மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?
எம்.பி.பி.எஸ் மருத்துவர் கிராமத்திற்குச் செல்லும்போது அவர் சந்திக்கக் கூடிய அடுத்த கட்ட பிரச்சனை சான்றிதழ்கள் வழங்குவது. கடந்த சில ஆண்டுகள் அரசுப் பணிக்கு வந்த இளம் மருத்துவர்கள் கிராமத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் பகுதி இங்கே. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்னும்போது அவருக்கு உதவியாக எப்படியும் சிலர் அங்கே இருப்பார்கள். சமாளிக்க முடியாமல் போகும்போது காவல்துறையை உடனடியாக அழைத்துக் கொள்ளலாம். அரசு மருத்துவமனையில் பிரச்சனை செய்தால் கிடைக்கக்கூடிய தண்டனைகள் பற்றி அரசல்புரசலாக தெரியும் என்பதால் பிரச்சனை செய்பவர்கள் யாராவது சமாதானம் செய்யவந்தாலே அமைதியாகிச் சென்று விடுவார்கள்.
தனியாக கிளினிக் கிராமத்தில் ஆரம்பித்தால் இந்த பிரச்சனைகளை அந்த ஒரே ஒரு மனிதர்( எம்.பி.பி.எஸ் மருத்துவர்) மட்டுமே சந்தித்தாக வேண்டும். காவல்துறையினரை அழைக்க நினைத்தாலும் அதற்கு நேரம் கிடைக்காது. எல்லாம் முடிந்த பின்னர் காவல்துறையை அழைப்பதற்கு கிளினிக்கை இழுத்து மூடிவிட்டு வேறிடம் சென்று விடலாம் அல்லது அரசுப் பணியை மட்டும் பார்த்துக் கொண்டு அமைதியாக காலம் தள்ளிக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்து விடுவார்.
சான்றிதழ்களில் விடுப்புச் சான்றிதழ்கள் பெரிய பிரச்ச்னையாக இருக்காது. பணிகளில் இருப்பவர் லேசான வயிற்று வலி என்று சொல்லிவிட்டு ஒருவாரம் விடுப்பு வேண்டும் என்று கேட்பார். பொதுவாக விடுப்பு வழங்கும் அலுவலர் விடுப்புவழங்க தயாராக இருப்பதால் இந்த சான்றிதல் அடிப்படையில் விடுப்பு வழங்கி விடுவதால் பெரும்பாலும் பிரச்சனை வராது. மாணவர்களும் அதே நிலைதான்.
ஆனால் நோயாளியைப் பார்க்காமல் மருத்துவ சான்றிதழ் வழங்கி தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்ட மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த சான்றிதழ்கள் பற்றி பிறிதொரு இடுகையில் பார்க்கலாம்.
கிராமத்து மருத்துவர்களின் பிரச்சனைகளை மட்டும் இங்கு பார்க்கலாம். பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள்.
பிறப்புச் சான்றிதழ்கள்: இவை பிரசவம் பார்த்த மருத்துவர் பதிவு செய்ய வேண்டியது அவரின் கடமை என்பதால் இது ஒரு பிரச்சனை அல்ல.
இறப்புச் சான்றிதல்:
இயற்கை மரணத்திற்கு அந்த கிராமத்தில் இருக்கும் பிறப்பு இறப்பு பதிவாளர் பதிந்து விட்டால் அவரே கொடுத்துவிடுவார். ஆனால் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தால், அல்லது இளம் வயதில் மரணம் அடைந்துவிட்டால் மருத்துவ சான்றிதழுடன் வந்தால் தான் உடனே கொடுப்பதாக சொல்லிவிடுவார். ( மருத்துவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பிறப்பு இறப்பு பதிவாளர் சந்திக்கும் பிரச்சனைகளும் சளைத்தவை அல்ல).
நோயாளி இறந்தால் இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவருக்கு உண்டு. இதில் தவறான தகவல் கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் நோயாளியைப் பார்க்காமல் இறந்து போனவரை பற்றி அதுவும் அடக்கம் செய்யபின் எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்? ஆனால் நிர்பந்தம் கடுமையாக இருக்கும்.
சில நோயாளிகளை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மருத்துவர் பார்த்திருப்பார். மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்திருப்பார். அழைத்து சென்றிருந்தால் நோயாளி பிழைத்திருக்கக் கூடும். ஆனால் நோயாளியை அழைத்துச் செல்ல சூலம் பார்த்து , கிழமை பார்த்து - திங்கள் பயணம் திரும்பாப் பயணம்- காலம் தாழ்த்த நோயாளி இறந்திருப்பார்.
இப்போது சான்றிதழ் கேட்டு நிற்பார்கள். மருத்துவ சான்றிதழில் உடனடிக் காரணம் என்று என்ன போட முடியும்? அந்த நேரத்தில் என்ன நடந்திருக்கக்கூடும் என்று மருத்துவரால யூகித்தத்தான் முடியுமா? நீங்கள்தானே நோயாளியைப் ( சில நிமிடங்கள்தான் பார்த்திருப்பார்) பார்த்திருக்குறீர்கள் .அதனால் கொடுத்தே தீர வேண்டும் என்று நிர்பந்தப் படுத்துவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நேரங்களில் வெகு நாட்களாக படுத்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு குளிர்ந்த நீரால் குளிப்பாட்டுதல் நடக்கும். மிக்குளிர்ந்த நீர் தலைவழியாக வேகமாக ஊற்றப் படும்போது படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளி மரணம் அடைந்துவிடுவார்.( பிரேதப் பரிசோதனை செய்தால் இதை கண்டறிய முடியும்) இதில் தப்பி விட்டால் நோயாளிக்கு நூறு ஆயுசாம்.
இதற்கும் அடக்கம் செய்து சில நாட்கள் கழித்து வந்து கேட்டால் என்ன செய்ய முடியும்.
சில நேரங்களில் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடியவர்களுக்கு கரும காரியங்களை முடித்துவிட்டு ஊரின் முக்கிய சில வெள்ளை வேட்டிகளுடன் இறந்து போனதாக பதிவு செய்யச் செல்லும்போது அவர் மருத்துவ சான்றிதழ் கேட்டு அனுப்பி விடுவார். (சொத்துப் பிரச்சனைகளுக்கு உதவும் ) இங்கு கிராமத்தில் கிளினிக் வைத்திருக்கும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்தான் மாட்டுவார். இது போன்ற பிரச்சனைகளில் சாம பேத தான தண்ட வழிகள் பிரயோகம் ஆவது உண்டு.
கிராமத்து ஆட்களிடம் அடிவாங்க யார்தான் தயாராக இருப்பார்கள்.
வயதுச் சான்றிதழ்
முதியோர் உதவித் தொகை மாநில அரசால் வழங்கப் பட்டு வருகிறது. வயதானவர்களை சிரமப் படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தோடு அவரது வாய்மொழியாகச் சொல்லும் வயதும் உடல் தோற்றமும் ஒத்திருப்பதாக மருத்துவர் சான்றழித்தால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது.
கிராமத்தில் சில புரோக்கர்கள் இருப்பார்கள். அறியாமையால் இருக்கும் மக்களிடம் அரசு அலுவலகங்களில் வேலைகளை முடித்துத் தருவதாகக் கூறி, சில நேரங்களில் முடித்தும் கொடுத்து காசு பார்த்துவருவார்கள். கிராம மக்களுக்கு நகரங்களில் சுற்றுவதற்கு இவரது உதவி மிகவும் அத்தியாவசியமாக இருக்கும். இவர்களில் சிலருக்கு பணத் தேவை என்று வந்து விட்டால் அந்த ஊரில் உள்ள முதியவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி விட்டு வயதுச் சான்றிதழ்களுக்காக மருத்துவரிடம் அனுப்பி விடுவார்கள் . அதில் தகுதி உள்ளவர்களுக்கு சில மாதங்கள் கழித்துவரும். சிலர் காத்திருப்பு பட்டியலுக்குச் செல்வார்கள். சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருக்கும். ஆனால் புரோக்கருக்கு பணத்தேவை வரும்போதெல்லாம் விண்ணப்பங்கள் வழங்கப் படும். கையெழுத்திட்ட காரணத்தால் அந்த வயதானவர்கள் மருத்துவரிடம் வந்து திட்டிக் கொண்டே செல்வார்கள். மக்களின் அறியாமையே அயோக்கியர்களின் பலம். தினமும் திட்டு வாங்குவதற்கு பயந்து கொண்டே அந்த மருத்துவர் கிராமத்திலிருந்து எஸ்கேப்..,
அதே போல பதினெட்டு வயது ஆகாத பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு பதிவு செய்வதற்காகவும். அரசின் நலத்திட்டங்களில் உதவித் தொகை பெறுவதற்காகவும் பதினெட்டு வயது நிரம்பியதாக சான்று கேட்டும் மிரட்டல்களைச் சந்திக்க வேண்டி வரும். மருத்துவர் கொடுத்துவிட்டால் அவர் மேல் மைனர் பெண் கடத்தலுக்கு உதவியது, கற்பழிப்புக்கு உதவியது, குழந்தை திருமணத்தை ஆதரித்தது போன்ற பிரிவுகளில் வழக்குத் தொடர முடியும்.
அப்புறம் எங்கே அவர் அந்த ஊர் பக்கம் தலைவைத்துப் படுக்கப் போகிறார்?
இதையெல்லாம் சமாளித்து அந்த மருத்துவர் கிராமத்தில் தொடர்ச்சியாக கிளினிக் நடத்தி வருகிறாரா? அவருக்கு அடுத்து வரும் பிரச்சனைகள் அடுத்த இடுகையில்..,
தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்
8 comments:
நண்பரே கிராமசேவைதான் முக்கியம். இந்தமாதிரி சின்ன விசயங்கள விடுங்க. ஆனால் நல்ல பதிவு.
எங்கப்பாவுக்கு உடம்பு முடியலைன்னு ஒரு certificate தாங்க என்று ஒருத்தர் கேட்டதை நான் பார்த்திருக்கேன்.
Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/
தல இவ்வளவு கஷ்டம் இருக்கா.
புரியுது. இம்மாதிரி நிலையில கஷ்டம்தான் டாக்டர்கள் பாடு. ஆனாலும்..
ஒரு மருத்துவர் (நீங்களா?) எழுதின போலியோ சொட்டு மருந்து போடறப்போ, “வதந்தி பரப்புவோர்... போலீஸ்..” னு போர்ட்... பதிவு ஞாபகம் வருது!!
கிராமங்களில் டாக்டர்கள் மட்டுமல்ல, மற்ற அரசு ஊழியர்களும் பணிசெய்ய விரும்பாததற்கு, நகரவாழ்வுக்கு ஒப்பான வாழ்க்கைமுறை- பள்ளிகள், வசதிகள் இல்லாததும் ஒரு காரணம்தான் நினைக்கிறேன்.
//இந்தமாதிரி சின்ன விசயங்கள விடுங்க. //
கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக பதிவாவது உங்களுக்கு சின்ன விஷயமா?
குசும்புதாங்க உங்களுக்கு
//நகரவாழ்வுக்கு ஒப்பான வாழ்க்கைமுறை- பள்ளிகள், வசதிகள் இல்லாததும் ஒரு காரணம்தான் நினைக்கிறேன்.//
நல்ல தரமான பள்ளிகள் இருந்தாலே போதும். யாரையும் கிராமத்துக்கு அழைத்து வந்துவிடலாம். இன்று பெரும்பாலும் நல்ல சாலைகள் உள்ளன. கிராமத்திலிருந்து மிக எளிதில் வரமுடிகிறது. ஆனால் குழந்தைகளை ஆரம்ப கல்விக்காக வெகுதூரம் அனுப்ப யாருமே தயங்குவார்கள்.
கொடுக்கிற காசை வாங்கி கிட்டு கேட்கிற சர்டிபிக்கேட்டை கொடுத்தால் தான் நீங்க நல்ல டாக்டர். பத்து வருடத்திற்கு முந்தி நம்ம டாக்டர் இருக்கிற வரை எந்த பிரச்சனையும் இல்லை. இப்பத்தான் பிரச்சனை.இந்த டாக்டரை எப்படியாவது தூக்கியாகனும். இப்படிபட்ட பேச்சுக்களை கிராம புறங்களில் நானே கேட்டிருக்கிறேன். உங்க முன்னோர் செய்த விளைச்சலின் பயனை நீங்க தான் அறுவடை செய்யணும்.
//கொடுக்கிற காசை வாங்கி கிட்டு கேட்கிற சர்டிபிக்கேட்டை கொடுத்தால் தான் நீங்க நல்ல டாக்டர்.//
காசே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க சார்..,
//இந்த டாக்டரை எப்படியாவது தூக்கியாகனும்//
சொல்லுங்க., சொல்லுங்க.., எல்லோரும் கேட்கட்டும்
//உங்க முன்னோர் செய்த விளைச்சலின் பயனை நீங்க தான் அறுவடை செய்யணும்.//
இப்படியும் ஒரு இருக்கிறதா..,! எனக்கென்னவோ அந்தக் காலத்தில் இவ்வளவு கிரிமினல் சிந்தனைகள் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது.
ஏதோ ஒரு சிலர் சகட்டு மேனிக்கு சான்றிதழ் கொடுத்திருப்பார்கள். அதற்காக அதே அத்தனை பேரையும் எதிர்பார்த்து கொடுமை செய்தால் எப்படி ஊர்பக்கம் எட்டிப் பார்ப்பார்கள்.
உண்மையில் காசுக்காக சான்று கொடுத்தவர்களே தண்டணைக்கு உரியவர்கள். நேர்மையாக இருக்க நினைப்பவர்கள் அல்ல.., தவிரவும் இன்றைய சூழலில் அனைவருமே நல்ல பிம்பத்தை வைத்திருப்பதையே விரும்புகிறார்கள்..,
தயவு செய்து உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளவும்.இப்பவும் ,இருக்கிறார்கள்.
Post a Comment