கூட்டு உழைப்பு - இருதயக் குறைபாடு - தொடர் சிகிச்சை
சென்ற ஆண்டில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்தது. அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அங்குள்ள மருத்துவகுழுவினர் ஆய்வு செய்து அங்குள்ள பள்ளிக்குழந்தைகளில் பிறவி இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்கள்., மற்றும் ருமாட்டிக் இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப் பட்டது, இதில் கிடைத்த முடிவானது ஏறக்குறைய அங்கீரம் பெற்ற முக்கியப் பாடப் புத்தகங்களில் உள்ள சராசரியை ஒத்து வந்திருப்பதால் அவர்கள் மிகச் சரியான வழிவகைகளைப் பின்பற்றி இந்தச் சாதனையை செய்ததாகச் சொல்லலாம்.
பள்ளிக் குழந்தைகளுக்கான வாழ்வொளித் திட்டம்:- இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள மருத்துவ குழுவினர் வியாழக் கிழமைகளிலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளிகளை பார்வையிட்டு குழந்தைகளின் சிறுவியாதிகளுக்கு மருத்துவம் பார்த்தல், மற்றும் பெரிய வியாதிகளை முளையிலேயே கிள்ளி எரிதல் மற்றும் சுகாதார கல்வியினை வழங்குவார்கள். இது அனைத்து வியாழக்கிழமைகளிலும் நடைபெறும். மே மாதத்தில் வரும் வியாழன்கள் தவிர அனைத்து வியாழன்களிலும் மருத்துவக் குழுவினர் பள்ளிக் குழந்தைகளை ஆய்வு செய்து கொண்டு இருப்பார்கள். இதற்கான முன்பயணத்திட்டம் அந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தாரால் தயாரிக்கப் பட்டு அதன் ஒரு பிரதி அந்த மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அவர்களுக்கும்,. பள்ளிக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் அனுப்பப்படும். அந்த முன் பயணத்திட்டம் எந்த இடர்பாடுகள் வந்தாலும் கண்டிப்பாக நிறைவேற்றப் படும். அப்படித்தான் நடந்து வருகிறது.
சில பள்ளிகளில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் இருப்பார்கள். வெகுசில பள்ளிகளில் சில ஆயிரம் மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரின் இதயத்தையும் ஸ்டெத்தாஸ் கோப் வைத்துப் பார்ப்பது என்பது முழு அர்பணிப்பு உள்ளவர்களாலேயே முடியும். காதில் அந்த ''கிளிப்'' பகுதியை வைத்து எடுத்து வைத்து எடுத்து கொஞ்சம் அந்த சிரமத்தை யோசித்துப் பாருங்கள். வேகமாகவும் செய்ய வேண்டும். அதே நேரத்தில் எந்த குழந்தையையும் தவரவிடுதல் கூடாது. இது கம்பிமேல் நடப்பது மாதிரி என்று சொன்னாலும் என்னைக் கேட்டால் கம்பி மேல் ஓடுவது போன்ற ஒரு செயல்.
முதல்நாளே பள்ளித் தலைமை ஆசிரியரின் நினைவு படுத்திவிட்டு உயரம் எடை பார்த்துவைத்து மறுநாள் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளையும் பரிசோதனை செய்ய வேண்டும். பல கிராமப் புறப்பள்ளிகளில் சரியான அறைவசதி இருக்காது, பெண்களை மறைவிடத்தில் வைத்து செய்ய வேண்டிய பரிசோதனைக்கும், வளரிளம் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய சுகாதார கல்விக்கும் தனியறையை கொடுத்துவிட்டு பெரும்பாலும் மரத்தடியில்தான் மருத்துவர்கள் அமர்ந்து தங்கள் பணியைச் செய்ய வேண்டிய சூழல் இருக்கும். அதிலும் சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதற்கு வசதி ஏற்படுத்தித் தருவதில் பெரிய சிரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் செய்ய நினைத்தாலும் அங்கு வசதிகள் இருக்காது. அதையும் தாண்டித்தான் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள்.
இது தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தார் மூலமாக நடைபெறுகிறது. நகரங்களில் குழந்தைகள் நலத்திற்கு தனி மருத்துவர் இருப்பார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அங்குள்ள மருத்துவரே இந்தப் பணியையும் அந்தப் பகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கு நேரிடையாகச் சென்று செய்வார். சில பள்ளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பதுண்டு, பேருந்து வசதிகளும் சொல்லிக் கொள்ளும் வகையில் இருக்காது, புற நோயாளிகள் பிரிவினைப் பார்த்து விட்டு பள்ளிக்குச் செல்வார் மருத்துவர்.
எல்லாப் பகுதிகளிலும் செய்திருந்தாலும் திண்டுக்கல்லில் செய்தது மிகவும் திட்டமிட்டு ஒரு குழந்தையைக் கூட தவற விடாவண்ணம் மிக அழகாகச் செய்து முடிக்கப் பட்ட செயல் . 2,24,089 குழந்தைகளை பரிசோதனை செய்ததில்
495 குழந்தைகள் பிறவி இருதயக் கோளாறுகளால் பாதிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.
அந்த பரிசோதனையில் முடிவில் கண்டறியப் பட்ட குழந்தைகள் அனைவரையும் தகுந்த மேல் பரிசோதனைக்கு அனுப்பி அறுவைச் சிகிச்சை தேவைப்படும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இளஞ்சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம் மூலமாகவும் விடுபட்ட சில குழந்தைகளுக்கு கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாகவும் சிறிதும் செலவில்லாமல் அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டுவிட்டன. மருத்துவ சிகிச்சை மட்டும் தேவைப் படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் தொடர் சிகிச்சை தரப் பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திலும் ஆரம்ப சுகாதார நிலைய அளவிலும் வட்டார அளவிலலும் இந்தக் குழந்தைகளின் உடல் நிலை ப் பற்றிய தகவலகள் விவாதிக்கப் படுகின்றன. களப் பணியாளர்கள் அந்தக் குழந்தைகள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது சிறப்புக் கவனத்தினை அந்தக் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றனர். இடைப்பட்ட காலத்தில் எந்தத் தொந்தரவு ஏற்பட்டாலும் தொலைபேசி வழியிலும், நேரடியாகவும் அந்தக் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை எளிதில் அணுகும் வகையில் வசதி ஏற்படுத்தப் பட்டிருக்கிறது,. இந்த வசதியாகப் பட்டது தமிழக அளவில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த வசதிகளை மிகத் துல்லியமாக செய்து வருகின்ற திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தினைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுதல்களை தெரிவியுங்களேன். தமிழக சுகாதார அமைப்பின் மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் வெளியிட்ட மலரில் திண்டுக்கல் துணை இயக்குநரின் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் மேலே தரப் பட்டுள்ளது. அந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அவரது கட்டுரை முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்
2 comments:
congrates
அந்தபுத்தகம் பிடிஎஃப் வடிவில் கிடைக்குமா?
Post a Comment