பு)

அப்பா?

அவர் எங்கள விட்டுட்டு போய் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார்

அம்மா இப்படி பண்ணிட்டாங்களேன்னு உனக்கு கோவம் வந்திருக்கா?
இல்லை..ஆனா ரொம்ப வருத்தமா இருக்கு... அம்மாவ முழுவதும் குணப்படுத்த முடியலைன்னு.. எத்தன நாளைக்கு அம்மா இப்படியே இருப்பாங்கன்னு தெரியலையே..ஆனா அம்மா தான் எனக்கு விஷம் குடு விஷம் குடுன்னு கேட்டுட்டே இருப்பாங்க....நான் எப்படி குடுப்பேன்..நான் அம்மாவ நல்லா பார்த்துப்பேன்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே தங்கச்சிப்பாப்பா துறு துறு என்று இவள் பக்கம் தவழ்ந்து வர..அவளை அள்ளிக் கொள்கிறாள்..

குட்டிப்பாப்பாவ தூக்கணும், பார்த்துக்கணும், அதுனால உனக்கு களைப்பா இல்லையா?

(சிரித்துக்கொண்டே வெகுளியாக)..
கைவலிச்சா அவள அடுத்த கைக்கு மாத்திக்குவேன்.. ஆனா அவ ரொம்ப சேட்டை..பாருங்க என் முடிய பிடிச்சு இழுக்கறா. என் கன்னத்தை கிள்ளி வச்சுட்டே இருப்பா..நேத்து என்னை பளார்னு அறஞ்சுட்டா.. ஆனா குட்டிப்பாப்பாதானே அவளுக்கு தெரியாதில்ல.. ரொம்ப குறும்பு பண்ணா, " பேசாம இரு..இல்லன்னா பேச மாட்டேன்னு சொல்லுவேனா..அப்புறம் சிரிப்பா..பேசாம இருப்பா". (குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே)

பாப்பாவ கீழ போட்டற மாட்டியே..?..நல்லா பிடிச்சுக்கோ
அதெல்லாம் போடமாட்டேன்..கெட்டியா பிடிச்சுப்பேன்..இப்படி (கெட்டியாக நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்).

(குட்டிப்பாப்பா இந்த பத்து வயது சிறுமியை அம்மா என்று தான் அழைக்கிறாள்).

குட்டிப்பாப்பா உன்னை அம்மான்னு கூப்பிடறாளே?.. உங்க வீட்ல உங்க அம்மா, பாட்டி எல்லாம் இருக்காங்க..அவங்களையும் அம்மான்னு தான் கூப்பிடுவாளா?
இல்லை...என்னை மட்டும் தான் அம்மான்னு கூப்பிடிவா...ஏன்னு தெரியலை.. ஆனா அவ அப்படி கூப்பிடும் போது எனக்கு நல்லா இருக்கும் ... என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவா என் குட்டி (என்று மீண்டும் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கிறாள்)

நீ ஸ்கூலுக்கு போறதில்லையா?
நான் ஸ்கூலுக்கு போனா அம்மாவையும், குட்டிப் பாப்பாவையும் யாரு பார்த்துப்பா?

தங்கச்சி பாப்பாவ யாராவது எடுத்து வளர்க்க முன் வந்தா நீ சரி சொல்லுவியா?
அவ நல்லா படிக்கனும்.. எனக்கு அவள நல்லா பார்த்துக்கனும்னு ஆசை.. ஆனா நான் என்ன வேலை பார்க்குறதுன்னு தெரியலை... அவ வசதியான இடத்துக்கு போனா சந்தோஷம் தான்.. ஆனா நான் எப்படி அவள விட்டுட்டு இருப்பேன்...(மிகுந்த சோகத்துடன்)

உனக்கு எய்ட்ஸ் பத்தி என்ன தெரியும்?
(கைகள் இரண்டையும் இருக்கமாக கட்டிக் கொண்டு)

ஐயோ யாருக்கும் அது வரக்கூடாது.

எய்ட்ஸ் எப்படி வருதுன்னு உனக்கு தெரியுமா?
ஆணுறை உபயோகிச்சா வராதாம்.

உனக்கு யாரு சொன்னா ?
ஒரு விளம்பரத்துல படிச்சேன்.. எச்ஐவி ல் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுறை உபயோகிங்கள் என்று. (ம்ம்ம்.. என்ன சொல்ல)

அம்மா மாதிரி எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க கிட்ட நீ என்ன சொல்லுவே?
அம்மா மாதிரி லேட்டா சொன்னா, என் மாதிரி குழந்தைங்க என்ன பண்ணுவாங்க...அதுனால தெரிஞ்ச உடனே டாக்டர் கிட்ட போனா கஷ்டப்பட வேண்டியது இல்லை...லேட்டா சொல்லி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளால தாங்க முடியுமா?..வீட்ல இருக்குறவுங்களும் அவங்கள நல்லா பார்த்துக்கனும் ( இதை விட ஒரு சிறந்த விழிப்புணர்வு செய்தி இருக்க முடியுமா..ம்ம்ம்)

நீ ஏதாவது கேட்க விரும்பறியா?
அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எங்க இருப்பேன்?...என்ன பண்ண? ( மனதை பிழியவில்லை?..ம்ம்ம்)

நீ எங்க போக விரும்பறே?
தெரியலை....என்ன என்னமோ சொல்றாங்க... தனியா இருந்தா யாராவது தப்பா நடந்துப்பாங்களாம்...கடத்திட்டுப் போய் வித்துடுவாங்களாம்...ரேப் பண்ணிடுவாங்களாம். (கடவுளே!!!)

நீ சாமிய பார்த்தா என்ன கேட்பே?
எல்லாரும் எந்த நோயும் இல்லாம ஆரோக்கியமா இருக்கனும்.

உனக்காக ஒன்னும் கேட்க மாட்டியா?
கண்டிப்பா கேட்பேன்..என் அம்மாக்கு சீக்கிறம் நல்லாகனும்.. குட்டிப்பாப்பா நல்லா இருக்கனும்...( சுயநலம் இல்லாத இந்த அன்பான மனதை வணங்கத் தோன்றுகிறதல்லவா?ம்ம்)

தற்பொழுது அம்மா மருத்துவமனையில்..
அம்மாவ பார்க்க போறியா? ..
நான் கூப்டுட்டு போறேன்..
அம்மாவ பார்க்கனும் போல இருக்கு.. ஆனா நான் போன அப்புறம் ஏதாவது.......................................... (குட்டிப்பாப்பாவை அனைத்துக் கொண்டு அழுகிறாள்..)

இது போல எத்தனையோ குழந்தைகள் படித்து, விளையாடி மகிழ வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.


இயலாமையை நினைத்து நினைத்துத் துவண்டு விடுகிறது என் மனம்.

நன்றி: மங்கை

Read more...

Sunday, October 19, 2008

பணிகள்


  1. அனைவருக்கும் தெரிந்த புறநோயாளிகள் பிரிவு.
  2. இப்போது ஓரளவு மக்களுக்கு தெரிந்து வரும் பிரசவ பிரிவு. தற்போது அனைத்து அ.ஆ.சு.நிலையங்களும் 24மணிநேர பிரசவ மையங்களாகி விட்டன. 
  3. அனைத்து கர்ப்பிணிகளுக்கும் Hb. சர்க்கரை, உப்பு, ரத்த வகையறிதல்,கொழுப்பு பரிசோதனைகள் செய்ய படுகின்றன.
  4. TANSAC ஆலோசகர் ஆய்வகர் HIV பரிசோத்னைகள் செய்கிறார்கள்.
  5. அனைத்து அ.ஆ.சு.நி.களும் காசநோய் அலகுடன் இணைக்கப்பட்டு நோயாளிகளுக்கு குறுகிய கால சிகிச்சை நேரடி பார்வையில் வழங்கப்படுகின்றது. 
  6. தொழுநோய் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
  7. சர்க்கரை. ரத்த அழுத்த நோய்களுக்கு சிகிச்சை தர படுகிறது. 
  8. scan பரிசோதனை செய்யப்படுகிறது.
  9. அ.ஆ.சு.நி. உட்பட்ட பகுதிகளில் சுற்று சுகாதாரம் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் சரிசெய்யும் வழிமுறைகளை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்குகின்றனர். மலேரியா, சிகுன்குனியா, டெங்கு நோய்கள் வராமல் தடுப்பது முக்கிய பணியாக அமைகிறது.
  10. வளரிளம் பெண்கள் ரத்தச்சோகை தடுப்புப் பணிகளும், அதைப்பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
  11. கர்ப்பிணிகளை தேடிப் பிடித்து பதிவு செய்து குறைந்தபட்சம் 5முறையாவது பரிசோதனைக்கு வரவக்க படாதபாடு படுபவர்களும் இவர்கள்தான். 
  12. எத்தனையோ தவிர்க்கப் பட கூடிய பிரசவ சிக்கல்களை தவிர்க்க பாடுபடுபவர்கள் இவர்கள்.
  13. தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில் வழங்குபவர்கள் இவர்கள்.
  14. தடுப்பூசியின்சக்தியினை காக்கும் cold chain இங்குதான் மிகச்சிறப்பாக பேணப்படுகிறது. 
  15. pulse polio போன்ற ஒரே நேரத்தில் அனைவருக்கும் வழங்கும் பணி அ.ஆ.சு.நி. மூலமாகவே நடைபெறுகிறது.
  16. இளம்சிறார் இருத்ய பாதுகாப்புத்திட்டத்தில் அறுவை சிகிச்சைகள் செய்விக்கப்பட்டதில் இவர்களின் பங்கு மிக அதிகம்.
  17. அனைத்து வியாழன்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள்க்குச் சென்று மாணவர்கள்க்கு சிகிச்சை மற்றும் அடிப்படை பரிசோதனைகள் செய்து பெரிய பிணியினை முதலிலேயே தடுத்து விடுவதும் இவர்களே.
  18. ஆண்பெண் சமத்துவம் பற்றிய கருத்தரங்களும் அ.ஆ.சு.நி. மூலமாக நடத்தப் படுகின்றன.
  19. small pox விரட்டியக்கப் பட்டதும் polio கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதிலும் இவர்களால்தான்.
  20. 2006ல் கோரத்தாண்டவம் ஆடிய சிகுன்குனியா, 2007, 2008ல் ஒளிந்துகொண்டதும் இவர்களால்தான். (இதைப் பற்றி தனியே எழுதுகிறேன்) 
  21. இது வெறும் முன்னுரை மட்டுமே. மேலும் தொடர்ந்து எழுதுகிறேன்.

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP