Saturday, January 9, 2010

இந்திய பாராளுமன்ற தேர்தலைவிட பெரிய நிகழ்ச்சி

உலகின் மிகப் பெரிய் ஜனநாயக நாடான இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து கிண்டிருக்கின்றன. ஓட்டுப் போட வேண்டும். என்றும் ஓட்டளிக்கவிரும்பவில்லையென்றால் 49-0 பயன்படுத்த வேண்டும் என்றும் படித்தவர்கள் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்து மக்களும் தங்களுக்கு யார் மிகவும் தோதானவர்கள் என்பதைப் பார்த்து ஓட்டளித்துவிடுகிறார்கள். இந்த நாட்டில் இந்திய பாராளுமன்ற தேர்தலைவிட மிகப் பெரிய ஒரு நிகழ்வு மிகப் பெரிய திட்டமிடுதலுடன் கொஞ்சமும் தவறு நிகழாமல் கட்டுக் கோப்புடன் நடக்கும் ஒரு நிகழ்வு பற்றித்தான் இங்கு பதிய விரும்புகிறேன்.


அதுதான் போலியோ சொட்டு மருந்து முகாம். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு இருமுறை ஒரே நாளில் கொடுக்கப் படுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் கொடுக்கப் படுகிறது. போலியோ நோய் காணப் படும் ஒரு சில மாநிலங்களில் கூடுதலாக இரண்டு முறை என நான்கு முறை கொடுக்கப் படுகிறது.

தமிழகத்தில் இதற்கான ஏற்பாட்டை தமிழக சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. களத்தில் செயல்படுத்துபவர்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் குழந்தை வளர்ச்சித்திட்டத்தைச் சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் இதில் களம் இறங்குகின்றனர்.

பயனாளிகள் எண்ணிக்கையை முதலிலேயே கணக்கெடுத்து ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு மருந்துகள் தேவைப் படும் என்ற உத்தேசக் கண்க்குப் போட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைத்துக் கொள்ளப் படுகின்றன. மருந்து வைக்கப் படவேண்டிய வெப்பநிலை(குளிர்நிலை) சரியான அளவில் காப்பதற்காக குளிர்சங்கிலி குளிர்பதனிகள் பயன்படுத்தப் படுகின்றன. அந்த இடங்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப் படுகின்றன. தவிர்க்க முடியாத சூழலில் மிந்தடை ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மற்றொரு சுகாதார நிலையத்திற்கு போலியோ சொட்டு மருந்துகள் இடமாற்றம் செய்யப் படுகின்றன.

சொட்டு மருந்து கொடுக்கும் அலுவலர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. குழந்தைகளின் அலைச்சலைத்தடுப்பதற்காக நூறு குழந்தைகளுக்கு ஒரு பூத் என்ற அளவிலும் குழந்தைகள் குறைவாக இருந்தால் கூட ஒரு கிராமத்திற்கு ஒரு சொட்டு மருந்து நிலையமும் அமைக்கப் படுகின்றன. சில கிராமங்களில் மூன்று நிலையங்கள் கூட அமைக்கப் படுவது உண்டு. ஒவ்வொரு மருந்து குப்பியிலும் கண்காணிப்பான் இணைக்கப் பட்டுள்ளது. அதில் ஏற்படும் நிறமாறுதல்களைக் கொண்டு மருந்தின் தனமையை உணரமுடியும்.

இந்த நிலையங்களில் ஒரு கூடுதல் வசதியும் உண்டு. எந்த குழந்தை எந்த சொட்டு மருந்து நிலையத்தில் வேண்டுமானாலும் மருந்து கொடுத்துக் கொள்ளலாம். மறுப்பு ஏதும் இல்லாமல் கொடுத்துவிடுவார்கள் . குழந்தையின் இடது கைச் சுட்டு விரலில் அடையாளமை வைத்துவிடுவார்கள்.

அதிகாலை ஏழுமணி அளவில் அனைத்து சொட்டு மருந்து நிலையங்களிலும் மருந்துகள் சென்றடையும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கும். ஏழுமணிக்கு சொட்டுமருந்துகள் அதற்குரிய குளிர்பதன பெட்டியில் வைத்து அந்த நிலையங்களைச் சென்றடைந்த உடன் மருந்துகள் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெரும்பாலும் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும்குளிர்நிலவும். இருந்தாலும் அலுவலர்கள் சரியாக ஏழுமணிக்கு மருந்து கொடுக்கும் பணியைத் துவக்கிவிடுவார்கள்.

மதியத்திற்குப் பிறகு சொட்டுமருந்து நிலையத்தில் இருக்கும் பணியாளர்களில் இருவர் அவர்களுக்குரிய பகுதிக்குள் சென்று ஏதேனும் குழந்தைகள் விடுபட்டி இருந்தால் அழைத்துவரும் பணியினைச் செய்வார்கள்.வெளியூரிலிருந்து வந்த குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுவார்கள்.

பொதுவாக முதல் நாள் அன்றே அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுவார்கள். அடுத்த நாளில் இந்தப் பணியாளர்கள் ஊருக்குள் சென்று ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுக்கப் பட்டுள்ளதா என்று விசாரிப்பார்கள். எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் விடுபட்டு இருந்தால் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கமுடியாத சூழலில் அந்த வீட்டில் xகுறியிட்டுவருவார்கள். கொடுக்கப் பட்ட வீடுகளில் Pகுறியிட்டு வரிசை எண் சொடுத்து வருவார்கள். அப்படி x குறியிட்ட வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க மருத்துவக்குழு வந்து கொடுப்பார்கள். மறுப்பவர்களுக்குத் தகுந்த விளக்கம் கொடுத்து அவசியத்தை உணரவைத்து சொட்டுமருந்து கொடுத்து விடுவார்கள்.

பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் தனது கண்காணிப்பு பணியினைத் தொடர்வார். அவர் பத்து வீடுகளுக்கு ஒரு வீடு வீதம் சென்று கதவில் குறிப்பிட்டு இருக்கும் P மற்றும் அனைத்து x குறியீடுகளையும் ஆய்வு செய்வார். வழியில் தென்படும் அனைத்து குழந்தைகளையும் கண்காணித்து மருந்து கொடுக்கப் பட்டுள்ளதா மற்றும் விரலில் மை வைக்கப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார். ( நம்புங்கள் மருத்துவர் கிராமங்களில் இறங்கி ஒவ்வொரு தெருவிலும் நடந்து சென்றுதான் இந்தப் பணியினைச் செய்வார்).

இவரது பணியினை வட்டார, மாவட்ட, மாநில அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். அனைவரது குறிக்கோளும் அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் மருந்து கொடுக்கப் பட வேண்டும் என்பதே.. அப்போது தானே போலியோ என்ற இளம்பிள்ளைவாதம் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.

========================================================

சென்ற ஆண்டுவரை எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் இந்த முகாம்கள் நடை பெற்று வந்தன. இளம்பிள்ளை வாதமும் ஏறக்குறைய தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்கப் பட்டுவிட்டது. கூடிய விரைவில் இந்தியாவிலிருந்தே விரட்டி அடிக்கப் படும் சூழல் இன்று இருக்கிறது.

சென்ற டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வதந்தியால் ஒரு அதிபயங்கர பதட்டம் ஏற்பட்டது. குழந்தைகளைப் பெற்றவர்கள் குழந்தைகளைத்தூக்கிக் கொண்டு அருகிலுள்ள நிலையங்களுக்கு பறந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளவர்கள் பல இடங்களில் கடும் சொற்களால் அர்ச்சனை செய்யப் பட்டும் சில இடங்களில் தாக்குதல்களும் கூட நடைபெற்றன.பெரும்பாலான இடங்களில் காவலர்களின் துணையோடுதான் பணியாளர்களை மீட்க முடிந்தது.( ஒரு இடத்தில் பெட்ரோல் கேனுடன் ஒரு நபர் வந்து என் குழந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் உங்களைக் கொழுத்திவிடுவேன் என்ற மிரட்டலுடன் நின்று கொண்டார். பணியாளர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பது தெரியாமல் அந்த நபரின் குழந்தை அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தது.)

மறுநாள் நாங்கள் களப்பணிக்குச் சென்ற போது மக்கள் ஓரளவு தெளிவடைந்து இருந்தனர். பெரும்பாலானோர் முதல் நாள் நடைபெற்ற சம்பவங்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் பாதிக்கப் பட்ட பணியாளர்களை களத்தினுள் இறக்குவது என்பது மிகப் பெரிய சவாலாக அமைந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவே சில மாதங்களானது. நேற்றுவரை தங்களிடம் மிக மரியாதையுடன் நடந்து கொண்டிருந்த மக்கள் ஒரு வதந்தியை நம்பி மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்திருந்தது. ஒரு சிலர்தான் தரக்குறைவாக நடந்து கொண்டாலும் மற்றவர்கள் அதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதும் அவர்களால் ஜீரணீக்க முடியவில்லை. அந்த அதிர்ச்சி நிலையில் இருந்தவர்களை உடன் வைத்துக் கொண்டு மற்ற பணியாளர்களை வைத்து முகாமினை நடத்தி முடிக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டோம்.


அடுத்த பிப்ரவரி மாதத்தில் அடுத்த முகாம் நடைபெற்றது. அதற்கான பிரச்சார நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒருமாத கால அளவில் ஈடுபட்டிருந்தோம். மக்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோது மக்கள் ஓரளவு தெளிவாக இருப்பதாகவே பட்டது.


இருந்தாலும் சொட்டுமருந்து முகாம் நடைபெற்றபோது ஒரு அதிர்ச்சி எங்களுக்குக் காத்திருந்தது. வழக்கமாக பதினொரு மணியளவில் 90சதவீதம் குழந்தைகளுக்கு மருந்து கள் கொடுக்கப் பட்டிருக்கும். ஆனால் அன்று மிகக்குறைந்த அளவு மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது. மக்களை சந்தித்து பேசியதில் கொடுத்துவிடுகிறோம் என்ற பதிலே கிடைத்தது. இருந்தாலும் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்ததில் ஒரு உண்மை வெளிப்பட்டது. அதாவது காலையில் மருந்து கொடுத்த குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்தபின்னர்தான் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற என்ற எண்ணத்தில் பெரும்பாலோனோர் இருந்திருக்கின்றனர். ஒருவழியாக பெரும்பாலான குழந்தைகளுக்கு அன்று மாலை 5 மணிக்குள் கொடுத்து முடித்தோம். பிற்கு களத்தினுள் ஒருவாரகாலம் கடும் முயற்சிக்கு பின்னர் அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுத்தோம்.

இப்போது சொல்லுங்கள் பாராளுமன்ற தேர்தலைவிட இளம்பிள்ளைவாதச் சொட்டு மருந்து கொடுக்கும் பணி பெரியதுதானே..

=============================================================

பிப்ரவரி மாத முகாமில் அனைத்து குழந்தைகளுக்கும் மருந்து கொடுக்க நாங்கள் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் வழக்கம்போல முற்பகலிலேயே பெரும்பகுதியை கொடுத்துவிட்டதாக சொன்னார். எப்படி நடத்தினீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..

வதந்தியைப் பரப்புபவர்களுக்கு சிறைத்தண்டனை என்பதை பெரிய அளவில் எழுதி வைத்திருந்தார். (நாங்களும் எழுதி வைத்திருந்தோம். அவர் மிகப் பெரிய அளவில் வைத்திருக்கிறார்) அப்படி மருந்தினைப் பற்றி அவதூறு பேச்சு பேசுபவர்களை உடனடியாக காவலர்களிடம் ஒப்படைத்தும் விட்டார்.

அரசு கொடுக்கும் மருந்து கொடுக்கவிருப்பம் இல்லாதவர்களிடம் இந்த மருந்து கொடுக்காவிட்டால் இளம்பிள்ளைவாதம் வரும்வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்தால் அரசிடமிருந்து எந்த உதவிகளும் கிடைக்காது என்று எழுதப்பட்ட காகிதத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டால் பணியாளர்கள் யாரும் வந்து சொட்டுமருந்து போடுமாறு தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று கூறிவிட்டார்.ஆரம்பத்தில் கையெழுத்துப் போட்ட ஒரு சிலர்கூட மதியம் ஆனபிற்கு மருந்தினைக் கொடுத்துவிட்டோம் அந்த காகிதத்தினைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர். அதை நண்பர் அழித்தும் விட்டார்.

அவரது அணுகுமுறையின் காரணமாக அங்கு மற்ற இடங்களைவிட அங்கு ஆர்வமாக மக்கள் மருந்துகளை கொடுத்துவிட்டனர்.
==================================

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP