ஆத்தா, மகமாயி
அது ஒரு வெள்ளிக்கிழமை. ஒரு அரசு வாகனம் தன்னந்தனியே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. வலது பக்கம் வானம் பார்த்த பூமியில் ஒரு உருவம் ஓடி வந்துகொண்டிருந்தது. ஆம், அரசு வாகனத்தை நோக்கித்தான்......... "அது நம்ம லட்சுமிதானே" வாகனத்தில் இருந்த பெண்மணி சொன்னதும் உள்ளே ஒரு பரபரப்பு."என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" என்று கதறிக்கொண்டே வண்டியின் முன் மயங்கிச் சாய்ந்தாள் லட்சுமி
லட்சுமி 15 நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற பெண்மணி. மொத்தமே 25 கிலோ எடை மட்டுமே இருப்பார். ரத்தக்குறைபாடு காரணமாக குழந்தை பிறந்த உடன் 2யூனிட் ரத்தம் போட்டு இப்போது தான் வீடு திரும்பியவர். அவர் ஏன் ஓடி வர வேண்டும்? அவரது அன்பான கணவனுக்கு என்ன நேர்ந்தது.
இப்போது லட்சுமியின் மயக்கம் தெளிவிக்கப் பட்டிருந்தது. லட்சுமி உச்ச ஸ்தாயில் கதற ஆரம்பித்தார்." அக்கா என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" "உங்க காலுக்கு செருப்பா இருப்பேன். அவர விட்டுடுங்க. என் உயிர காப்பத்தின நீங்களே என் வாழ்க்கைய கெடுக்க பார்க்கறீங்களே. எஞ்சாமி ஒரு பாவமும் பண்ணலயே. இப்படி குடும்பத்த வேரருக்க பார்க்கறீங்களே. ஆத்தா உனக்கு மொட்டையடிச்சு கெடாவெட்டி பூக்குழி இறங்குறேன்" எல்லா வகையான வேண்டுதலையும் சொல்லிவிட்டு மயங்கி சாய்ந்தார் லட்சுமி.
அப்படி என்னதான் நேர்ந்தது லட்சுமியின் கணவனுக்கு. ஏன் இப்படி? அவன் லட்சுமியின் உயிரையே வைத்திருந்தான். பிரசவத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டு லட்சுமியைக் காப்பாற்றிய போது இவனும் செத்துதான் பிழைத்தான். அப்போதுதான் அந்தப்பகுதி சுகாதார செவிலியர் சொன்னார் "லட்சுமி இன்னொருமுறை கருத்தறித்தால் அவள் உயிருக்கு ஆபத்து. அவளுக்கு கு.க.செய்யக்கூட உடல் நிலை ஒத்துக்காது".
அ.ஆ.சு.நி.ல் உள்ள வட்டார விரிவாக்க கல்வியாளர், வ.சு. புள்ளியாளர், ப.சு.செ. கி.சு.செ., சு.ஆ. ஆகியோர் நவீன ஆண் குடும்பநல சிகிச்சை முறை பற்றிச்சொல்லி அவனை சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றபோது நடந்த சம்பவம்தான் இது. லட்சுமி கண்விழித்த உடன் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார். "லட்சுமிட்ட சொன்னா சம்மதிக்க மாட்டா, அதுனால நான் அவகிட்ட சொல்லல"வாய் திறந்தார் லட்சுமியின் கணவர்.
நடந்த சம்பவங்களில் நாங்கள் உறைந்துவிட்டோம். சில வயதான பணியாளர்கள் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டனர். லட்சுமி சம்மதித்த பின் கு.ந.சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அவர்களை வீட்டில் விட்டுவிட்டு திரும்பினோம்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை திருமணமான பெண்களீடமே ஆரம்பிக்கிறோம். நமது பெண்கள் கணவர் வீரியம் குறைந்தவர்(ஆண்மை நிறைந்திருந்தாலும்) என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குவதே ஆண் கு.ந. சிகிச்சை பரவாலாவதற்கு தடையாய் இருக்கிறது என்பதும் ஒரு உண்மைதான்
0 comments:
Post a Comment