Wednesday, August 11, 2010

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..?

அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர். அவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சுவழி. ஏறக்குறைய நேரம் இரவு 11ஐ தாண்டி விட்டது. நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும் கிராமம் அது. சற்று பெரிய கிராமம். (வாசு, ரவிக்குமார் படங்களில் காட்டப் படுவது போன்றது).

வழக்கமாக அந்த ஊரில் அந்த அம்மாவிற்கு ஊசி போடுபவர் எங்கோ வெளியூர் போய்விட்டார். இப்போது என்ன செய்வது என பண்ணையாரும் அவரது கைத்தடிகளும் மண்டையை பயங்கரமாக கசக்கிப் பிளிந்து கொண்டிருந்தனர். அப்போது கணக்குப் பிள்ளை ஒரு வழியைக் கூறினார். அந்த ஊரின் அருகிலுள்ள ஊரில் ஒரு ஆரம்ப சுகாரார நிலையம். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவரின் தந்தைதார் இதே ஊரில் ஏற்க்குறைய பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஆசிரியாராய் பணியாற்றியிருந்தார். அதனால் இந்த ஊரில் இருந்த சில பெருந்தலைகள் அவருக்கு ஓரளவுக்குப் பழக்கம். அதனால் இதே ஊரில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்தார்.

கணக்குப் பிள்ளை சொன்னவுடன் பணக்காரருக்கும் அதுவே சரியான யோசனையாகப் பட்டது. மருத்துவரை அழைக்க பணக்காரரின் கார் புறப்பட்டது. அங்கே மருத்துவரின் வீட்டுக் கதவு தட்டப் பட்டது. மருத்துவர் வந்தார். தான் இன்று மருத்துவ முகாமிற்கு சென்றிருந்ததாகவும் சற்றுமுந்தான் வந்ததாகவும் தெரிவித்தார்.

அவசியமென்றால் நோயாளியை இங்கு அழைத்துவாருங்கள் பார்க்கிறேன்
என்று மருத்துவர் தெரிவித்தார்.

தாய் அவுக இங்கெல்லாம் வரமாட்டாக.. அதுவும் நெஞ்சுவலின்னு சொல்றோம் . வா டாக்டர். இது கைத்தடிகள்.

மருத்துவர் தனக்கு முடியவில்லைஎன்று மறுக்க மருத்துவரின் தந்தைக்கு அலைபேசி பறந்தது. தந்தையார் மகனிடம் அலைபேசியில் பேசினார். சூழ்நிலைக்கு தகுந்தது போல் அனுசரித்துப் போகுமாறும் பெரிய குடும்பத்தினை பகைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டது.

மருத்துவர் புறப்பட்டுப் போனார். அங்கே போய் பார்த்த போது பண்ணைக் காரின் மனைவி பெரிய சைஸ் கலர் டி.வி.யில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஈ. சி. ஜி. பரிசோதனை எடுக்க வேண்டுமே...

அதெல்லாம் எடுத்திருக்கிறோம். பல்வேறு பரிசோதனைகளும் செய்திருக்கிறோம். என்று பெரிய புத்தகத்தை எடுத்து கையில் கொடுத்தனர். மருத்துவர் பார்த்தார். அது நானூறு கி.மீ. தூரத்தில் இருக்கும் பெருநகரத்தில் பார்த்த மருத்துவ குறிப்புகளின் தொகுப்பு.

பயப்பட ஒன்றும் இல்லை. இது சாதாரண வலிதான்
இது மருத்துவர்.

நானும் இதைதான் டாக்டர் சொன்னேன். இதுக்குப் போய் டவுனுக்கு கூப்பிடறாங்க .. நான் தான் இங்கிருக்குறவரையே கூப்பிட்டு ஊசிப் போட்டுக்கலாம்னு சொன்னேன். இது பண்ணைக்காரர் மனைவி.

மருத்துவர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போது அவருக்கு ஃபீஸ் எவ்வளவு எனக் கேட்கப்பட்டது. மருத்துவரும் பெருந்தன்மையாக
அப்பாவுக்குத் தெரிஞ்சவர்ன்னு சொல்லறீங்க . என்க்கு ஃபீஸ் எதுவும் வேண்டாம். என்றார் மருத்துவர்.

டாக்டர் அப்படியெல்லாம் நீங்கள் மறுக்கக் கூடாது. கண்டிப்பாக நீங்க வாங்கிக் கொண்டே தீர வேண்டும். என்று கையில் பணத்தினை திணித்தனர். அது ஒரு பத்து ரூபாய். ( அப்போது அந்த ஊரில் ஒரு டீயின் விலை 2.50)

மருத்துவர் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர்களே தொடர்ந்தனர். டாக்டர் நாங்க எப்போதும் 5தான் கொடுப்போம். நீங்க நம்ம வாத்தியாரோட பையன் அப்படிங்கறதால 10 கொடுத்திருக்கிறோம்.

( அந்த ஊரில் அந்த அம்மாவுக்கு எப்போதும் ஊசி போடுபவர் ஒரு அனுபவரீதியில் ஆனவர். அவருக்குத்தெரிந்த நாலைந்து மருந்துகளை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருப்பவர். மக்கள் அவரையும் இவரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்திருக்கின்றனர்)

Read more...

Monday, August 9, 2010

ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் நடைமுறை குறிப்புகள் 1. மனித வள நிர்வாகம்

உங்க வயசு பசங்களுக்கு அட்வைசும் புடிக்காது, அத சொல்ரவங்களையும் புடிக்காது. இது அட்வைஸ் இல்ல, அக்கறை
- பாலகுமாரன்
(நாவல் அல்ல, திரைப்படம் !!
எந்த படம் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு பாராட்டுக்கள்
)


ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக பணியில் சேரும் மருத்துவ அலுவலர்களுக்கான மனித வள நிர்வாகம் குறித்து (Human Resources Management or simply Man Management) சில அறிவுரைகள்
  1. மருத்துவ அலுவலரே தான் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைவர் - the boss of the PHC.
  2. புற நோயாளி சிகிச்சை மட்டும் பார்த்தால் போதாது. அங்கு பணிபுரியும் அனைவரும் தத்தமது வேலைகளை ஒழுங்காக செய்கிறார்களா என்பதையும் அவர் கண்காணிக்க வேண்டும்
  3. மருத்துவ அலுவலருக்கு இரு கடமைகள் 1. மருத்துவர் 2. அலுவலர். உங்களுக்கு மருத்துவர் பணி தவிர அலுவலர் பணியும் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள தவறாதீர்கள்
  4. உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் செய்வதற்கும் செய்யாததற்கும் நீங்கள் தான் பொறுப்பு. உங்கள் மேலதிகாரிகள் உங்களைத்தான் கேட்பார்கள்
  5. நீங்கள் உங்கள் கீழ் பணிபுரிபவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் பணியாளர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் தலையிடாதீர்கள்.
  6. நீங்கள் அமர்ந்திருப்பது மருத்துவ அலுவலரின் நாற்காலியில் தானே தவிர துனை இயக்குனரின் நாற்காலியிலோ அல்லது மருந்தாளுனரின் நாற்காலியிலோ அல்ல என்பதை நீங்கள் மறக்காதீர்கள்
  7. உங்கள் பணி உங்களுக்கு அரசிடம் இருந்து / இயக்குனரிடமிருந்து / துனை இயக்குனரிடமிருந்து வரும் உத்தரவுகளை நிறைவேற்றுவது. அது தொடர்பாக உங்கள் கீழுள்ளவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது
  8. உங்கள் பணியாளர்களின் ஆலோசனைகளை / வேண்டுகோள்களை / உத்தரவுகளை !! அப்படியே நிறைவேற்ற வேண்டுமென்பதில்லை
  9. நீங்கள் செய்ய வேண்டிய செயல் ஒன்றில் நீங்கள் உங்கள் பணியாளர்களின் அறிவுரைகளின் படி செயல்பட்டால் கூட நீங்கள் செய்ய வேண்டிய அந்த செயலுக்கு முழு பொறுப்பும் நீங்கள் தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
  10. இதை மறுமுறை வாசித்து கொள்ளுங்கள்
  11. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்ணா / அக்கா / தங்கச்சி போன்ற பாசமலர் உறவுகளை தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது (உங்கள் கல்லூரி காலங்களில் இது போன்ற பாசமலர்கள் எங்கு சென்று முடிந்தது என்பது தெரியும் தானே !!)
  12. ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தேவையில்லாத பாச பரிமாற்றங்களினால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனையே
  13. யாரையும் முழுவதும் நம்ப வேண்டாம். யாரையும் முழுவதும் உதாசீனப்படுத்த வேண்டாம்
  14. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் (எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு)
  15. நீங்கள் அதிகாரி என்பதால் குற்றம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை.
  16. யாராவது ஏதாவது தவறு செய்திருந்தாலும் பொது இடத்தில் வைத்து அதை சுட்டிக்காட்டாதீர்கள். மற்றவர்கள் முன் நீங்கள் ஹீரோவாக வேண்டும் என்பதற்காக அடுத்தவரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்
  17. பணியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட நேரும் போது “இதை இப்படி செய்வதற்கு பதில் இப்படி செய்ய வேண்டும்” என்றே கூற வேண்டும் “நீ செய்தது தவறு” என்று முகத்தில் அடித்தது போல் கூறுவது நன்றன்று. உங்கள் கீழ் பணிபுரிபவர்களில் ஏறத்தாழ அனைவரும் உங்களை விட வயதில் பெரியவர்கள் என்பதை மறக்க வேண்டாம்
  18. வார ஆய்வு பதிவேட்டிலும், வார ஆய்வு கூட்ட குறிப்பு புத்தகத்திலும் தேவைப்படும் மாற்றங்களை எழுதி அனைவரிடமும் கையொப்பம் வாங்குவது எளிய வழி
  19. எதிர்பாலின ஊழியர் ஒருவருடன் அறையில் தனியாக பேச வேண்டாம். ஒன்று மூன்றாம் நபர் உடனிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அல்லது பொது இடத்தில் பேசவும்
  20. உங்கள் அறையில் தேவையில்லாமல் யாரும் அமர வேண்டாம்
  21. அனைவரையும் உட்கார வைத்து பேசுங்கள். நிற்க வைத்து பேச வேண்டாம்
  22. உங்கள் தனிப்பட்ட வேலைகளை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் அளிக்காதீர்கள்
  23. பிற மருத்துவ அலுவலர்களை பற்றியோ, துனை இயக்குனரை பற்றியோ யாராவது பேசினால் ஊக்குவிக்க வேண்டாம்
  24. உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு என்றால் நேரடியாக பேசி சுமூக தீர்வு காண முயலுங்கள்
  25. அப்படியும் சரி வரவில்லை என்றால் சங்க நிர்வாகிகள் மூலம் பேசலாம். நீங்கள் இருவரும் ஒரே கல்லூரி என்றால் கல்லூரியில் உங்களிருவருக்கும் தெரிந்த மூத்த மருத்துவர் மூலம் தீர்வு காண முயலுங்கள்.
  26. உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு பிரச்சனையை துனை இயக்குனரிடமோ, அல்லது உங்கள் கீழ் பணி புரிபவரிடமோ கொண்டு செல்ல வேண்டாம்

Read more...

விக்ரம் திரைப்படமும், நள்ளிரவில் நாய் கடி வாங்கியவனும்

புகுமுன்:-

சினிமா தொடர்புடைய இடுகையாக இருந்தாலும் இது சினிமா  இடுகை அல்ல

=========================================================================

டாக்டர் என்னும் தொழிலாளி 


பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள் 


ஆகிய இடுகைகளின் தொடர்ச்சியாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.




வெகுநாட்களுக்கு முன் விக்ரம் நடித்த சமுராய் படத்தினைப் பார்த்திருப்பீர்கள். நானும் அப்போது பார்த்ததுதான். சமீபத்தில் தொலைக்காட்சியில் கூட அதைப் போட்டிருந்தார்கள்.  படம் எப்படியிருந்தாலும்., அந்தப் படத்தின் முதுகெலும்பாலான ஃபிளாஷ்பேக் காட்சியில் குளுக்கோஸ் உடன் திரவ மருந்து செலுத்துவார் நாயகி (அந்தப் பகுதியின் நாயகி). அந்தச் சிறுவன் இறந்து போய் விட தான் மிகவும் கஷ்டப் பட்டு பார்த்துவந்த சிறுவன் இறந்து விட்டதாகவும்  அந்த கலங்கிப் போன தூசுகள் படிந்த திரவ மருந்தை செலுத்தியதால்தான் இறந்து போனதாகவும் அந்த மருந்து வாங்கியவர்களை தட்டிக் கேட்பார். சில தட்டிக் கழித்தல்களுக்குப் பின் அவர் இறந்து விடுவார். விக்ரம் பழிவாங்க ஆரம்பிப்பார்.


=================================================================


உண்மையில் இந்த நிகழ்ச்சியில் தவறு என்பது குளுக்கோஸ் ஏற்றிய அந்த நாயகின் மீதுதான். எந்த மருத்துவர் எந்த மருந்தினைச் செலுத்தினாலும் அந்த பாட்டில் உடைந்து இருக்கிறதா?  மருந்தின் நிறம் மாறி இருக்கிறதா? அதில் ஏதாவது மிதக்கிறதா?  அதன் காலாவதி தேதி இன்னும் எத்தனை நாட்களுக்கு என்றெல்லாம் சரிபார்த்துவிட்டுத்தான் போட வேண்டும். 


ஆகவே புதிதாக கிளினிக் தொடங்கும் மருத்துவர்கள் இந்த நடைமுறைகளை ஒவ்வொரு முறையும் பின்பற்றியே தீர வேண்டும்,. இல்லையென்றால் விக்ரம் மாதிரி யாராவது வந்து கடத்திக் கொண்டு போக நேரிடலாம். 




=====================================================================


தொடரும்....,

 ====================================================================

அது ஒரு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்.  

இரவு நேரம், பிரசவம் பார்ப்பதற்காக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு தாண்டிய நேரம்  சில பல நபர்கள். டாக்டர் நாய் கடிச்சிடிச்சி என்று கூறிக் கொண்டே வந்தார்கள்.   


செவிலியர் பார்த்தார்.  சில முதலுதவிகள் மற்றும் தடுப்பூசி, தொற்றுப் பரவாமல் இருக்க ஊசி போட்டுவிட்டு  நாய்கடிக்கான சிறப்புத் தடுப்பூசி நாளைக் காலையில் மருத்துவர் முன்னிலையில் போட வேண்டும். காலையில் வாருங்கள் என்றிருக்கிறார்.  நண்பர்களுக்கு பயங்கர கோபம்.  கண்டபடி சண்டைப் போட்டுவிட்டு திரும்பி விடுகின்றனர்.  




காலையில் கிளம்பி மருத்துவமனைக்குப் போகிறார்கள்.  பயங்கரமாக பில்டப் மற்றும் அடிபொடிகளைச் சேர்த்துக் கொண்டு  சுகாதார நிலைய வாசலில் சண்டை போடுகிறார்கள். 


மருத்துவரின் அறை முன்னும் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளே போகிறார்கள்.  நள்ளிரவில் நாய் கடியோடு  வந்தால் செவிலியர் நீங்கள் வந்த உடந்தான் போடுவேன் என்கிறார்.  என்ன இது அநியாயம்? நீங்க வந்தது தெரிந்த பிந்தான் நாயைக் கடிக்க சொல்ல வேண்டுமா?  


மருத்துவர் பொறுமையாக நாய் க்டி ஊசி எத்தனை மணி நேரத்துக்குள் போட வேண்டும். உடனடியாக கொடுக்கப் பட வேண்டிய மருந்துகள் கொடுக்கப் பட்டு விட்டன் என்பது பற்றியெல்லாம் சொல்லு விட்டு அந்தக் கேள்வியைக் கேடிகிறார்.




நள்ளிரவுக்கு மேல் எங்கு போய் நாய் கடி வாங்கி வந்தாய்? உனக்கு அங்கே என்ன வேலை?  


உடன் வந்த நண்பர்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க நாய்கடி பட்ட நபர் ஊசி போடுமுன்பே எஸ்கேப்..............,

Read more...

Sunday, August 8, 2010

பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள்

புகுமுன்:-

டாக்டர் என்னும் தொழிலாளி   தொடர்ச்சியாகவே இந்த இடுகை அமைகிறது.  புதிதாக மருத்துவத் தொழிலில் இறங்கும் மருத்துவ பட்டதாரிக்கு எனக்கு என் மூத்தோர் சொன்ன வார்த்தைகளை தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறேன். மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பார்கள்.

ஆனால் புதிதாக மருத்துவம் படித்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு சுவை யெல்லாம் உணரக் கூடிய நிலை இருப்பதில்லை.  தமிழகத்தில் மருத்துவம் படித்து வரும், கடந்த சில பத்தாண்டுகளில் படித்து முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள்  பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குவித்த ஒரே தகுதியில் உள்ளே வந்தவர்கள். அவர்களில் பலரின் பெற்றோர், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வசதிப்படைத்தவர்கள் என்பவர்கள் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பவர்கள்தான்.  வெகுசிலரே  பெரிய மருத்துவமனைக்குச் சொந்தக் காரர்களின் பிள்ளைகள்.

இந்த நடுத்தரக் குடும்பத்தை, மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாங்கள் செய்யப் போகும் தொழிலின்  மேன்மை தெரிந்திருந்தாலும்,  அவனது கடமை அவனை பயமுறுத்திக் கொண்டேதான் இருக்கும். அவர்கள் வாங்கிருக்கும் வங்கிக் கடன், அவர்களை மருத்துவக் கல்லூரில் சேர்த்ததால் அவர்களது சகோதர்களையும் தனியார் தொழிற்நுட்பக் கல்லூரிகளில் சேர்த்து பெற்றோர் வாங்கி வைத்த கடன்,  சில நேரங்களில் இவர்களைப் படிக்க வைப்பதால் இவர்களின் தங்கைகளுக்கு உள்ளூர் கலைக் கல்லூரி படிப்பை மட்டுமே தரக் கூடிய சூழல் அவர்களது பெற்றோருக்கு இருக்கும். எனவே  தங்கைக்கு வயதாகும் முன்பே திருமண ஏற்பாட்டை கவனிக்க வேண்டும். சில நேரங்களில் அக்கா வேறு இருப்பார். அவரது திருமணத்திற்கு பொருள்  ஈட்ட வேண்டு,   ( எம்.பி.பி.எஸ் முடிக்கும் போதே 17+6 = 23 வய்து குறைந்த பட்சம் ஆகியிருக்கும்.) .  எனது ஜூனியர் மாணவர் ஒருவரது படிப்புச் செலவுக்காக அவரது தம்பி  பனியன் கம்பெனியில் வேலை பார்த்து பணம் அனுப்புவார்.  செலவு என்பது குறைவுதான்., இருந்தாலும்  குடும்பத்தில் இன்னொருவரும் சம்பாதிக்க வேண்டிய சூழல் .   இவ்வாறாக பெரிய மனச்சுமையோடுதான்  பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெளியே வருகிறார்கள்.

இவர்களுக்கு நெல்லிக் கனியின் கசப்பு பெரும்பாலும் தெரிய வாய்ப்பு இல்லாத காரணத்தால்  மூத்தோர் சொற்கள் நன்றாகவே போய் சேருகின்றன.

======================================================================

சென்ற இடுகையில்  அனைத்து மருத்துவர்களும் (சில சிறப்பு மேல் படிப்புகளைத் தவிர ) தனியாக சிறிய அளவிளான கிளினிக் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.  அனைவரின் வாழ்க்கையிலுமே இந்த கிளினிக் வாழ்க்கை மிக முக்கியமானது.   இந்த கிளினிக்கில்தான்  ஒவ்வொரு நோயாளியின் அருமையும் தென்படும்.  தினமும் பார்க்கும் நோயாளிகளைப் பற்றிய சிறுகுறிப்புக்களை ஒரு பதிவேட்டில் ஏற்றிக் கொண்டே வர வேண்டும்.   ஒவ்வொரு நாள் கிளினிக் முடிந்த உடனும்,  நோயாளிகளைப் பற்றி அசைப் போட வேண்டும்.  இதில்  கிளினிக் வழியில் இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்? அருகிலுள்ள மருத்துவ மனையில் கூட்டமாக இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்?  நம்மையே எதிர்பார்த்து வந்தவர்கள் எத்தனை பேர் ?  வந்தவர்களில் நாமே வைத்தியம் பார்க்கும் அளவில் இருந்தவர்கள் எத்தனை பேர்? பரிந்துரை செய்யப் பட்டவர்கள் எத்தனை பேர் என்பதையும்  வந்த நோயாளிகளுக்கு நாம் கொடுத்த மருத்துவம் சரியானதுதானா என்பதையும் ஏதாவது கூட்டி அல்லது குறைத்து இருக்கலாமா? என்பதையும்  யோசிக்க வேண்டும்.

குறிப்பாக முதல் நாளில் வந்து இரண்டாம் நாளும் வந்து எந்த முன்னேற்றமும் இல்லை என்று சொன்னால் ஏன் இல்லை, இதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் போனற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.    இது போன்ற  விஷயங்களில் நன்கு கவனம் செலுத்தி வந்தால் முதல் இரண்டு மாதங்களில் தினமும் ஐந்து பேராவது வர தொடங்கி விடுவார்கள்.  

இரண்டாவது மாத முடிவில் ஐந்து என்பதே பெரிய எண்ணிக்கை . எனவே மனம் தளராமல் உழைக்க வேண்டியது தான்.  தொடர்ந்து உழைத்தால், ஓராண்டு முடிவில் 20 - 25 பேரைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.    இந்த கால கட்டத்தில்  வரும் நோயாளிகளின் பரிந்துரையில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.  இந்த வகையான நோயாளிகள்தான் நமக்கு தனி வாடிக்கையாளர்களை உருவாக்குவார்கள். அவர்களது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை  தனியே உற்று நோக்கிவந்தால் மட்டும் நாமும் ஒரு நிலை பெற முடியும்.

இது போன்ற சிறு கிளினிக் தொடங்கும்போது ஊசி போடுதல், காயத்துக்கு மருந்து கட்டுதல்,  மருந்துகளை எப்படிச் சாப்பிடுவது என்று சொல்லிக் கொடுத்தல் போன்ற பணிகளை  ஒருத்தரே செய்வதுதான் நலம்.  தனியார் மருத்துவம்னையில் வேலைக்குச் சேர்ந்தாலோ அரசுப் பணியிலோ இந்த வாய்ப்புகள் கிடைக்காது.  இந்த வேலைகள் செய்து வந்தால் மட்டுமே நோயாளிக்கும் நமக்கும் ஒரு நெருக்கம் அமையும். சில காயங்களை தனி ஒரு ஆளாக சுத்தப் படுத்தி தையல் போட்டு பின்னர் கட்டும்போட்டு, ஊசி போட்டு அனுப்பும்போது    கிடைக்கும்     தொழில் திருப்தி என்பது ஒரு காகிதத்தில்  எல்லாவற்றையும் செய்யுமாறு ஆணைகளை எழுதித் தரும்போது கிடைக்காது.   பொதுவாக கிளினிக் ஆரம்பிக்கும்போது மிக ஆரம்ப கட்டத்தில் கூட்டுவது,  வரிசைப் படுத்தி அனுப்புவது போன்ற வேலைகளுக்கு மட்டும் ஒரே ஒரு வயதானவரை வேலைக்கு வைத்துக் கொள்ளுவது போதுமானது.

சில நப்ர்கள் காயங்களில் தண்ணீர் பட்டால் சீல் பிடித்துக் கொள்ளும் என்ற எண்ணத்தில் காயம் இருக்கும் பகுதி முழுவதும் மோசமாகப் பராமரித்து வருவார்கள். இதில் கிளம்பும் நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு சுத்தம் செய்து ஆற்றுவது என்பதே ஒரு சவாலாக இருக்கும்.  இதெல்லாம் செய்தால் மட்டுமே நமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்க முடியும்.  ஒவ்வொரு நோயாளியின் முக்கியத்துவத்தையும் உண்ரும்போதுதான் நாம் சம்பாதிக்கும் காசின் மதிப்பும் நமக்குத் தெரியும்.  இந்தக் கட்டத்தை தவர விடுவதுதான் பல பெரிய மருத்துவர்களின் மகன்கள் தந்தை அளவிற்கு சாதிக்க முடியாமல் போவதற்குக் காரணம்.   ஒரு ஆலமரத்தின் அடியில் சிறுபுல் பூண்டுகூட முளைக்காது என்பதற்கு உதாரணம் இவர்கள்தான்.    ஒவ்வொரு வாடிக்கையாளரையும் சம்பாதிப்பது எவ்வளவு சிரமம் என்பதையும் அதைத் தக்கவைப்பது அதைவிட எவ்வளவு சிரமம் என்பதும் தெரிந்தால் மட்டுமேதொழிலில் நிற்பது சாத்தியம். 


நோயாளியிடம் பீஸ் வாங்குவது என்பது நமது உரிமை.,  சராசரியாக அந்தப் பகுதியில் வாங்கப் படும் ஃபீஸை வாங்குங்கள்.  எந்த நேரத்திலும் குறைக்காதீர்கள்.  போட்டியாளர்களின் உள்ளாவீர்கள். தவிரவும் உங்களை கற்றுக்குட்டி டாக்டர் என்றும்  ஏமாந்த சோணகிரி என்றும் முடிவு செய்துவிட வாய்ப்பு இருக்கிறது.  அதே நோயாளியால்  அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்ற நேரத்தில்  இந்தத் தொகைதான் வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள்.  சில நேரங்களில் இலவசமாகப் பார்த்தால் கூட தவறில்லை.

================================================================

தொடரும்...................................................

Read more...

Wednesday, August 4, 2010

டாக்டர் என்னும் தொழிலாளி

புகுமுன்:-

இந்த இடுகை   மருத்துவப்  பட்டப் படிப்பு படித்துவிட்டு தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கானது. நான் தொடங்கியபோது எனது மூத்த சகாக்கள் சொன்னதன் தொகுப்பு.  எனக்கு நினைவில் இருப்பவை மற்றும் என்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவிய வழிகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
இதில் வாதம் செய்ய நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான வாதத்திற்கும் அல்லது அவர்களின் உள்ளத்தில் குடைந்து கொண்டிருக்கும் சந்தேகங்களை மட்டுமே கேட்கவும்.


1.மருத்துவப் படிப்பு முடித்தவுடன் நீங்கள் எதிர்கால வாழ்க்கை முறையை தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
அ..மருத்துவத்தொழில் பிடித்திருக்கிறது. இதில் சாதிக்க வேண்டும்.
ஆ.மருத்துவத் தொழில் பிடிக்கவில்லை. மாறிவிட  நினைக்கலாம்

=======================================================================
மாறிவிட நினைக்கிறீர்கள் என்றால் உங்கள் முன் உள்ள வழிகள்:

1. இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகியவற்றிற்கு சென்று விடலாம்.
2.மருத்துவத் துறையிலேயே மருத்துவம் சார் படிப்புகளுக்கு ஆசிரியப் பணிக்குச் சென்றுவிடலாம்.
3.இன்னும் சில வழிகள் உள்ளன. இந்த இடுகையில் மருத்துவம் பற்றி மட்டும் பேச விருப்பம்.
======================================================================

மருத்துவத் துறையில் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். அனைவருக்குமே சம்பாதிப்பதுதான் முதல் நோக்கமாக இருக்கமுடியும்.  எந்த தொழிலுக்குமே  முதல் என்பது  நற்பெயர், நேர்மைதான்.  அதுவும் மருத்துவத் தொழிலில்  வருமானம் என்பது நற்பெயரினை வைத்துத்தான். எனவே நற்பெயருக்கு பங்கம் வராமல் தொழில் செய்ய வேண்டும்.

=================================================================

உங்களுக்கு வசதி இருந்தாலும், இல்லாவிட்டாலும்  முதலில் ஆலோசனை மட்டும் தரக்கூடிய சிறிய வகை கிளினிக் தொடங்குங்கள்.

உங்கள் தந்தை  மிகப் பெரிய மருத்துவ மனைக்குச் சொந்தக் காரராக இருந்தாலும்  முதலில் தனியாக கிளினிக் தொடங்குவதே நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

இதில் சில வகை சிறப்பு மேல் படிப்பு முடித்தவர்களுக்கு விலக்குக் கொடுக்கலாம். ஆனால் மேல்படிப்பு படித்தவர்கள்கூட கிளினிக் தொடங்குவதுதான் நன்று.

உள் நோயாளியாகச் சேர்க்க வேண்டியவர்களை அருகிலுள்ள மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்ளலாம்.

=======================================================================
நீங்கள் அரசுப் பணியில் இருக்குறீர்கள் என்றால்  அந்த ஊரிலேயே மருத்துவமனை தொடங்கும் யோசனை இருந்தால் நல்ல போக்குவரத்து சிறப்பு மருத்துவர்கள் அழைத்தால் வர தயாராக இருக்கும் இடத்தில் கிளினிக் தொடங்குங்கள்.  அது நகரமாக இருந்தாலும் சரி, பெரிய கிராமமாக இருந்தாலும் சரி.

மேற்படிப்பு படிக்கப் போகும் எண்ணத்தில் இருந்தால் நல்ல மக்கள் தொகையும், மக்கள் வந்து போகும் வசதியும் உள்ள கிராமத்தில்  கிளினிக் தொடங்கலாம்.. அங்கே ஏற்கனவே ஓரிரு மருத்துவர்கள் இருந்தாலும் கவலைப் பட தேவையில்லை.   இந்தக் கிராமங்கள் நீங்கள் படிக்கச் செல்லும் வரையிலான சில ஆண்டுகளில் உங்களுக்கு நல்ல அளவிலான நோயாளிகளைத் தரவல்லன.

இங்கும் உங்கள் நற்பெயரைக் கட்டிக் காக்க வேண்டியது அவசியம். காலந்தவறாமை மிக அவசியம்.  கிளினிக்கில்  பலகையில் எழுதிய நேரத்தில் வந்து அமரவேண்டும்.  அதேபோல் நீங்கள் அரசு மருத்துவமனையிலும் நல்ல பெயரை சேர்க்க வேண்டும்.  நீங்கள் சொந்தக் கிளினிக்கில் கொடுக்கும் தரமே அரசு மருத்துவமனையிலும் இருக்கும் என்ற எண்ணம் தேவை. நாட்டில் அரசு மருத்துவமனையில் கூட்டத்தோடு கூட்ட்மாக வர விருப்பம் இல்லாத நிறையப் பேர் இருக்கிறார்கள். தவிரவும் பகலில் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள்.  அவர்கள் உங்கள் கிளினிக்கைத் தேடி வருவார்கள்.


எந்தக் கால கட்டத்திலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உங்கள் கிளினிக்கிற்கு வரச் சொல்லாதீர்கள்.  அது உங்கள் நேர்மையான நற்பெயரைக் கெடுத்துவிடும்.  அதே போல நாளை அரசு மருத்துவமனைக்கு வருகிறேன். இந்த மருந்துகளை தாருங்கள் என்று சொல்பவர்களுக்கு முகம் கோணாமல் பதில் தாருங்கள்.


======================================================================

அரசுப் பணியில் இல்லை என்றாலும் காலந்தவறாமை, பொறுமை, நேர்மை ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்.  அரசுப் பணியில் இல்லாதவர்கள்  முழு நேரமும் அமர்ந்தால் இங்கு வந்தால் நல்ல தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கும். அருகிலுள்ள மருத்துவமனைகளில் உள்ளவர்களுடன் நல்ல உறவினை வளர்த்துக் கொண்டு உங்கள் சிபாரிசுக் கடிதங்களுக்கு நல்லதொரு மதிப்பினைக் கொடுக்கும் வகையில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


======================================================================

எந்தக் காலத்திலும் நோயாளிக்கு மருந்துக்கள் எழுதுவதில் உங்கள் சொந்த முடிவை எடுங்கள். சில மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் பரிசுப் பொருள்களுக்கு  ஆசைப் படாதீர்கள். நோய் குணமடையவில்லை என்றால் நோயாளிகள் நிரந்தரமாக வேறொரு மருத்துவரைப் பார்க்கச் சென்றுவிடக் கூடும்.  பிராண்ட் X எழுதினால் அதே  பிராண்ட் X  தான் நோயாளிக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் சில நிறுவனங்களின் தரம் சில நிறுவனங்களில் இருக்காது,   தரமான மருந்துகள் எந்த நிறுவனத்தால் குறைந்தவிலைக்கு வழங்குகிறதோ அந்த மருந்துகளையே  தேர்வு செய்யுங்கள்.  உங்கள் நோயாளிகளுக்கு த்ரமான மருந்துகள் கிடைப்பதற்கு நீங்களே பொறுப்பு.


நோயாளி வெளியூர் சென்றால் கூட அந்த மருந்து அங்கே கிடைக்கும் வகையிலான மருந்துகளையே தேர்வு செய்யுங்கள்.

==============================================================

உங்களுக்கு அவசியம் என்று தோன்றும் பரிசோதனைகளை செய்ய, செய்யச் சொல்ல தயங்காதீர்கள்.  அவசியமில்லை என்றால் எந்த ஒரு காரணத்திற்காகவும் செய்யாதீர்கள்.

================================================================

அடுத்த அடுத்த கட்ட மருந்து பிரயோகங்களைப் ப்ற்றி நன்கு தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.  உங்கள் பாடப் புத்தகங்களில் உள்ள வழிமுறைகளை உங்கள் பகுதி ஏற்றாற்போல உபயோகிக்க பழ்கிக் கொள்ளுங்கள். எந்த சூழலிலும்  புத்தகங்களும் , துறைத்தலைவர்களும் உங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழிமுறைகளை மீறாதீர்கள்.

===============================================================
எந்தச் சூழலிலும் உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்கள் பாடத்திட்டத்தில் இல்லாத மருந்துக்களை உபயோகப் படுத்தாதீர்கள்.  உங்கள் ஊரில் இருக்கும் பயிற்சி இல்லாத மருத்துவராக அழைக்கப் படும் நபரைப் பார்த்து உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள் . உங்களிடம் திறமை இருக்கும்போது மக்கள்  கண்டிப்பாக திறமையாளரின் பக்கமே வருவார்கள்.



================================================================
இந்திய மருத்துவக் கழகம் போன்ற அமைப்புக்களில் உறுப்பினராகிக் கொள்ளுங்கள். அவர்கள் நடத்தும் தொடர்கல்வி உட்பட அனைத்துச் செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதில் உள்ள திட்டங்களில் உங்களை உறுப்பினராக்கிக் கொள்ளுங்கள்.

==================================================================
இண்ட்லியில் வாக்களிக்க இங்கு அழுத்திச் செல்லவும்


இதன் அடுத்த பகுதி விரைவில் வரும்.

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP