அடடே' அரசு மருத்துவமனை! - துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையம்
'இது உங்கள் மருத்துவமனை. சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்...' - அரசு மருத்துவமனை சுவர்களில் வழக்கமாகத் தென்படும் வாசகம் இது! இதை நிஜமாகவே படுசீரியஸாகப் பின்பற்றும் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோவை மாவட்டம் துடியலூரில் இருப்பது சந்தோஷமான விஷயம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த ஆரம்ப சுகாதர நிலையம்தான், தமிழகத்திலேயே 'தி பெஸ்ட்' என அடித்துச் சொல்லுகிறார்கள் சுகாதாரத் துறையினர். சமீபத்தில், இந்த மருத்துவமனைக்கு விசிட் அடித்துச் சென்ற சுகாதாரத் துறைச் செயலாளரான சுப்புராஜ், சுத்தம் மற்றும் பணியாளர்களின் சுறுசுறுப்பைப் பாராட்டி கடிதம் அனுப்பி இருக்கிறார். மருத்துவமனையில் பிரசவத்துக்காக அட்மிட் ஆகியுள்ள அம்பிகா என்ற பெண்மணியிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்களுக்கு வசதி, வாய்ப்பு எதுவும் இல்லீங்க. தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க முடியாது. இங்க நல்லா பிரசவம் பார்க்குறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன். உண்மையிலே என்னை தங்கமா பார்த்துக்குறாங்க சார். எதுக்குமே பணம் கேட்காத இந்த இடத்துக்கு கடவுளா பார்த்துதான் என்னைய அனுப்பியிருக்கான்!'' என்றார் நெகிழ்ச்சியோடு. அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்று சுட்டிக்கட்டப்படும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அலுவலரான (பொறுப்பு) உமா மகேஸ்வரியை சந்தித்தோம். ''இன்னிக்கு இருக்குற தலைமுறையில் சுத்தம், சுகாதாரத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக் குறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் மாறித்தானே ஆகணும்! துடியலூர் சுகாதார நிலையத்துல முந்தி குப்பையாத்தான் இருந்துச்சு. அந்த ஏரியாவையே மாத்திக்காட்டணும்னு முடிவு பண்ணேன். போன வருஷம் அந்த சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கி இருந்த 1.75 லட்சம் ரூபாயை வெச்சுக்கிட்டு,உள்கட்டமைப்புகளை முழுசா மாத்தி அமைக்குற வேலையை ஆரம்பிச்சோம். இதைப் பாத்துட்டு, 'சூப்பர்'னு பாராட்டுன பொது சுகாதாரத் துறை உயரதிகாரிங்க, தேவையான அளவுக்கு பணம் ஒதுக்கீடு பண்ணினாங்க. டாக்டர்கிட்ட, நோயாளிங்க மனம்விட்டு ரிலாக்ஸா பேசுறதுக்காக, தனியார் மருத்துவமனையில கேபின் அமைச்சிருப்பாங்க. அதுமாதிரி, எங்க டாக்டர்களுக்கும் தனித்தனி கேபின் அமைச்சுக் கொடுத்தோம். மருந்து, மாத்திரைகளை தனித்தனியா பிரிச்சு வைக்குறதுக்காக பார்மஸியையும் மேம்படுத்தினோம். இங்கே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் பிரசவத்துக்கு அதிகளவுல வர்றாங்க. அவங்க கொண்டு வர்ற மாற்றுத் துணிகளைப் பத்திரப்படுத்தி வைக்கிறதுக்கு இடமே இல்ல. அதுக்காக தனித்தனி லாக்கர் வசதி செஞ்சு கொடுத்தோம். ஏழைப் பெண்களால கைக்குழந்தைக்கு போட்டுவிடுறதுக்கு டிரஸ் வாங்ககூட முடியாத நிலைமை இருக்கு. ரொம்பப் பேரோட வீடுகளோட நிலைமையும் மோசமா இருக்கு. அதனால, எங்க ஆரம்ப சுகாதார நிலையத்துல ஆண் குழந்தை பொறந்தா நீல நிறத்துல இருக்குற மெத்தையும் , பெண் குழந்தைன்னா பிங்க் கலர் மெத்தையும் இலவசமா கொடுக்குறோம். அந்த மெத்தைக்குள்ளே ஒரு செட் துணியும் இருக்கும். அந்த பச்சிளம் குழந்தைகளுக்காக கரூர்ல இருந்து ஆர்டர் பண்ணி மெத்தையை வாங்கிக் கொடுக்குறோம். பெண்கள் கருவுற்ற 25 வாரம் முதல் 30 வாரத்துக்குள்ள ஸ்கேன் செஞ்சு பாத்துடுறது நல்லது. அப்போத்தான் குழந்தை என்ன நிலையில வயித்துக்குள்ள இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். எங்ககிட்ட இருக்குறது 'ரெசல்யூஷன்' குறைவான ஸ்கேன் இயந்திரம். இதுல அத்தனை துல்லியமான ரிப்போர்ட் கிடைக்காது. அதுக்காக கோவை ஆர்.எஸ்.புரத்துல இருக்குற ஒரு தனியார் ஸ்கேன் சென்டர்ல உதவி கேட்டோம். அவங்களும் தயங்காம இலவசமா ஸ்கேன் எடுத்துக் கொடுக்குறாங்க. இதுவரைக்கும் ஆயிரத்து 300 ஸ்கேன் எடுத்துக்கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன். அதோட மதிப்பு மட்டும் 14 லட்சம் ரூபாய். இந்த மாதிரி நல்லவங்க உதவியும் சேர்ந்திருப்பதால்தான், தரமான சிகிச்சையை ஏழைகளுக்கும் கொடுக்க முடியுது. வாரந்தோறும் புதன்கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்கோம். குழந்தைகளைக் கொண்டு வர்ற பெற்றோருக்கு, தடுப்பூசி போடுற மையத்துல உட்கார்றதுக்குக்கூட இடவசதி இல்லாம இருந்துச்சு. அந்த இடத்துல இப்போ 30 பேரு உட்கார்ற அளவுக்கு இட வசதியை உருவாக்கிட்டோம். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் புறநோயாளிகள் 400 பேருக்கு மேல வர்றாங்க. அவங்க யாருமே வரிசையா வராததால, ஒரே தள்ளுமுள்ளு நிலைமை இருந்துச்சு. அந்தப் பிரச்னையை சரிசெய்யுறதுக்காக டோக்கன் சிஸ்டத்தை கொண்டு வந்திருக்கோம். புற நோயாளிகள் வந்தா, அவங்க கையில டோக்கனை கொடுத்துடுவோம். டோக்கன் நம்பரைக் கூப்பிட்டா மட்டும் டாக்டரைப் பார்க்குறதுக்கு அவங்க உள்ளே போவாங்க. இந்த முறையால தள்ளுமுள்ளு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைச்சது. தனியார் மருத்துவமனையில வேலைபார்க்குற நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருப்பாங்க. அதுமாதிரி, எங்களோட நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருக்கோம். தனியார் மருத்துவமனைக்கு நிகரா உள்கட்டமைப்பு வசதியை செய்யுறதுக்கு 4.50 லட்சம் ரூபாய்தான் செலவானது. சிசேரியன் மூலமா பிரசவம் பார்க்குறதுக்கு தேவையான ஆபரேஷன் தியேட்டர் மட்டும் இங்க இல்ல. இப்போ, அதுக்கும் நிதி ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க. கிராமங்கள்ல இருக்குற பெண்களுக்கு நல்ல மருத்துவ வசதியைக் கொடுக்கணும்ங்கிறதுதான் எங்களோட நோக்கம். நல்ல உள்ளங்களோட கரங்கள் எங்களோட இணைஞ்சா, கிராமப்புறங்கள்ல இன்னும் ஏராளமா மருத்துவ வசதியை எங்களால செஞ்சு கொடுக்க முடியும்!'' என்றார் நம்பிக்கையுடன். நல்ல உதாரணங்கள் எளிதில் பின்பற்றக் கூடியவை. ஆனால், அவற்றைச் செயல்படுத்த நல்ல மனிதர்களும் வேண்டுமேஅடடே' அரசு மருத்துவமனை! அசுத்தம் இல்லை... அமுக்கல் இல்லை...
--
நன்றி : ஜூனியர் விகடன்
2 comments:
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு நல்ல உதாரணம்.
அனுபவத்தையும், அனுபவித்தையும் எழுதுங்க படிக்கிறோம்....என்ன இது.. இந்த நாட்டிலே காரு வைச்சு கூட்டிக்கிட்டு போயி சுகமா பிரசவம் பார்த்து 6000=700=6700.பணம் கொடுத்து திரும்ப கொண்டு போய் விடுகிறோம்...காரு வாடகையும் கொடுக்கிறோம். இந்த அரசு சலுகைகளைப்பத்தி தொடர் பதிவு எழுத சொல்லுங்க...
Post a Comment