Friday, October 16, 2009

தீபாவளியன்று உங்கள் கடமை

அப்போது நான் பயிற்சி மாணவன். பயிற்சி மருத்துவர் என்றும் சொல்வார்கள். தேர்வில் தேர்ச்சி அடைந்து இந்திய மருத்துவ கழகத்தில் ( medical council of india ) பதிவும் செய்துவிட்டிருந்தோம்.  எந்த நாட்டில் எவ்வளவு பெரிய மருத்துவப் படிப்புகள் படித்திருந்தாலும்  medical council of india பதிவு செய்திருக்கவில்லையென்றால் போலி மருத்துவராகவே கருதப் படுவார்.

தீபாவளிக்கு முதல்நாள். எலும்பு சிகிச்சைப் பிரிவில் பணி. எலும்பு சிகிச்சைப் பிரிவிலிருந்து விபத்து சிகிச்சைப் பகுதிக்கு அன்று எனக்கு 24 மணிநேர பணியாக அமைந்திருந்தது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மற்ற அனைத்து துறையினரும் கூடுதலாக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வது போல எங்களைப் போல சில துறைகள் முடியாது. அன்று எனக்கும் தீபாவளி அன்று விடுப்பு அனுமதித்து இருந்தார்கள். ஆனால் முதல் நாள் 24மணிநேர பணி. தீபாவளி காலையில் 8மணிஅளவில் விடுவிக்கப் படுவேன். அதற்குப் பிறகு புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து...,   அதனால் விடுப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த விடுப்பு வேறொருவருக்கு வழங்கப் பட்டுவிட்டது.

நம்து ஊரில் எலுமிச்சை, அன்னாசி, பலாப் பழங்கள் கதை சொல்வார்களே அது போல இருந்திருந்தது. விபத்து சிகிச்சைப் பிரிவில் அன்றைய பொழுதில் பணிக்குச் சென்ற போது. என்னோடு அன்று பணியில் இருந்த முதுகலை பயிற்சி மருத்துவருக்கு மறுநாள் தலைதீபாவளி. அவரது அலகில் அவர் மட்டுமே முதுகலைப் பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த 24மணிநேரப் பணியினை அவரே ஏற்றுச் செய்ய வேண்டிய நிலை.  அவரை ஒப்பு நோக்க நமது நிலை எவ்வளவோ பரவாயில்லை.

மாலை நேரத்தில் அவர் பணியிலிருந்த உதவிப் பேராசிரியரைச் சந்தித்தார். உடன் என்னையும் வைத்துக் கொண்டுதான் பேசினார். மறுநாள் தனக்கு தலைதீபாவளி என்பதால் கொஞ்சம் முன்னதாகவே திரும்ப அனுமதி கேட்டார். பயிற்சி நிறைவை நோக்கியுள்ள பயிற்சி மருத்துவர் மற்றும் உதவிப் பேராசியர் , செவிலியர்கள் என்று ஒரு முழுமையான அணி இருந்த காரணத்தால் உதவிப் பேராசியரும் அவருக்கு காலை 3 மணி அளவில் செல்ல அனுமதி அளித்தார். 3 மணிக்கு மேல் வரும் நோயாளிகளை முதுகலை பயிற்சி மருத்துவருக்குப் பதிலாக உதவிப் பேராசியரே கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.

இரவு நேரத்தில் உணவுக்காக கோயமுத்தூரின் மிக முக்கிய இடங்கள் எல்லாம் சென்றும் கூட உணவு என்பது மிகக் கடினமாகவே இருந்தது. பியூப்பில்'ச் பார்க் போன்ற மிகச் சில உணவகங்களே திற்ந்திருந்தன. மற்ற உணவங்கள் பெரும்பாலும் விடுப்பாக அமைந்திருந்தன. விடுதி உண்வகம் உட்பட..

பியூப்பில்'ஸ் பார்க்கில் சாப்பாட்டுக்காக காத்திருக்க மனமில்லாமல் ரொட்டித்துண்டுகளை வாங்கி அப்படியே விழுங்கிவிட்டு பணிக்கு திரும்பினோம்.  மருத்துவக் கல்லூரியில் நோயாளியைப் பார்ப்பதாக பெரும்பாலோனோர் வாங்குவதால் பன்ரொட்டிகள் தங்குதடையில்லாமல் கிடைக்கும்.

தீபாவளிக்கு முதல்நாள் இரவு பத்துமணிவரை பணி சராசரி அளவிலேயே வேலை இருந்தது. அதற்கடுத்து கொஞ்சம் பிஸி....,

குடித்துவிட்டு வண்டி ஓட்டிவிட்டு விழுந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தனர்.  விபத்துப் பதிவேடு, காவலர் அறிக்கை, மற்றும் நோயாளி பதிவேடு போன்றவைகளில் முதுகலை மருத்துவரும், காயங்களை சரிசெய்வது, தையல் போடுவது, போன்ற பணிகளை நானும், மற்றும் இன்னபிற வேலைகளை அவரவரும் செய்ய ஆரம்பித்தோம்.

மணி12ஐ நெருங்கும்போது கூட்டம் எல்லைமீர ஆரம்பித்தது. கூடுதல் மருத்துவர்களை அழைக்க விரும்பினோம். அழைத்தால் விடுப்பில் இருப்பவர்களின் திட்டுக்களை வாங்க வேண்டும் என்பதால் கூட்டத்தினை நாங்களே சமாளிக்கத் தீர்மாணித்தோம். முடிந்த அளவு மிக வேகமாக பணிகள் நடந்தன. அனைத்து பணிகளையும் உதவிப் பேராசிரியர் நேரடியாகக் கண்காணித்து எந்த தவறும் நேராமல் பார்த்துக் கொண்டிருந்தார். முதுகலை மருத்துவர் பயிற்சி மருத்துவர் தலைதீபாவளிக்காகச் சேலத்திற்குச் செல்ல வேண்டியவர்.

குறிப்பிட்ட கால கட்டத்தில் கூட்டம் குறையத் தொடங்கியது. எங்கள் பணிகளை நிறைவு செய்துவிட்டு, இருப்பிட செவிலியரை அழைத்தார் முதுகலை மருத்துவர். சிஸ்டர் நான் கொஞ்சம் முன்னாடியே புறப்படுகிறேன். கேஸ் வந்தால் தம்பிய பார்க்கச் சொல்லுங்க. கொஞ்சம் சிரமமான கேஸ் அப்படின்னா உதவிப் பேராசிரியர் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். அதனால் நான் புறப்படுகிறேன்.

அதற்கு செவிலியர்

சார் மணி இப்ப காலை 9,  என்னோட ரிலீவர் வந்து ஒருமணிநேரம் ஆச்சு. உங்க ரிலீவரும் எப்பவோ வந்துட்டாங்க , நீங்க பார்த்த கேஸ் லிஸ்ட் எல்லாம் ஒழுங்கு படுத்திக் கொடுத்தால் அவரவர் அடுத்த டூட்டி பார்ப்பவர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டுப் போய் கொண்டே இருக்கலாம். (அதாவது அவரது பணிநேரம் முடிந்தும் பிறகும் அவர் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அவரக்கு அடுத்த் பணிக்கு வருபவர் வந்துவிட்டதால் அவருக்கு நோயாளிகள் வருவது குறைந்திருக்கிறது)

என்று ஒரே போடாகப் போட்டார்.

அந்த முதுகலை பயிற்சி மருத்துவர் திருதிருவென்று விழித்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டு இருக்கிறது.

===================================================================

இந்த ஆண்டும் தீபாவளிக்கு முதல்நாள் அப்படித்தான். விடுப்பு விண்ணப்பம் கொடுத்த மருத்துவர், செவிலியர், மற்றும் பணியாளர்கள் அனைவரிடமும் ஒரு நாள் அரைநாள்தான் விடுப்புக் கொடுக்க முடியும் என்று கண்டிப்பாகச் சொல்லி அனைத்து நிலைகளிலும் பணீக்கு ஆள் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுவந்து விட்டேன்.

நீங்கள் தீபாவளி கொண்டாடுபவரா.., அப்படியென்றால் உங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு பணியில் இருப்பவர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லி அவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள். 

நீங்கள் தீபாவளி கொண்டாத நபர்களாக இருந்தால் இன்னும் வசதியாக போயிற்று. திராவிட, ஆரியக் கதைகளை விட்டு விடுங்கள். இன்று உங்களுக்காக தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு பணியில் உள்ள நபர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்களுடன் கொண்டாடுங்கள்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Sunday, October 4, 2009

சுலபமாய் கருக்கலைப்பு செய்ய..,

சென்ற இடுகையில் போலி பாம்புக் கடி மருத்துவத்தைப் பற்றிப் பார்த்தோம். இந்த இடுகையில் போலிக் கருக்கலைப்பு வைத்தியத்தைப் பற்றிப் பார்ப்போம்.

போலி பாம்புகடி வைத்தியர் என்ற பெயர் பொருந்துவது போல கருக்கலைப்பு வைத்தியருக்கு உபயோகப் படுத்துவது என்பது பொருந்தாது. போலி பாம்புக் கடி வைத்தியர் பாம்புக் கடியில் விஷப் பாம்பினால் கடி பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல் இறக்க விட்டுவிடுகிறார் என்பதையும், விஷத்தால் துளிகூட பாதிக்கப் படாத மனிதரை காப்பாற்றி விடுகிறார் என்பதையும் எவ்வாறு அவருக்கு இது சாத்தியமாகிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்தோம். (ஏனோ தமிழ்மணம், தமிழீஷ் வாசகர்களிடம் பெருமளவு சென்றடையவில்லை)


ஆனால் போலிக் கருக்கலைப்பு வைத்தியர் என்பவர் கருக்கலைப்பினை செய்துவிடுகிறார். ஆனால் பாதுகாப்பில்லாமல் செய்கிறார். எனவே ஆபத்தான கருக்கலைப்பாளர் போன்ற பதங்களை உபயோகப் படுத்தலாமா என்று தோன்றுகிறது.

கருக்கலைப்பு என்பதை சில வகைகளாக பிரிக்க முடியும்.இது போலி கருக்கலைப்பு மருத்துவருக்காக தயாரிக்கப் பட்ட அட்டவணை.
1. கரு கர்ப்பப் பையில் ஒட்டும் முன் (முதல் சில நாட்கள்)
2.கரு கர்ப்பப்பையில் இடுப்பு எலும்பு தாண்டி வளரும் முன்(12 வாரங்கள் வரை)
3.கரு உயிர்பிடிக்கும் முன்(28வாரம் வரை)
4.உயிர்பிடித்தபின்( இந்த நிலையில் கலைப்பதை குறைப்பிரசவம் என்றே சொல்லலாம்)

சட்டபூர்வமான கருக்கலைப்பு என்பது 12 வாரங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. பெண்சிசுக்கள் கருக்கலைப்பைத் தடுப்பதற்காக பல நடைமுறைகள் தற்போது பின்பற்ற படுகின்றன.

முதல் சிலநாட்களில் கருக்கலைப்பு என்பது மாத்திரை மூலமாகவேச் செய்ய முடியும். அந்த மாத்திரையைக் கொடுக்கும் முன் கரு கர்ப்பப் பையில்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த ஸ்கேன் சோதனை மற்ற ஸ்கேன் சோதனைகளிலிருந்து சிறிது மாறு பட்டது. கரு கர்ப்பப்பையில் இல்லாமல் கருக்குழாய்களில் இருந்தால் குழாய் உடைந்து மரணம் சில மணிநேரங்களில் நிகழும் வாய்ப்பு இருக்கிறது.மருத்துவர் கருவிகளை உபயோகப் படுத்தி கருக்கலைப்புச் செய்தல் சிலவார கர்ப்பங்களுக்கு உதவும். இது சுத்திகரிக்கப் பட்ட அறுவை அரங்குகளில் வைத்து மட்டுமே ஒரு வல்லுநரால் கருக்கலைப்பு செய்யப் பட வேண்டும். மயக்க மருந்து மருத்துவ நிபுநரும் துணைக்குத் தேவைப் படுவார். அதற்காக நவீன கருவிகள் உள்ளன. கருக் கலைப்பில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க பல பரிசோதனைகள் அவசியமாக உள்ளன. சில நேரங்களில் ரத்தம் கூட முனெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்க வேண்டியுள்ளது.

தரமற்ற கருவிகளையும் நோய் தொற்று ஏற்படக்கூடிய இடங்களிலும் வைத்து கருக்கலைப்பு செய்தால் கருப்பை ஓட்டை அல்லது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து நிகழ நேரலாம். இந்த நிலையில் ஏற்படும் நோய்தொற்று பெரும்பாலும் அடுத்த குழந்தை பாக்கியத்தையும் தடுத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் வல்லுநர்களின் அவசியத்திற்கும், அறுவை அரங்கு மற்றும் நவீனக் கருவிகள் மற்றும் மருந்துகளுக்கும் ஆகும் செலவு பெரும்பாலான கருக்கலைப்பு விரும்பிகளுக்கு அதிகமாகத் தோன்றுவதால் செலவு குறைந்த கருக்கலைப்பாளர்களிடம் செல்ல நேரிடுகிறது.

போலி கருக்கலைப்பு செய்பவர்கள் என்ன செய்கிறார்கள்?

கரு கர்ப்பப்பையில் ஒட்டும் முன் கருக்கலைப்பு செய்வது என்பது சுலபம். ஆனால் இதில் உள்ள ஒரு சிக்கலை நோக்கவேண்டும்

கரு, கர்ப்பப் பையில் இல்லாமல் கருக்குழாய் போன்று வேறிடத்தில் இருந்தால் கொடுக்கும் மருந்து அல்லது கலைக்கும் முறையே எமனாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

பல தேவைகளுக்காக கிடைக்கும் ஹார்மோன் மருந்துகளை அதிக அளவில் கொடுப்பதன் மூலம் ஹார்மோன் ஏற்றத் தாழ்வினால் கரு கர்ப்பையில் ஒட்டாத தன்மை ஏற்பட்டு கரு இழப்பானது உருவாகலாம். சில உணவுகள் வைட்டமின் ஏ, ஈ போன்றவைகளை மிக அதிக அளவில் கொடுப்பதால் உடலில் ஒரு சமச்சீரற்ற தன்மை உருவாக்கி கரு இழப்பினை உருவாக்குகிறார்கள்.

இதிலெல்லாம் பல சிக்கல்கள் இருந்தாலும் கருக் கலைப்புக்காக பொறுத்துக் கொள்கிறார்கள்.

கரு கர்ப்பப் பையில் ஒட்டியபின்

பொதுவாக 12 வாரம் வரையில்தான் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய முடியும். ஆனால் போலிகள் 40வாரம் வரை கூட கருக்கலைப்பு செய்வார்கள்.
(பெரும்பாலும் 40வாரத்திற்கு முன்பே குழந்தை முழு ஆரோக்கியமாக பிறந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்)(மொத்த கர்ப்ப காலம் 280 நாட்கள்)

போலிகளின் மருத்துவ முறைகள் மிக எளிமை யானவை. கிராமங்களில் இந்தப் போலிகள் வீட்டுக்கே வந்து வேலையைச் சுமுகமாக முடித்துக் கொடுத்துவிடுவார்கள்.

ஒரு சிலர் சில வேர்களை வைத்திருப்பார்கள் .சிலர் மகப்பேறு மருத்துவர்கள் வைத்திருப்பது போன்று சில கருவிகளையும் வைத்திருப்பார்கள்.

கருப்பையின் வாய்க்குள் வைத்திருக்கும் வேர்களை நுழைத்து விடுவார்கள். இது ஒன்றும் மிக கடினமான செயல் அல்ல. கொஞ்சம் பயிற்சி எடுத்தால் யாருமே கர்ப்பப்பை வாயினை தொட்டுப் பார்க்க முடியும். சற்று முரட்டுத் தனமாக இதை செய்து விட்டால் போதும்.

எந்த ஒரு வெளிப் பொருளையுமே நமது உடல் ஒத்துக் கொள்ளாது. வெளீயே தள்ளவே முயற்சி செய்யும். அந்த நிலையில் அது போலியால் நுழைக்கப் படும் பொருளினை வெளியே தள்ள உடல் மேற்கொள்ளும் முயற்சிகளால் கரு வெளியேற்றப் படும்

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்கள் காலில் ஒரு முள் குத்திவிட்டால் உள்ளே இருக்கும் முள் வெளியேற காலில் என்னென்ன செயல்கள் நடைபெறுகின்றன என்று யோசித்துப் பாருங்கள். சீல் கட்டி, நெரி கட்டி, காய்ச்சல் வந்து, வெறும் காலில் குத்திய முள் எடுக்கவே உடல் இவ்வளவு தற்காப்பு நடவடிக்கை எடுத்து இவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டால் கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் வெளிப் பொருட்கள் வெளியேற எவ்வளவு சிரமங்கள் ஏற்படும்.

ஆனால் கிராமங்களில் வீட்டில் உள்ள பிறருக்கு குறிப்பாக ஆண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை , புரிவதில்லை. கருக்கலைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த வேதனைகளை தாங்கிக் கொண்டே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இதை ஒத்துக் கொள்கிறார்கள்.

கரு முழுவதும் வெளியாகாமல் சில நேரங்களில் பிசிறு ஏதும் இருந்தால் அந்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு இருந்து கொண்டே இருக்கும். உதிர இழப்பில் அந்தப் பெண்மணி மிகவும் பலவீனமாகப் போய்விடுவார்.

அந்த நேரத்தில் தொற்றும் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால் தொற்றுக்கிருமிகளால் மிக மோசமான நிலைக்கு தள்ளப் படுகிறார்.

இது போன்ற தொற்றுக்களாலும், போலிகளின் செயலாலும் ஒரு கூடுதல் பலன் ஒன்று உண்டு. அது கர்ப்பப்பை மிக பலவீனமடைவதால் இனி கர்ப்பம் என்பதே இருக்காது என்பதே!

இதைக்கூட சில போலிகள் கூடுதல் தகுதிகளாக வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் கருக்கலைப்பு செய்து கொண்டால் எதிர்காலத்தில் கர்ப்பம் என்பதே இருக்காது என்று விளம்பரப் படுத்திக் கொண்டு இருப்பார்கள்.

போலிக் கருக்கலைப்பால் மிக பலவீனமான பெண் உடலுற்விற்கே தகுதி இல்லாமல் போனால் பிறகெப்படி கருவுறுவார்?

ஆனால் போலிகள் வீட்டுக்கே வந்து கருக்கலைப்பு செய்து விடுவதாலும் தொடர்சிகிச்சைக்காக வீட்டுக்கே வந்து செய்வதாலும் அவருக்கு நல்ல பெயரே கிடைக்கிறது.

கர்ப்பத்தின் பின்பகுதியில்

கர்ப்பப்பையின் வாயினுள் ஒரு வேற்றுப் பொருள் நுழையும் போது பனிக்குடம் உடைந்து போகும். பனிக் குடம் உடைந்தால் கண்டிப்பாக கர்ப்பப் பையில் இருப்பது வெளியேறியே தீரும். இது ஏறக்குறைய பிரசவம் போலத்தான். நன்கு வலியெடுத்து நடக்கும் பிரசவம் சில மணிநேரங்களில் முடிந்துவிடும் . ஒருசிலருக்கு மிகச் சீக்கிரமே நடந்துவிடும். ஆனால் இவ்வாறு கரு வளர்ச்சி அடையும் முன்னரே பனிக்குடம் உடைவதால் நடக்கும் நிகழ்வானது சில நேரங்களில் சில நாட்கள் கூட போக வாய்ப்புண்டு. கரு பெரும்பாலும் வயிற்றுக்குள் இறந்துவிடும். வயிற்றுக்குள் இறந்த பிண்டம் இருக்கும்போது அதனால் கூட ஒவ்வாமை வேறுவிதமாக ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் ரத்தம் உறையும் தண்மை இழந்து மரணம் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.

குழந்தை பாதி வெளீயேறி கையாள் இழுத்து அறுந்து அந்த நிகழ்வு தாங்காமல் தாய் மரணம் அடைந்த சம்பவங்கள் கூட பத்திரிக்கைகளில் வந்துள்ளன.

குழந்தை வெளியே வந்து சில துள்ளுதுள்ளி இறந்து போன சம்பவம் கூட நான் கேள்விப் பட்டதுண்டு.

பல நேரங்களில் ரணஜன்னி தடுப்பூசிகள் போடப் படுவதில்லை. ஒரு சில போலிகள் ரணஜன்னி தடுப்பூசி போட்டாலும் அந்த ஊசி சரியான வெப்பநிலையில் பராமரிக்க படுவதில்லை. நோய் தொற்றை தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் ப்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த சில மருந்துகளை அவர்கள் தினமும் வீட்டுக்கே வந்து போட்டுவிட்டாலும் அந்த மருந்துகள் பெரும்பாலும் அவர்கள் செய்யும் கடுமையான வேலைக்கு போதாத அளவில்தான் இருக்கிறது.


கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பு பற்றிய உண்மைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கின்றன. போலிகளால் ஆகும் மொத்த செலவு தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவு எல்லாம் ஏற்க்குறைய சரிசமமாகவே இருக்கும். ஆனால் துவக்கத்தில் மட்டும் மிகக்குறைந்த செலவு போன்று தோன்றும்.

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கும் வழிமுறைகள் தெரியாத நிலையில் மக்கள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் வசதிகள்:

1.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக கருக்கலைப்பும் குடும்ப நல சிகிச்சையும் செய்யப் படுகின்றன.

2. காப்பர்-டி, மற்றும் நிரோத் போன்ற ஆணுறைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கிடைக்கின்றன. ஆணுறை மருத்துவமனையில் முக்கிய இடங்களில் தனி பெட்டிகளில் வைக்கப் பட்டுள்ளன. வேண்டியவர்கள் வேண்டுமளவு அவர்களாகவே எடுத்துப் போகலாம்.

3.எதிர்பாராத சூழலில் விபத்து போல நிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்து கர்ப்பம் ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால் கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கும் மாத்திரைகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. இவற்றை சம்பட்ட மருத்துவரை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த மாத்திரைகளை 72 மணிநேரத்திற்குள் உட்கொண்டால் கர்ப்பத்தை தடுத்துவிடலாம்.

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்தவும்

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP